ஞாயிறு, 23 ஜூலை, 2023

அரிச்சந்திரன்

#அரிச்சந்திரன் 

எப்பவுமே வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கும் கந்தசாமியை அழுக்குத் துணியில் அவர் மனைவி வெள்ளையம்மாளைத் தவிர வேறு யாரும் பார்த்ததேயில்லை.

கம்பீரமான தோற்றம், கணீர்க்குரல், மிடுக்கான நடை எனக் கிளியூருக்குள் எப்பவும் கெத்தாக நடமாடும் கந்தசாமி, ஊருக்குச் சாமியாக இருந்தார். ஆம் ஊர் உறவுகள் அவரைச் ‘சாமி’ என்றுதான் அழைப்பார்கள். அதைத்தான் அவரும் விரும்பினார்.

அந்த ஊரைப் பொறுத்தவரை அவரின் பேச்சுக்கு எப்போதும் மறுபேச்சு என்பது எழுந்ததேயில்லை. ஊரில் நடக்கும் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அவர் அனுமதி கொடுத்ததால் மட்டுமே நடந்தேறும். ஏன் இன்னும் சொல்லப் போனால் சிலர் வடக்குத் தோட்டத்தில் என்ன விதைக்கலாம், தெற்குத் தோட்டத்தில் என்ன விதைக்கலாம், என்று கூட சாமியிடம் அனுமதி கேட்பதுண்டு. 

இப்படி ஊருக்குள் எது செய்வதென்றாலும் அவரிடம் கேட்டே செய்ய வேண்டுமென தினமும் விடியல் முதல் இரவு வரை ஆட்கள் அவர் வீட்டு வாசலில் காத்திருப்பதால் நாந்தான் சாமி என்ற அதிகார போதையும் அவரிடம் வளர ஆரம்பித்திருந்தது.. 

சாமி காலையில் எந்திரிச்சுக் குளித்து, வெள்ளை ஜிப்பாவுட்ன வீட்டு வாசலிருக்கும் வேப்ப மரத்தடியில் போட்டிருக்கும் நாற்காலியில் ஒரு தோரணையுடன் உட்கார்ந்து கொண்டு "அடியே வெள்ளையம்மா இம்புட்டு தேத்தண்ணி கொண்டா" என்று அழைக்கும் போது பின் பக்கமாய் கோவிந்தன் வந்தார்.

"அடடா... கோவிந்தா வாப்பா, வா... வந்து உக்காரு....! என்ன காலங்காத்தால வந்திருக்கே?” என்றவர், "ஏய் வெள்ளையம்மா... அப்படியே இன்னொரு டம்ளர் சேத்துப்போடு… கோவிந்தன் வந்திருக்கிறார்"  என்றார். 

"அதெல்லாம் வேண்டாம் சாமி… அப்பறம் வந்து காபி குடிச்சிக்கலாம்… இப்ப நீங்க எங்கூட வாங்க" என்றார் கோவிந்தன் பதட்டமாய்.

அவரின் பதட்டம் சாமியையும் பற்றிக் கொள்ள, வேகமாய் எழுந்து "ஏய் என்னாச்சுப்பா?” என வேகமாக்க் கேட்டார்.

“அதான்... நம்ம குருவம்மா மக கடசிப் புள்ள பேச்சியம்மா அது மருந்தக் குடிச்சுட்டு செத்துப் போச்சு"  பதட்டத்தோடு சொல்லி முடித்தார் கோவிந்தன்.

"அடக் கூறுகெட்ட பயவுள்ள அடுத்த மாசம் அம்மனுக்கு காப்புக் கட்டனும் இப்பப் போயி இப்படியொரு காரியத்தப் பண்ணித் தொலச்சிருக்கு...?" என ஆத்திரமும் ஆதங்கமுமாய் பேசினார்.

இருவரும் காரசாரமாய் பேசியபடி குருவம்மாள் வீட்டை அடைந்தார்கள். 

அங்கு ஊரே கூடியிருந்தது. அவரின் வருகைக்கான காத்திருப்புதான் அது என்பதை அவர் உணர்ந்து கொண்டு மிதப்போடு வீட்டுக்குள் போனார்.

