சனி, 20 அக்டோபர், 2012

அவள் நினைவு..



இலைகளில்லா
என் தோட்டத்துச் செடிகளில்
கிளையுதிர் காலம்
இன்னும் நிற்கவே இல்லை.

அவளோடு வாழ்ந்த நினைவுகள்
கனவுகளாகிப் போனதால்,
கனவுகளிலேனும்
அவளுடன் வாழும் கனவே
இப்போதென்
கலையாத கனவாய்!

எங்கள் நட்பு


அடித்தல் பிடித்தல் இல்லாத அன்பானது எங்கள் நட்பு
நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது எங்கள் நட்பு
துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது எங்கள் நட்பு
மடித்தாலும் மடங்காத மரமானது எங்கள் நட்பு
கூட்டலும் கழித்தலும் பார்க்காத பெருக்கலாம் எங்கள் நட்பு

வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் எங்கள் நட்பு
திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கிறது எங்கள் நட்பு
பட்டறிவுப் பட்டம் பெற்றுதரும் எங்கள் நட்பு
வானோடு நிலவுபோல் வாழ்வதே எங்கள் நட்பு
தேனோடு பால்போல் தெவிட்டாத எங்கள் நட்பு
வாசமலராய் என்றும் மணக்கும்
வீசும் தென்றலாய் விலகாது நிற்கும்
பேசிப் பழகினால் பாசம் புரியும்
நேசித்து பார்த்தால் எங்கள் நெருக்கம் தெரியும்.

புதன், 17 அக்டோபர், 2012

அப்பாவின் நினைவுகள்

காயங்களைக்
காலங்கள் ஆற்றிவிடும் என்பது
மெய் என்று
எல்லோரையும் போல்
நம்பிக்கொண்டிருந்தேன்.

பத்து வருடங்கள்
என்கிறது நாள்காட்டி,
நூறு வருடங்களின்
பொதி சுமந்த பாரம் நெஞ்சில்.


வருடங்களின் கரைதல்
துயரங்களின்
கரையேறுதலை இன்னும்
கற்றுத் தரவில்லை.

இன்றும் கிராமத்து
ஓட்டு வீட்டின் முற்றங்களில்
அப்பாவின் சுவடுகளை
நினைவுக் கைகள்
தழுவத் துடிக்கின்றன.

என்
தொலைபேசி அழைப்பில்
பதறியடித்து ஓடிவந்த
பாதச் சுவடுகளல்லவா அவை !

பழுதடைந்த படிகளில்
பாதம் பதிக்கையில்
உள்ளறையிலிருந்து
பரவசத்துடன் ஓடிவருகிறது
அப்பாவின் குரல்.

எனக்குப் பசியெடுப்பதை
என்
வயிறு அறியும் முன்
அறிந்த குரலல்லவா ?

விரல் பிடித்து நடந்த
வரப்புகளில்
அப்பாவின் மூச்சுக்காற்றை
ஆழமாய் இழுத்துத்
தேடித் தேய்கிறது நுரையீரல்.

மரணப் படுக்கைக்கு முன் என்
வருகை தேடி
பாரம் இழுத்துகொண்டிருக்கும்  மூச்சல்லவா !

கொடுத்து அனுப்பிய பத்து ருபாய் நோட்டில்
இன்னும்
மிச்சமிருக்கும் கைரேகையை
விரல்கள்
அனிச்சைச் செயலாய்
அரவணைத்துக் கசிகின்றன.
 
பாதம் தொட்டு
அருகிருக்கத் தவித்து
குதிக்கும் கண்ணீரும்

வெயில்க் கழுகுகள்
கொத்திக் கிழிக்கும்
நகரத்து வியர்வை வீதிகளிலும்
அப்பாவின் குளிர்ச்சியை
மனம்
மீண்டெடுத்துத் தவிக்கிறது.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

என் சிரிப்பு

என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.
அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.
பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.
எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.
மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.
தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்

திங்கள், 15 அக்டோபர், 2012

உறவுகள் எதை நோக்கி பயணிக்கிறது!



