வியாழன், 25 ஜூன், 2020

அம்மாவின் முதல்லாம் ஆண்டு நினைவுநாள் மறைவு 26/06/2019. கலை 9.16


எழுபது, எண்பதுகளில் தென் மாவட்டங்களில்  நஞ்சை,புஞ்சை நிலப்பரப்பில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக அதிகமாகப்  பயிரிடப்பட்ட உணவு தானியங்களில் கேப்பை, கம்புக்கு பிரதான இடமுண்டு, அதற்கு ஒரு காரணமும் உண்டு. கம்பு பயிரிட அதிக நீர் தேவையிருக்காது,  விதை முளைக்கும் அளவிற்கு மண்ணில் ஈரப்பதம் இருந்தாலே போதும். கம்புப் பயிர்களுக்கு நடுவில் ஊடு பயிராக எள்ளையும் சேர்த்து விதைப்பதுண்டு.  இரண்டு பயிர்களும் ஒன்றுக்கொன்று இணையாகவே வளரக்கூடியது என்பதுடன் இரண்டுக்குமே தண்ணீரின் தேவை அதிகமிருக்காது என்பதால் இவ்வகை பயிரிடுதல் முறையைப் பின்பற்றினார்கள்.

அக்கால கட்டத்தில்  கிராமப் புறங்களில் ஒரு வீட்டிற்கு குறைந்தது ஏழெட்டுக் குழந்தைகள் இருப்பார்கள். எண்பதுகளில்  தமிழகம் மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்தது. மழையில்லாமல் தொடர்ந்து பல வருடங்கள் தண்ணீர்ப் பஞ்சமும் வறண்டபூமியுமாய் வாழ்க்கை நகர்ந்தது. தண்ணீரைத் தேடி அலைவதிலேயே அம்மக்களின் அன்றாட வாழ்க்கை கரைந்தோடியது எனலாம்.
என் வீட்டில் அக்கா தங்கைகள், அப்பா அம்மாவுடன் என்னையும் சேர்த்து மொத்தம் எழுபேர். அதுபோக நாய், ஆடுகள், மாடுகள் என ஜீவராசிகள் அதிகம். எங்களுடன் அவைகளும் சேர்ந்தே வாழ்வைக் கடத்த போராட வேண்டியதாகிப் போனது. எங்களையும், ஆடுமாடுகளையும்  காப்பாற்றி கரைசேர்த்ததில் என் அம்மாவுக்கும், சிறுதானியங்களில் கேல்வரகிற்கும் முக்கியப் பங்குண்டு.

கார்த்திகை மாதத்திலும் கடும் வரட்சியின் கோரப் பிடியில் மாட்டிக்கொண்டிருந்தது எங்கள் பகுதி... புல், பூண்டுகளெல்லாம் தற்கொலை செய்துகொண்டன... பனை மரங்களைத் தவிர்த்து மற்ற மறங்களெல்லாம் இலைகளை உதிர்த்து மொட்டை வெயிலில் மொட்டையாக நின்றன. அவற்றின் நிர்வாணத்தை பார்க்க  சகிக்காத வருணபகவான் ஓரிரவு முழுவதும் வடித்த கண்ணீரில் வாய் பிளந்து விரிவோடிக் கிடந்த வயல்வெளிகளெல்லாம் நீர் தேங்கி வறட்சியை விரட்டிய மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.  ஊரிலுள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் உலர்ந்து போயிருந்த மனசுக்குள் புத்துணர்ச்சி முளை விட்டது. நிலம் பல ஆண்டுகளாக தனக்குள் தேக்கி வைத்த வெப்பத்தை ஒரே இரவில் தனித்துக் கொண்டதை அடுத்த நாட்களில் அழகாய் முளைத்த அருகம்புல் மற்றும் கோரைப்புற்களின் வளர்ச்சி வழி உணர முடிந்தது.

பல நாட்களாக கண்ணில் தட்டுப்படாத கொக்குக்களெல்லாம் எங்கிருந்து வந்ததென்று யாருக்கும் தெரியவில்லை... வயல்வெளியெங்கும் வெள்ளை விரித்தது போல் காட்சியளித்ததுடன் பூச்சிகளைத் தேடிப் பிடித்து உண்டு மகிழ்ந்தன. பறவைகள் வருவதைப் பார்த்த மரங்களெல்லாம் மகிழ்ச்சியில் துளிர்க்கத் தொடங்கின... மொட்டை மரங்களெல்லாம் பச்சை மரங்களாகின.

