செவ்வாய், 29 செப்டம்பர், 2020

உடலும் மனமும்

உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் அக்கறை எடுத்துக்கொள்ளும் நான், என் தாய் இறப்பிற்குப் பிறகு எதன் மீதும் நாட்டமில்லாமல் மனம் போன போக்கில் வாழ ஆரம்பித்தேன். அலுவலகத்தை விட்டு வீடு திரும்பியதும் அறையில் ஒரு மூலையில் என்னை முடக்கிக் கொள்ள ஆரம்பித்தேன். 

கொரோனா ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அமீரகத்தில்  இந்தாண்டு மார்ச், ஏப்ரல் என இரண்டு மாத காலம் அலுவலகம் போகாமல் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய சூழலாகிப்போனது. பலரில் நிலமை இதைவிட இன்னும் கொடுமையானது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்பதால் அதை இங்கு சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். 

வீட்டை விட்டு வெளியே போகமுடியாத நிலையில் பெரும்பாலும் இணையத்தில் ஏதாவதொரு மொழிப் படத்தைப் பார்ப்பதும், அதைப்பற்றியோ அல்லது வேறு எதையோ பற்றி எழுவதும், வாசிப்பதுமாக நாட்கள் போனதே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் சூரிய ஒளி படாமல் கூட இருந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

இந்த இடைப்பட்ட இரண்டு மாதத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என தொடர்ந்து மரணச் செய்திகளைக்  கேட்கும்போது என் மனம் நொறுங்கிப் போனது. 

வாழ்க்கையில் பணம் என்னும் பிணந்தின்னிக் கழுகைப் பிடிக்க பல மை;ல் தூரம் கடந்து வந்து  பாலைவனத்தில் பயணிப்பதை நினைத்து மனம் வெதும்பி தவித்தது. இந்த வாழ்க்கை போதும் இனியேனும் ஊர் பக்கம் போகலாம் என்று நினைக்கும்போது நீ நினைத்தாலும் போக முடியாது என்ற நிலைமைதான் தொடர்ந்தது. 

பற்றாக்குறைக்கு எவனைக் கொன்றாவது தன் பணியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவாளிகள் நிறைந்த மாநிலத்தவர்கள் செய்யும் அலுவலக அரசியல் என் மண்டைக்குள் பெரும் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. 

என் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, மனச் சுமையை இறக்கி வைக்க சோசியல் நெட்வொர்க் பக்கம் போனால் அங்கே ஜாதி, மதம், உயந்தவன், தாழ்ந்தவன், இறைவன் இருக்கிறாரா... இல்லையா...?, இறந்தவனைப் பற்றித் தெரியுமா..?  என ஒரே அக்கப் போராத்தான் இருக்கு. 

தொடர் மன அழுத்தத்தில் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என யாருடன் பேசினாலும் அடக்கி வைத்திருக்கும் வலிகளை அவர்கள் மீது கோபமாய்க் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். யாரிடம் எதற்காக கோபம் வருகிறது என்று கூடத் தெரியவில்லை... ஆனால் கோபம் மட்டுமே வருகிறது. 

ஒரு கட்டத்தில் அலுவலகத்தில் எல்லோரிடமும் கடுகடுப்பாக நடந்துகொள்ள, நிர்வாக இயக்குனர் என்னைத் தனியாக அழைத்து, இப்ப உள்ள சூழ்நிலையில் யாரையும் பகைத்துக்கொள்ளாதே... என்று தனியாக பாடம் நடத்த ஆரம்பித்தார். 

ஊர் உறவுகள், நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் மனம் வெறுக்க ஆரம்பித்தது.  ஒரு கட்டத்தில் நமக்காக யாருமில்லை என்ற நிலையில் மனம் தனிமையை விரும்ப  ஆரம்பித்தது. தனிமை இன்னும் கடுமையானது, கொடுமையானது என்பதை தனிமையில் இருந்து பார்த்தால் மட்டுமே உணர முடியும். 

