ஞாயிறு, 20 ஜனவரி, 2013

திருமண முறிவுகள்


இந்தியாவில் அண்மைக்காலங்களில் திருமண முறிவுகள் பெருகி வருகின்றன.

1980களில் இந்திய தலைநகர் புதுடில்லியில் விவாகரத்து வழக்குகளை கவனிக்க 2 நீதிமன்றங்கள் தான்
இருந்தன. இன்று 16 நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளைக் கவனிக்க இருந்தும் போதவில்லை.
மராத்திய மாநிலத்தில் ஓராண்டில் சட்டப்படி மணமுறிவு பெற்றவர்கள் 43000.
அதில் மும்பையில் 20,000, புனேயில் 15000.

கல்யாணமாலை இணைய தளத்தில் இரண்டாவது திருமணத்திற்கான
தனிப்பிரிவு வந்தாகி பலவருடங்கள் ஆகிவிட்டது. secondshaadi.com <http://secondshaadi.com>
பிரிவில் இத்திருமணத்திற்குப் பதிவு செய்திருப்பவர்களின் வயது சற்றொப்ப 25 லிருந்து 35க்குள் இருப்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

மே 08, 2012 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் காதல் திருமணங்களில்
மணமுறிவுகளின் விகிதாச்சாரம் அதிகமாக இருப்பதாக சொல்கிறது.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருக்கும் மணமுறிவுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மண
முறிவுகளின் விகிதாச்சாரம் 1.1% தான் . அமெரிக்காவில்
50% மணமுறிவுகள். அமெரிக்காவைப் பொறுத்தவரை வெள்ளைக்கார தம்பதிகளின் மணமுறிவுகளை
விட ஆப்பிரிக்க அமெரிக்கன் (கறுப்பினம்)
வெள்ளைக்கார அமெரிக்க தம்பதியரின் மணமுறிவு விகிதமே அதிகம்.
ஆப்பிரிக்கன் அமெரிக்கன் 32%, வெள்ளைக்கார தம்பதியர் 21%, .
ஆப்பிரிக்க இனத்தவரின் குடும்ப பின்னணியும் அதன் காரணமாக அவர்களிடம்
நிலவும் கலாச்சார வேறுபாடுகளுமே இந்த மணமுறிவுகளுக்கு காரணம் எனலாம். ஆனால்
இந்தியாவில் மணமுறிவுகளுக்கு காரணம் இங்கு நிலவும் சாதி,  மத வேறுபாடுகளா? இந்தக் கேள்வி எழுகிறது.
ஆனால் இந்தப் பின்னணியில் மணமுறிவுகள் குறித்த ஆய்வுகள் இல்லை.
 எனவே இம்மாதிரியான முடிவுகளுக்கு வருவது சாத்தியமில்லை.
சாதி மத வேறுபாடுகளைக் கடந்து இந்திய சமூகத்தின் குடும்ப பின்னணியும் அதன் கலாச்சார கட்டமைப்பும் அதிகமான வேறுபாடுகள் கொண்டதாக இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
.
1979களில் சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதர மாற்றங்களுக்குப் பிறகே அங்கே
மணமுறிவுகள் பெருகியது. 2010ல் சீனாவில் 1.2 மில்லியன் திருமணங்கள் நடந்தன ஆனால்
அதை விட அதிகமாக 1.96 மில்லியன் மணமுறிவுகள் நடந்தன. அதாவது ஒரு நாளுக்கு 5000
தம்பதியர் விவாகரத்துப் பெறுகிறார்கள். விவாகரத்தையும் விருந்து வைத்துக் கொண்டாடி
விடைபெற்றுக்கொள்கிறார்கள். இம்மாதிரியான விவாகரத்து விருந்துகள்
divorce ceremony மூலம் திருமண உறவில் பிரிந்தவர்கள் விரோத மனப்பான்மையுடன் இல்லாமல்
நட்பாக இருக்கவும் காதலை மதிக்கவும் கற்றுக்கொடுப்பதாக காரணமும்
சொல்கிறார்கள். சீன இளம் தலைமுறையிடம் பெருகி இருக்கும் மாத வருமானமே இதற்கெல்லாம் காரணம் என்று சீன அரசின் மக்கள் துறை ஒத்துக்கொள்கிறது சீனாவில் மணமுறிவுக்கான சட்டங்கள் மிகவும் எளிதாக இருப்பதும் அரைமணி நேரத்தில் படிவங்களை முறையாக நிரப்பிக்கொடுப்பதன் மூலம் விவாகரத்து பெற்றுவிடும் எளிய
முறையே காரணம் என்று அங்கிருக்கும் பத்திரிகைகள் அடிக்கடி எழுதிக்குவிக்கின்றன.
இந்தியக் குடும்பத்தில் மணமுறிவுக்கு முன்னும் பின்னும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது. கீழ்கண்ட அட்டவணையைப் பாருங்கள்.
(India )
ஏன்?