மனித உறவுகள் எதை நோக்கி பயணிக்கிறது!


காலை முதல் மாலை வரை வேலை, வேலை, என இயந்திர வாழ்க்கை, மாத இலக்கு நோக்கி பயணம் என இக்கால மக்களிடையே நீரு பூத்த நெருப்பாகிப் போன மங்கிப் போன மனித உறவுகளே இன்றைய தலையாய பிரச்சனை, மாற்றம் காணப்பட வேண்டிய, தீர்வு தேடப்பட வேண்டியஒன்று. கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்ட, பணப்பையிலே புகைப்படமாக பதிந்து போய்விட்ட மனித உறவுகளை பற்றியதே இந்த பதிப்பு.








நாள்தோறும் செய்தித்தாள்களில் உறவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன.

சொத்து தகராறு அண்ணனை கொன்ற தம்பி தலைமறைவு!

சொத்து தகராறு அண்ணனை கொன்ற தம்பி தலைமறைவு!

வேலை வாங்கித் தராததால் தந்தை கொலை! மகன் வெறிச் செயல்!!

தந்தையின் பிணத்தை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு! பாகப்பிரிவினையில் வஞ்சகம் செய்ததால் மகன் வீட்டைப் பூட்டிச் சென்றார்!

கணவனை கொன்ற மனைவி!

மனைவியை கொலை செய்த கணவன்!

இவ்வாறு பல செய்திகளை தினந்தோறும் ஏதாவது செய்தி தாளில் படித்து கொண்டேதான் இருக்கிறோம், மொத்தத்தில் இந்த உறவுகள் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது. முறிக்கப்படுகிறது. பல நேரங்களில் இது கொலைகளிலும் சென்று முடிகிறது.

உறவுகள் ஒருவரை ஒருவர் அடிமை செய்யவே பார்கிறது அது அறிந்தோ அறியாமலோ நடக்கிறது. . நாம் சொல்வதை செய்யவேண்டும், என்ற எண்ணங்கலால் அவை அன்பு செய்வதாக எண்ணி மற்றவர்களை அடிமை செய்யவே முற்படுகிறது. கருத்து வேறுபாடுகள் இச்செயல்களால் உறவுகளை கருவறுத்து விடுகிறது.

ஒவ்வொருவருக்கும் எல்லை உண்டு . அந்த எல்லைகள் தாண்டபடும் பொழுது அதன் தன்மையை பொறுத்து கருத்து வேறுபாடுகள், சண்டைகள், புறகணிப்புகள் போன்ற செயல்கள் நடக்கிறது, இதை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூட சொல்லலாம்.


மனிதகுலம் அறிவு வளர்ச்சிப் பெற்றதிலிருந்து உறவுகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்ப வரையறுக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், புராதன காலத்தில் இருந்த மனித உறவுகளுக்கும், தற்போதைய நவீன காலத்தில் இருக்கும் மனித உறவுகளுக்கும் இடையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.சமூக வளர்ச்சிப் போக்கிற்கேற்ப இந்த உறவுகள் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது அறிவியல் வளர்ச்சியில் மனிதன் தன்னை உயர்த்திகொன்டாலும் மனதளவில் அழிந்துகொண்டே வருகிறான்.


இன்று மனிதனிடையே போட்டி, பொறாமை, சகமனிதனை இழிவுபடுத்தும் தன்மை ஆகியவை விஞ்சி, ஆறறிவு படைத்த மனிதனை, ஐந்தறிவு- துணையை தேட வைத்துள்ளன. ஐந்தறிவு ஜீவன்கள் காட்டும் சுயநலமற்ற உணர்ச்சிகளும், அன்பான பார்வையும் எந்தவொரு மனிதனிடமிருந்தும் பெறப்படுவதில்லை. கால வெள்ளத்தில் பயணிக்க எந்தவொரு மனிதனுக்கும்,


எந்தவொரு சூழ்நிலையிலும், இன்னொரு மனிதனின் துணை அவசியம். அவ்வாறான துணையை பெற, பிறரையும் தன்னைப் போல் பாவிக்கும் பண்பு அவசியம் வளரவேண்டும்

புதன், 10 அக்டோபர், 2012

வாழ்க்கை என்பது என்ன?