தனிமையால் இரவில் தூக்கம் வரவில்லை, திடீர் திடீரென எழுந்து உக்கார்ந்து கொள்வேன், ஒரு கட்டத்தில் என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன்... இந்தப் போக்கால் என் மன அழுத்தமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் காரணமாக உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் போனது. 68 கிலோ இருந்தவன் உடல் எடை 79 கிலோவாகிப் போனது. 

உடல் எடை கூடுதல், தூக்கமின்மையால் அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டதுடன் முகமும் கருப்பாக மாற ஆரம்பித்தது.  வயிறு வேறு முன்பக்கமாக இழுக்க, அதன் காரணமாக பின் முதுகுத் தண்டு வலியெடுக்க ஆரம்பித்தது. 

ஜிம்மில் 65 கிலோ எடையுள்ள தம்பில்ஸை எடுத்து சர்வ சாதாரணமாக செஸ்ட் incline எடுப்பவனால் இன்று கொஞ்சத் தூரம் கூட நடக்க முடியவில்லை, வேகமாகப் பத்து அடி எடுத்து வைத்தாலே மூச்சு திணறல் எடுக்க ஆரம்பித்ததும் என்னை நானே உணர ஆரம்பித்தேன். 

இப்படியே போனால் சரிப்பட்டு வராது... நம் வாழ்வின் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென நினைத்து நடைப் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டேன். 

திட்டம் திட்டமாக இருக்க, இன்று போகலாம், நாளை போகலாம் என்று மனமும், உடலும் ஒன்றிணைய மறுத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அதன் போக்கில் போகாமல் என் மனக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உடலையும், மனதையும் ஒன்றிணைத்து முதலில் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடப்பதை குறிக்கோளாக கொண்டிருந்தேன், அதன்படி நடக்கவும் செய்தேன். 

நடக்க ஆரம்பித்தபின் மூட்டு வலி ஒருபுறம், மூச்சு திணறல் ஒருபுறம் எனத் தொந்தரவுகள் தொடர, கொரோனாவுக்கான மாஸ்க் வேறு முகத்தில்... வேர்வையில்... ஏதோ செய்ய ஆரம்பித்தது. சரி இதெல்லாம் சரிப்பட்டு வராது... பழையபடி ஜிம் போகலாம் என்றால், கொரானா பயம் காட்டுகிறது. 

நடப்பது கடினமாக இருக்கிறது, கால் வலியெடுக்க... நாளைக்கு வீட்டில் யோகா செய்யலாம் என்று நினைத்துக் கொண்டே நடக்கும்போது வயதான முதியவர் ஒருவர் காலை இழுத்துக்கொண்டே நடந்து வருகிறார்... இடையிடையே ஓடவும் முயற்சிக்கிறார்... சிறிது தூரத்தில் இரண்டு கால்களும் இல்லாத ஒருவர் எலக்ட்ரிக் சைக்கிளில் வாக்கிங் வந்து கொண்டிருக்கிறார்... இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்ததும் என் மனம் மாறியது. 

என் கால் உடைந்தாலும் பரவாயில்லையென்று மனம் உடலை வதைக்க முடிவெடுத்தது. அடுத்தடுத்த நாட்களில் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓடினால் போதும் என்ற இலக்கை உடைத்து, தினமும் பனிரெண்டு கிலோமீட்டர் தூரம் ஓடவேண்டும் என்பதை இலக்காக மாற்றியமைத்தேன், வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த உடலுக்கு ஓய்வு கொடுத்து உறங்க வைக்கலாம் என்பதில் மனம் ஒன்றுகூடி முடிவெடுத்தது. 

ஒவ்வொரு நாளும் முட்டி வலிக்க ஓடி உடல் கலைத்து நிற்கும்போது அந்த வயதான நபர் ஓடிவருவது என் கண்ணில் படும். அவரே ஓடும்போது தின்று கொழுப்பேறிய உன்னால் ஏன் ஓடமுடியவில்லை என்ற கேள்விதான் என்னை ஓடு, ஓடுவெனத் துரத்த ஆரம்பித்தது. 