இந்தக் கேள்வி விசவரூபம் எடுக்கிறது. காதல் தோல்வி, பணப்பிரச்சனை இத்தியாதி காரணங்களுக்காக தற்கொலை செய்துக் கொள்ளும் ஆண்களை விட குடும்ப பிரச்சனைகளுக்காக தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். ஒவ்வொரு 9 நிமிடத்திலும் 9 திருமணமான ஆண்
தற்கொலை செய்துக் கொள்வதாக சொல்கிறார் இந்தியக் குடும்ப பாதுகாப்பு
அமைப்பைச் சார்ந்த விரக் துலியா (Virag dhulia , Save Indian Family Foundation)
2009ல் 18000 ஆண்கள் கணவன் மனைவி பிரச்சனைக் காரணமாக தற்கொலை
செய்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்கொலை செய்து கொண்ட பெண்களை விட 7000 அதிகமாகும்.
திருமணமாகி 7 வருடங்களுக்குள் மனைவி இறந்தாலோ தற்கொலை செய்து கொண்டாலோ கணவனும் அவன் தாய் தந்தை உடன்பிறப்புகளும் குற்றம் செய்தவர்களாகவே கருதப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வழிவகுத்திருக்கும் இந்திய சட்டப்பிரிவு 498A தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஆண்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
.
வரதட்சணைக் கொடுமை என்று சொல்லி கணவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது மிகவும் எளிதாக இருந்ததால்.
ஒரு சில பெண்கள் அச்சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தியது உண்மைதான்.
ஆனால் இரண்டொரு வருடங்களில் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை
தவறுதலாக பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ஆனால் இந்தச் சட்ட விதிகளுக்கு எல்லாம்  அப்பாற்பட்டு ஆணுக்குள் இருக்கும்
அதிகாரபீடமே ஆணைத் தற்கொலைக்கு தள்ளுகிறது என்பதை ஆண்கள்
ஒத்துக்கொள்வதில்லை.
அல்லது அப்படியான ஒரு பார்வையை விலக்கி வைக்கவே விரும்புகிறார்கள்
மனைவியைக் கைநீட்டி அடிக்காத ஆண்கள் ஆபூர்வம்.
அதிலும் இப்போதெல்லாம் கோபத்தில் காதலியின் கன்னத்தில் ஓங்கி அறையும் காதலனைக் காட்டாத தொலைக்காட்சி தொடர்கள் ஏதாவது ஒலிபரப்பாகின்றதா? என்று தேடித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

இப்படியாக ஒரு பக்கம் ஆணின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தும் காட்சிகள்.

பெண்கள் பக்கமோ பொருளாதர ரீதியாக தனித்து வாழ முடியும் என்ற நிலை.
பெண் விவாகரத்து பெற்றால் கணவன் தான் கட்டாயம் கொடுமை செய்தவனாக இருந்திருக்க வேண்டும் என்ற ஒரு எழுதாதச் சட்டம் ஒரு வகையில் பெண்ணுக்குச் சாதகமாகவும் ஆணுக்கு ஆபத்தானதாகவும் அமைந்துள்ளது.

விவாகரத்து என்பது வன்கொடுமைகளுக்கு அப்பால் கணவன் மனைவிக்கு
நடுவில் ஒத்துப்போக முடியாத நிலையில் பிரிந்து வாழ எடுத்த முடிவு என்ற
நிலை இந்தியாவில் வரவில்லை.
பிறிதொரு முக்கியமான காரணம், அதிகமாக நம் சமூகவியலார் கவனம் செலுத்த வேண்டிய காரணிகளில் ஒன்றாக இருப்பது இன்றைய திருமண
உறவில் இணையும் தம்பதியர் கூட்டுக்குடும்பத்தை அறியாதவர்கள்.
ஆணும் பெண்ணும் பெரும்பாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரே
பிள்ளையாக இருப்பதையும் பார்க்கலாம். ஒரே பிள்ளையாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும்
அவ்வளவு எளிதில் வருவதில்லை. அதிகமான விவாகரத்துகளுக்கு வலுவான
காரணங்கள் இருக்கிறதா என்பதை ஆராயும் போது அதிர்ச்சிகரமான
சில காரணங்கள் தெரியவருகின்றன.

விவாகரத்து மூலம் ஏற்படும் மன அழுத்தத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது பெண்ணின் இயல்பாக இருப்பது போல ஆணுக்கு இருப்பதில்லை.மன உணர்வுகளை நெருங்கியவர்களிடன் பகிர்ந்து கொள்வதில் ஆணுக்கு அதிகமான தயக்கம் இருப்பதாக உளவியல் சொல்கிறது.
ஏமாற்றப்படுவது, உணர்வு ரீதியாக காயப்படுவது, உடல் ரீதியாக வன்கொடுமைக்குள்ளாவது இத்தியாதி எல்லாம் பெண்ணுக்குப் பழக்கப்பட்டது. துன்பங்களுக்கு நடுவில் வாழ்வதற்கு நாணலைப் போல பெண் பழகி இருக்கிறாள். ஆண் அதிலும் குடும்ப உறவில் அந்த நிலையில் ஆட்டம் காணும் போது சரிந்து விழுகிறான்,  ஆண்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகி இருப்பதற்கு இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

மணமுறிவை எதிர்கொள்வதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருபாலாருக்குமே
பிரச்சனைகள் ஒவ்வொரு விதத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அதை அவர்கள் எதிர்கொள்வதில்
இருக்கும் வேறுபாடுகளே ஆணைத் தற்கொலைக்குத்
தள்ளுவதற்கான வலுவானக் காரணமாக இருக்கிறது எனலாம்.


கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...