போதிய நீரும் தீவனமும் கிடைக்காததால் விவசாயிகள் பலர் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் அவற்றை அடிமாட்டுக்கு விற்றது போக மீதமிருந்த ஆடு, மாடுகள் தண்ணீரைக்  கண்டதும் மண்டியிட்டுக் குடிப்பதைப் பார்க்கையில் இறைவனை வணங்கி தங்கள் நன்றியைத் தெரிவிப்பது போலிருந்தது. பல நாட்கள் மூடிக் கிடந்த கொல்லுப்பட்டறைகளில் கொல்லர்க்ள் துருத்திகள் வழி தங்கள் பங்கிற்கு நெருப்புக் கங்குகளை ஊதி தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள். பட்டறையைச் சுற்றிலும் முனை  தீட்டப்பட்ட கொழுக்கள் சூட்டைத் தணிக்கக் காத்துக் கிடந்தன. ஊரில் கிழடு கெட்டைகளெல்லாம் கட்டிய கோவணம் ஒதுங்க கலப்பைக்கு கயிறு திரிக்கத் தொடங்கியிருந்தார்கள்...

உழவு மாடு இல்லாதவர்கள் மாடு இருப்பவர்களுடன் நெருங்கிப் பாசத்தேடு பழகத் தொடங்குகிறார்கள்... அரைக் குறுக்கம்தான் அந்தியிலயாவது விதச்சுக் கொடுங்கன்னு விதைப் பொட்டியேடு வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள்... அந்தி விதைப்பு அவ்வளவு சுத்தப்படாது... காலை விதைப்புக்கும் அந்தி விதைப்புக்கும் அரைப்பிடி வித்தியாசமிருக்கும்.

தெரு நாய்களை தவிர்த்து வீட்டில் யாரையும் பார்க்க முடியாது....எல்லோரும் வயற்காட்டில் புல் பூண்டு பிடுங்கவும்... முள் வெட்டவும்... உழுகவும்... நெல் விதைக்கவுமாய் பரபரப்பாய்த் திரிந்த நேரம் அது. கிராமம் முழுவதும் எறும்பைப் போல் வயல் காட்டில் ஊர்ந்து கொண்டிருந்தது...

விதைத்த நெல்லெல்லாம் முளைத்து அடிக்கும் காற்றின் திசைக்கேற்ப நடனமாடுவதைப் பார்த்த விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கை பிறந்திருந்தது அவர்களின் மகிழ்வில் தெரிந்தது... இவ்வளவும் ஊருக்குள்... ஆனால் என் வீட்டுக்குள்..?

ஆம்... ஊரே மகிழ்ந்திருந்த வேளையில் என் வீடு மட்டும் மகிழ்விழந்து அமைதியாய் இருந்தது... காரணம் இதுதான்... விதைக்க எடுத்த விதை நெல்லுக்குள் ஒரு படி கேப்பை கை தவறிக் கொட்டிவிட்டது... அய்யோ இனி என்ன செய்வதென்று தெரியாமல் என் அம்மாவிற்கு கால் கையெல்லாம் நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விட்டது.  என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க...  அப்பா திட்டப் போறார்... சீக்கிரமா எடுங்க என்றேன். அம்மாவால்  கொழித்துப் பொறக்கியெடுக்க நேரமில்லை... வயலில் ஏர் உழுதுகொண்டிருக்கிறது. உடனே விதைத்தாக வேண்டிய கட்டாயம். இப்பொழுது இந்த மாதிரி ஆகிவிட்டதே....! என அம்மா விட்ட கண்ணீரை அவரின் சேலை முந்தானை தாங்கிக் கொண்டது. என்னால் ஆறுதலோ தேறுதலோ சொல்ல முடியவில்லை... வயதும் இல்லை.

சரி என்ன ஆனாலும் பரவாயில்லை, களையெடுக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என அப்படியே விதை நெல்லை என்னிடம் அம்மா கொடுத்துவிட்டார்... விதை நெல் தவறிக் கொட்டிவிட்டால் சகுனம் சரியில்லை என்று முன்னொருநாள் அப்பாவின் சட்டக்கம்பு  புகட்டிய பாடம் நினைவில் வர பொறுப்பாக பெட்டியை பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வயலை நோக்கிப் பயணித்தேன்.

விதைத்து முடித்துவிட்டு வரப்பில் வந்து விதைப் பொட்டியைத் தட்டிப் பார்த்த  அப்பாவிற்கு நடந்த விபரீதம் புரிந்துவிட்டது...!

மாடும், அப்பாவும், உழுத களைப்பில் வீடு வருவதைப் பார்த்த என் அம்மாவின் முகத்தில் இருள் அப்பியிருந்தது, வேலியோரமாக வைத்திருந்த தண்ணித் தொட்டியில் இரண்டு மாடும் தண்ணீர் குடிக்க, என் அப்பா குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா... என என் அம்மாவை அதட்டினார்....!