அடுத்தடுத்து ஒரு வாரம் ஓடியபின் உடல் சுறுசுறுப்பானது, 12 கிலோமீட்டர் இலக்கில்  பத்து கிலோமீட்டர் தூரம் சாத்தியமானது. ஓடி முடித்ததும் மனது புத்துணர்ச்சி அடைந்தது.. ஆரம்பத்தில் பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. அதே பத்துக் கிலோமீட்டர் தூரத்தை இப்பொழுது 45 நிமிடங்களில் எளிதாகக் கடந்து விடுகிறேன். 

யாஸ் மெரினா மராத்தான் போட்டியில் யூரோப்பியன் ஒருவர் பத்து கிலோமீட்டர் தூரத்தை 26 நிமிடத்தில் கடந்து வந்து முதல் பரிசு வாங்கினார், அந்த இலக்கை அடைய வேண்டும் என்று உடலும் மனமும் இணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டது.

மாலை நேரத்தில் ஓட ஆரம்பித்து, பின் எட்டு மணிக்குப் பிறகு சமைத்துச் சாப்பிட்டு தூங்க மிகப்பெரும் சவாலாக இருந்ததால் காலையில் ஓடினால் என்ன என்று யோசித்தேன், காலையில் ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்து என்னைத் தயார்படுத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். மாலையில் ஓடுவதற்கும், காலையில் ஓடுவதற்கும் உடல் அளவிலும், மனதளவிலும் நிறைய மாற்றங்கள் இருப்பதை உணர ஆரம்பித்தது .

ஓடு பாதையில் இருபுறங்களிலும் இருக்கும் நொச்சி இலைகளிள் வாசத்துடன் சூரிய ஒளி இதமாக முகம் துடைக்க மனம் மான் குட்டியைப் போல் தாவிக் குதிக்க மயிலிறகு வருடல் போல் சூரியன் வருடிக் கொடுக்க அழகாக விடிகிறது ஒவ்வொரு காலையும். 

இப்பொழுது மூட்டு வலியும், முதுகு வலியும் எங்கே போனது என்றே தெரியவில்லை. உடல் எடையும்  குறைந்துவிட்டது. 

உணவுப் பழக்க வழக்கங்களில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறேன்... ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவருந்த வேண்டும் என்பதை மாற்றி எப்பொழுதெல்லாம் பசிக்கிறதோ அப்பொழுது சிறிது உணவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை மிகக் குறைவாக சாப்பிட ஆரம்பிக்கிறேன், ஆனால் அதில் முக்கியமான ஒன்று... ஆயில், உப்பு, இனிப்பு இவை மூன்றையும் முடிந்த அளவு குறைவாகவே பயன்படுத்திக் கொள்வேன். அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். 

நம் உடலுக்கு ஒரு பிரத்தியேகமான பழக்கம் இருக்கிறது... எப்பொழுதெல்லாம் பசிக்கிறதோ அப்பொழுது சிறு ரொட்டித் துண்டாவது கொடுத்துப் பசியை மாற்றி விட்டால் போதுமானது, பசிக்கும் போது நீங்கள் வயிற்றுக்கு எதுவும் கொடுக்கவில்லை என்றால் உணவு கிடைக்கும்போது அது உங்களை ஏமாற்றி அளவுக்கு அதிகமான உணவை உண்ண வைத்து அதைக் கொழுப்பாக மாற்றி வைத்துக் கொள்ளும், எப்பொழுதெல்லாம் சாப்பிடாமல் இருக்கிறீர்களோ அப்பொழுது சேர்த்து வைத்த கொழுப்பிலிருந்து உடலுக்கு தேவையான ஆற்றலை எடுத்துக் கொள்ளும் . 

மனதுக்கு மட்டுமில்லை உடலுக்கும் ஏமாற்றும் பழக்கமுண்டு. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...