வாழ்க்கை என்பது என்ன?

 - உயிரோடு இருப்பதா?
- மகிழ்ச்சியாக இருப்பதா?
- பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
- தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
- வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
- தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
- தத்துவங்களின் அணிவகுப்பா?

…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான். இல்லயென்றால் மன நிலை பாதிப்பிற்க்கு உள்ளாகுகிறான்.


இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.

தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.

அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட்டான் என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனையும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.

துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.

நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?

உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா? என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.

இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.

நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.

- நம்மைவிட உடலில் பலசாலி யானை
- நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
- நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

அன்பு

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.

சிலரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோஷ உணர்வு ஏற்படுகிறது.

அன்பு பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.

அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.

நாம் எல்லோருமே தினசரி பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். அதற்கென பல நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.

பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள்தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். இரண்டரை மணி நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தோஷங்களைப் பார்த்து சந்தோஷப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாக பழகிவிடுகிறது. அதேபோல்தான் கோயில்களிலும், “எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்“ என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சனை நம்மிடமிருந்து இறக்கி விடுகிறோம். 

மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.

அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம்? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?

மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.
காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம் ?

உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.

எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு.

சனி, 6 அக்டோபர், 2012

தாய் வீடு


தாய் வீடு 
எனக்கொரு வீடு இருந்தது..
அங்கே எனக்கொரு போர்வை
எனக்கென ஒரு தலையணை
எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது..
என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன்..!
அழுதிருக்கிறேன்..!

தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்..!

அம்மா என் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சியிருக்கிறாள்..
அந்த வீடுவிட்டு வருகையில்..!அழுத கண்ணீரையும்
இன்னும் பத்திரப்படுத்திக்கொண்டேயிருக்கிறது அந்த வீடு…!

ஏங்கி அழுது என் கால்மிதிபடும் நாளெதிர்பார்த்து
என் நிம்மதியை இரைஞ்சிய படியே வாழ்கிறது…!
என் வரவை எதிர்பார்த்து நான்கு கைகள் காத்திருக்கிறது..!
புதைபட்ட அவ் வீட்டின் இணக்கத்தை இடைவெளிப் படுத்திய
இச்சமூகத்தை மனம்விட்டு சபித்தால் தானென்ன??


புதன், 3 அக்டோபர், 2012

பொருளை தேடி....

மனித வாழ்வு இன்று பணம் பணம் என்று பொருளை தேடுவதில் ஓடி முடிந்துவிடுகிறது. வாழ்வதற்கு பணம் தேவை என்பது போய் பணம் தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இப்படி பணம் பின்னே மட்டும் ஓடி வாழ்வின் சந்தோசங்களை தொலைத்தவர்கள் பலர். 

இங்கே தேடியது போதாது என்று நாடுவிட்டு கடல் தாண்டி பொருளை தேடி ஓடுபவர்கள் இறுதியில் கண்டது என்ன ?? சிலர் கடல் தாண்டி சென்றவர்கள் பொருளுக்காக செல்கிறார்கள், தங்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற செல்கிறார்கள்...ஆனால் தன் குடும்பத்தை விட்டு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் நபர்களின் நிலைமையை கேட்டால் கண்ணில் நீரை வரவழைக்கும்.  இந்த மனித வாழ்வை தன் பெற்றோர், மனைவி, குழந்தை, உடன்பிறந்தோர் இவர்களுடன் கழிக்க வழியின்றி போய் விடுகிறார்கள். 