குருவம்மாவிடம் துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் நின்றவர்களைப் பார்த்து "சரி... இப்புடியே நின்னு… சட்டுப்புட்டுனு ஆகவேண்டிய காரியத்தப் பாருங்கப்பா… இந்த விசயம் வெளிய யாருக்கும் தெரியக் கூடாது. காதோடு காது வச்சாப்ல இருக்கட்டும்" என்றார். 

சாமி உத்தரவிற்காக காத்திருந்த ஊர் மக்கள் வேகவேகமாக காரியத்தில் இறங்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் பேச்சியம்மாள் நடுக்குடியிருப்பு சுடுகாட்டில் சாம்பலானாள். 

பேச்சியம்மாள் செத்த சேதி அறிந்து வந்த பெருமாளுக்கு அவள் சாம்பலாகிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளாது தவித்தான்.

‘நாளைக்கு ரெண்டுபேரும் ஊரை விட்டே ஓடிப் போயிடலாம்னு சொன்னேனே? இப்படி செஞ்சிட்டியே பாவிச் சிரிக்கி’ என மனசுக்குள் புலம்பி, பேச நினைத்த வார்த்தைகளையும் கரை புரண்ட கண்ணீரையும் வெளியே வரவிடாமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டவன், சொந்தம் பந்தம், வயது வித்தியாசம் பார்க்காமல் ’ஏய்யா…  அதுக்குள் ஏன் அவசரமா எரிச்சீங்க..?’ எனக் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கத்த ஆரம்பிச்சான்.

"அடே பெருமாளு சாமி சொன்னதுக்கு மறுபேச்சு இங்க உண்டா… பிறகு எப்படிடா பாடியப் போட்டு வைக்கிறது? சரி விடு...அந்தப் பயபுள்ளக்கி ஆயுசு அம்புட்டுத்தான்…" என்றார் கோவிந்தன்.

"யோ... அவன் புள்ளயாயிருந்தா இப்படிச் செய்வானா…?" என்று பெருமாள் கேட்டதை ஊர் முழுக்க வாயை மூடி ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தது! 

சிலர் " ஆத்தாடி... இது சாமி காதுல கீதுல விழுந்திடப்போகுது... மொதல்ல அவன இங்கிருந்து இழுத்துட்டுப் போங்கப்பா" என்றார்கள். 

அந்தக் குரல்தான் சாமிக்கு எதிராக ஊருக்குள் எழுந்த முதல் குரல், இதையெல்லாம் காதில் கேட்டும் கேட்காத மாதிரி இருந்த சாமி..." சரி… சரி… சலம்பலக் கண்டுக்காம ஆகவேண்டியதப் பாருங்கப்பா" என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

எப்போதும் கம்பீரமாக நடந்து போகும் கந்தசாமி அன்று செம்மறியாட்டு நடையில் போவதை ஊரே வேடிக்கை பார்த்தது.  

நாட்கள் போகப் போக சாமி வீட்டிற்கு வரும் ஆட்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாகக்  குறைந்தது, ஊருக்குள் நடக்கும் எல்லாவற்றிற்கும் சாமி அனுமதியை கேட்டு காத்திருந்தவர்கள் "எதுக்கு இதுக்கெல்லாம் சாமிக்கிட்ட கேட்டுக்கிட்டு" என்று சின்னச்சின்ன விசயங்களில் அவர்களாகவே முடிவெடுத்து, இப்படிச் செய்யலாம்ன்னு இருக்கோம் எனத் தகவலாக அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஊருக்குள் இருக்கும் இளவட்டங்கள் எல்லாம் பெருமாள் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்கள், அடுத்த மாதம் முளக்கொட்டுக்கு எப்பவும் சாமி ஏற்பாடு செய்யும் வழக்கமான கரகாட்டம் வேண்டாம், அரிச்சந்திரன் நாடகம் போடணும், புதுக்கோட்டைச் செட்டக் கொண்டு வரணும் என்று பெருமாளுடன் சேர்ந்து இளைஞர்கள் முடிவெடுத்தார்கள்.

எல்லாச் சனிக்கிழமையும் ஊரே கூடி நல்லது கெட்டது பேசுவது தலைமுறைகளாய் தொடரும் வழக்கமாக இருந்தது. 