என்னைப் பார்த்து என் அப்பா.... உங்க ஆத்தாளுக்கு அறிவுமில்லை ஒண்ணுமில்லை... நெல்லுக்குள் யாரவது கேப்பையைக் கலந்து விதைப்பாங்களா?  என்ற கோபத்தோடு சொல்லிவிட்டு..குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டா என்றார், என் அம்மா கரைத்துக் கொடுத்த ஒரு செம்பு கம்மங்கஞ்சித் தண்ணியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு அம்மாவை நோக்கி செம்பைத் தூக்கி வீச...! அம்மா சத்தமில்லாமல் செம்பை எடுத்துக் கொண்டு நான் என்னசெய்யுறது... என்று முனங்கியபடியே குனிந்து வீட்டிற்குள் போனார். அப்பாவோ பல காலம் காத்துக் கெடந்து பண்ணின வெவசாயத்த உங்காத்தா மொத்தமாக் கெடுத்துட்டா...! துப்புக்கெட்ட சிறிக்கி...  என வார்த்தைகளால் வசை பாடத் தொடங்கிவிட்டார்...!

ஒருநாள் மழையோடு சரி... மீண்டும் வெயில் முகம்தான்... வருணபகவான் ஏறக்கட்ட, ஏர்க்கட்டிய வயல்களில் காற்றில் நடனமாடிய பயிர்கள் எல்லாம் தண்ணீர் கானாது வாடத் தொடங்கின. ஊரெல்லாம் இலவு வீட்டடைப் போல் இருக்கையில் என் வீட்டில் மட்டும் புன்னகை பூக்கத் தொடங்கியது....! நெற்பயிர்களெல்லாம் வாட, பயிர்களுக்குள் இருந்த கேப்பை செழித்து வளரத் தொடங்கியது... துப்புக்கெட்ட சிறிக்கி என்று திட்டிய என் அப்பா மெல்லப் புன்னகைக்கத் தொடங்கினார்... ஊரே எங்கள் தோட்டத்தைப் பார்த்து வாயைப் பிளந்தது...!

வெயில் அடிக்க, அடிக்க கேப்பை துளித்து கதிர் மடியத் தொடங்கியது.

அந்த வருடத்திற்குப் பிறகு மீண்டும் இரண்டு ஆண்டுகள் மழையேதும் இல்லாமல் என் கிராமத்து மக்கள் வாட... என் வீட்டில் மூட்டை மூட்டையாய் கேப்பை அடுக்கி வைக்கப்பட்டு வீடே நிறைந்திருந்தது. வீட்டில் மூன்று வேலையும் கூழ் பானையும் நிறைந்திருந்தது... கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுக்கலென்று யார் கேட்டாலும் ஒரு உருண்டை கூழைக் கரைத்து கொடுப்பார் என் அம்மா..... அப்பாவுக்கு துப்புக்கெட்ட சிறுக்கியாய் இருந்த என் அம்மா ஊருக்கு மகராசியானாள்...!

எங்கள் வீட்டிற்கு வந்தால் கூழ் குடிக்கலாம் என்ற நிலைக்கு எங்கள் ஊர் உறவுகள் வந்து விட்டார்கள். கடும் வறட்சி பஞ்சத்தில் ஆடு, மாடுகளோடு எங்களையும் காப்பாற்றிக் கரை சேர்த்த கூழுமில்லை... என் அம்மாவுமில்லை... அடுத்தவேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியாத காலத்தில் எங்களைச் செழுமையாக வளர்த்தெடுத்த என் அம்மாவுக்கு ஒருவேளை உணவை உட்கார வைத்துக் கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சிகளுடன் தவிக்கிறேன்...!
அம்மா... உங்கள் குழந்தைகள் உங்களை மனதில் சுமந்து, நினைவில் நிறுத்தி முதலாம் ஆண்டு நினைவு நாளை துயரத்துடன் எதிர் கொள்கிறோம்... நினைவுகளில் நீங்கள் எப்போதும் எங்களுடன்...!

உங்களைப் பிறிந்த துயரத்தில் உங்கள் குழந்தைகள்.
வைஜெயந்தி மாலா, சசிக்குமார்,சாந்தி,சசிக்கலா,சசிரேகா.

“உன்னைப் பிறிந்த நாள்முதல் இன்றுவரை,உன் அன்புக்கு இணையாய் யாருமில்லை, உனது பாசத்திற்கு ஏங்கும் எனது ஏக்கங்கள் உணரமுடியாத வலியாய் என்னைக் கொல்கிறது..! இன்று உனது நினைவு நாள் (26/06/2020) ஆனால் எனது உள்ளம் நினைவஞ்சலி செலுத்த மறுக்கிறது! நீ வேண்டும், கண்கலங்கி நான் வருகையில் முகம் துடைக்கும் உன் முந்தானை வேண்டும், பரட்டை தலையுடன் நான் வருகையில் தலை சீவும் உன் விரல் வேண்டும்,
"இப்பொழுது நான் வர வழியேதுமில்லை அன்னையே! நீ வா... நீ வா”

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...