வியாழன், 28 செப்டம்பர், 2023

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே போய்  விளையாட எத்தனை பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள்? என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் பெரும்பான்மையாக இருக்கிறது. இன்றைக்கு கிராமங்களில் கூட சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே போய் விளையாடப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. 

விளையாட்டு ஒன்றுதான் குழந்தைகளின் மன வலிமையைக் கூட்டும். உடலையும் மனதையும் வலிமையாக வைத்திருக்க வழிவகை செய்யும்.  சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிதாகக் குரல் கொடுக்கவைக்கும். கராத்தே கற்கும் குழந்தைகளின் மன வலிமையை கூர்ந்து கவனித்தால் தெரியும். அவர்கள் எதற்கும் அஞ்சாத மன தைரியத்துடன் பொது வெளியில் நடமாடுவார்கள். 

விளையாட்டு குழந்தைகளுக்கு வெற்றி, தோல்விகளை எப்படி கையாள்வது என்று எளிதில் கற்றுக்கொடுக்கும். 

என்பது தொண்ணூறு காலகட்டத்தில் பெற்ற பிள்ளைகளை விளக்கமாற்றால் துரத்தித் துரத்தி அடிக்கும் பெற்றோர்களே பெரும்பான்மையாக  இருந்தார்கள். என்னையெல்லாம் என் அம்மா விளக்குமாற்றால் அடித்ததில் ஈக்கி குச்சி முதுகில் நாலு இஞ்சு உள்ளேயே முறிஞ்சு போச்சு, ஆனாலும் வீட்டிலிருக்கும் யாரும் இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. முதுகில் முறிந்திருந்த குச்சியை என் நண்பர்கள் தான் ஊக்கு வைத்துக் குத்தி எடுத்து விட்டார்கள்... ரத்தம் வந்த அந்த இடத்தில் எச்சியை துப்பி மண்ணை அள்ளிப் பூசிவிட்டு எல்லாம் சரியாப் போயிரும், வாடா... சுடுகாட்டுக் கேணிக்கு குளிக்கப் போகலாம் என்று கூட்டிட்டுப் போனார்கள். 

'அந்த நாற்பதடிக் கிணற்றில் மேலிருந்து குதிக்கிறேன்னு தானே அடியே வாங்கினேன், மறுபடியும் அங்கேயே கூப்பிடுறானுங்களே' எனத் தோன்றினாலும் அடுத்தநொடியே அந்தக் கவலையின்றி நண்பர்களுடன் அதே கிணற்றில் குதித்துக் குளிச்சு விளையாடியதுண்டு. 

முதுகிலிருந்த காயம் சீல் பிடித்திருந்ததைப் பார்த்த என் அம்மா தூங்கிக் கொண்டிருக்கும் போது விளக்கெண்ணெய்யை எடுத்து கோழி இறகால் வருடி விட்ட போது....  என் அம்மாவின் கண்ணீர் விளக்கெண்ணெய்யை முந்திக்கொண்டு என் முதுகில் விழுந்தது. 

அந்த கண்ணீரிலிருந்து என் தவறுகளை நான் உணரத் தொடங்கி விட்டேன். இப்படித்தான் அன்றைக்குப் பெரும்பான்மையான பெற்றோர்களின் பிள்ளை வளர்ப்பு இருந்தது. பிள்ளைகள் சுய ஒழுக்கம், குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை என ஆரோக்கியமாக வளர்ந்தார். 

ஆனால் இன்று பெற்றோர்கள் பிள்ளைகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் போது, அவர்களுக்கு சகல வசதியும் செய்து கொடுத்த பிறகும் ஏன் குழந்தைகள் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்பதை என்றாவது நாம் சிந்தித்துப் பார்த்தோமா? 

குழந்தைகள் தவறு செய்துவிட்டால் தன்மானம் போய்விட்டதாகக் கருதி பிள்ளைகளை செத்துத் தொலை... ஏன் எங்க மானத்தை வாங்கிற....? என்று வீட்டை விட்டுத் துரத்தும் பெற்றோர்கள் இருந்த காலகட்டத்தில் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதில்லை, ஆனால் அவர்கள் வீட்டை விட்டு  சென்னை,மதுரை, கோயம்புத்தூர் என எங்காவது ஓடிப் போய் விடுவார்கள், நகரத்தில் தெருத் தெருவாக அலைந்து ஏதாவதொரு ஹோட்டலில் வேலை தேடி தாய் தந்தைகளுக்கு எதிராக தனிமையில் நின்று ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வளர்வார்கள், அப்படி வீட்டை விட்டு ஓடிப்போன குழந்தைகள் தான் இன்று பல நிறுவனங்களின் முதலாளியாக இருக்கிறார்கள். 

இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அன்றைய குழந்தைகள் ஓடி ஆடி விளையாடினார்கள், விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமானது, அன்றைய கல்வி முறை கூட விளையாட்டை மையமாக வைத்துத்தான் கல்வியைக்  கற்றுக் கொடுத்தது. இன்று விளையாட்டு மைதானங்கள் இல்லாத கல்விக் கூடங்களே அதிகமிருக்கின்றன. பாடத் திட்டங்களும் மாறிப்போச்சு... ஆசிரியர் மீதான மாணவர்களின் குறிப்பாக அவர்களின் பெற்றோரின் பார்வையும் மாறிப்போச்சு.

எங்களது காலகட்டத்தில் வளர்ந்த குழந்தைகள் விளையாடிய கோலி, பாண்டி, பல்லாங்குழி, சடுகுடு என எல்லா விளையாட்டுக்களும் யோசிக்கும் திறன், வேகம், நிதானம், தந்திரம், குழு ஒற்றுமை என இவற்றை வளர்க்கும் விளையாட்டாக தான் இருந்தது.

புடலங்காய்க்கு கல்லைக் கட்டி வளர்பது போல் குழந்தைகளை இன்றைய பெற்றோர்கள் வளர்க்க நினைக்கும்போது புடலங்காய் போல் குழந்தைகள் தன்னை முறித்துக் கொள்வது வருத்தத்திற்குரியது.


குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...