திருமணம் முடித்து சிறிது நாளில் மனைவியை பிரிந்து வெளிநாடு சென்றவர்கள் பலர். இங்கே அவர்களின் குழந்தை பிறந்து, வளர்ந்து அப்பா என்ற உருவத்தை உணர்வால் தொட்டு உணராமல் நிழல் படத்தில் பார்த்து தெரிந்து கொள்கிறது. தகப்பனின் அணைப்பை குழந்தையும் , பெற்ற குழந்தையின் அருகாமையை  தகப்பனும் உணராமல் வாழ்ந்து என்ன இன்பம் ?!! குழந்தையின் வளர்ச்சியை அருகில் இருந்து காண்பதை போன்ற நிறைவு, மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. இது போன்ற பெரிய,சின்ன சந்தோசங்களை தொலைத்து வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்...?! 

நாளை இறக்க போகிறவர்கள் 
இன்று இறந்தவனுக்காக 
அழுதுகொண்டிருக்கிறார்கள் !

ஓடி கொண்டிருக்கும் ஜீவன் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை சொந்தங்களும் ஒட்டி கொண்டிருக்கும். அன்பே, உயிரே, கண்ணே, செல்லமே எல்லாம் முடிந்துபோய் பிணம் என்ற ஒற்றை அடையாளமாகி விடுவோம். அவர், அவள், என்பது மாறி அது என்றாகி போவோம். இறந்த பின் ஒருநாளுக்கு மேல கூட வைத்திருக்க மாட்டார்கள்...எடுத்து கொண்டு போனதும், வேக வேகமாக வீட்டை கழுவி விட்டு விடுவார்கள். பிணத்துடன் பீடையும் போகட்டும் என்று மூணு நாளில் விசேசம்(?) வைத்து நன்றாக உணவருந்தி சோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து விடுவார்கள், அப்புறம் பதினாறு, முப்பது என்று நாள் எண்ணிக்கை வைத்து நினைத்து விட்டு, ஒருநாள் ஒட்டு மொத்தமாக நினைவுகளும் அழிக்கப்பட்டு விடும். இது யதார்த்தம் !

இதே மனித வாழ்வு. இதை உணர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாட்கள்  இயற்கையின் அன்பளிப்பு என்று நன்றி சொல்லி பொருளின் பின்னே மட்டும்  ஓடாமல் சம்பாதித்த/சேர்த்த பொருளில் பிறருக்கும் சிறிது கொடுத்து சக மனிதன் சிரிப்பில் பேரின்பம் காண்போம்.   


பணக்காரன் தர்மம் செய்யாமல் நிம்மதியாக இறந்தது இல்லை என்பார்கள் . சம்பாதித்த பொருளை தர்மம் செய்யாமல் இருப்பவர்களுக்கு அனுபவிக்க வாரிசுகளும் ஏனோ இருப்பதில்லை.இது இயற்கையின் அமைப்பா? இறைவனின் தர்மமா ??

இருக்க ஒரு வீடு, பாதுகாப்பிற்கு போதுமான பொருள் சேமிப்பில், போக்குவரத்துக்கு ஒரு வாகனம், போதும் என்ற மனநிறைவு அடைந்து, அதற்கு மேல் வரும் வருமானத்தை வறியவர்கள், எளியவர்களுக்கு பாத்திரத்துக்கு தக்கபடி கொடுத்து வாழ்வின் மிச்ச நாட்களை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிக்கலாமே...! 

பகைமை மறந்து அன்பால் மனிதர்களை தழுவுவோம்...இயன்றவரை உழைப்பதில் அடுத்தவருக்காக கொஞ்சம் கொடுப்போம்...இருப்பதை பகிர்ந்து வாழ்வோம்...!

'மனிதநேயம்' வார்த்தையின் அர்த்தம் புரிந்து நடந்துகொள்வோம்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்...!

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...