அன்றைய ஊர் கூட்டத்தில் பெருமாளும் இருந்தான். 

" ஏப்பா... நல்லதோ கெட்டதோ நடந்தது நடந்து போச்சு... இப்ப ஏன் எல்லாரும் காலக் கட்டிக்கிட்டு உக்காந்திருக்கீங்க..? என்ன பேசணுமோ அதப் பேசுங்கப்பா… ஆகாவரி பேச்ச விட்டுட்டு ஆக வேண்டியதப் பாப்போம்" என்றார் கோவிந்தன். 

“அடுத்த வாரம் முத்துப் பரப்புறோம்... அதுக்கு அடுத்த வாரம் மொளக்கொட்டு, புதுக்கோட்டைச் செட்டத்தான் கொண்டு வரணும்… அம்புட்டுத்தான். அதுக்கான வேலைகளை நீங்கதான் பாக்கணும் சித்தப்பு’ என கோவிந்தனைப் பார்த்துச் சொன்னான் பெருமாள்.

"டே ...சாமிக்கிட்ட கேக்காம நீங்களே முடிவெடுத்தா எப்படி.. எதுவா இருந்தாலும் சாமி சொல்லட்டும்… எளவரசுக கொஞ்சம் பேசாம இருங்க" என்ற குரல்கள் கூட்டத்தின் எல்லாப் பக்கமும் இருந்து வந்தது. 

"என்ன சாமி கம்முனு இருக்கீங்க.... எதாவது சொல்லுங்க" என்றார் கோவிந்தன். 

"அதான் நீங்களே மாற்றம் வேணும்ன்னு முடிவெடுத்துட்டீங்களே... பின்ன இதுல நாஞ்சொல்ல என்ன இருக்கு… அப்படியே நடக்கட்டும்” என்று வார்த்தைகளை மெண்டு துப்பினார்.  

எப்போதும் சாமி வார்த்தைக்கு கொக்கு மீன் பிடிக்க காத்திருப்பது போல் காத்திருந்தவர்கள் இன்று கழுகு இரைதேடுவதைப் போல் முடிவெடுக்கிறார்கள் என்பதை நினைத்து சாமியின் மூச்சுக் காற்று சற்று சூடாகவே வெளியேறியது. 

திருவிழாவின் மொத்தப் பொறுப்பையும் பெருமாள் தலைமையில் இளைஞர் சங்க மேற்பார்வையில் யாருக்கும் எந்தக் குறையும் வராதவாறு பார்த்துக் கொண்டார்கள்.  

எப்பவும் கரகாட்டத்தைப் பார்த்த கிளியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு புதுக்கோட்டை சரசின் ஆட்டமும், கருப்புச்சாமியின் பாட்டும் நடிப்பும் புதுமையாகவும்  உற்சாகத்தையும் கொடுத்தது.

நாடகக்  கொட்டகைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கந்தசாமிக்கு மனது ஒரு நிலையில் இல்லை. பேருக்கு நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய, கவனம் சிதறியிருந்தது. 

‘எடுத்ததுக்கெல்லாம் நம்மகிட்ட கேட்ட பயலுக இப்ப நம்மகிட்ட எதையும் கேட்க மாட்டேங்கிறானுங்க, ஊர் பெருசுகளும் அவனுக பின்னாடி நிக்க ஆரம்பிச்சிருச்சுக… காரணம் என்னவாயிருக்கும்..? இல்லை குருவம்மா அடிக்கடி நம்ம தோட்டத்துக்கு வர்றதை இந்தப் பயளுக பார்த்துப்புட்டானுகளோ…? இல்ல அந்தப் பனங்குட்டிப் பிரச்சனையில மொங்காருக்கு ஒருதலைப்பட்சமா நடந்து கொண்டதால நமக்கு எதிராத் திரும்பிட்டானுங்களா..?'' என அவரின் மனசுக்குள் விவாதம் நடத்திக் கொண்டிருக்கையில் நாடகத்தில் லோகிதாசன் இறந்த காட்சி வந்துவிட்டது...! 

ஊர் மக்கள் தன்னை நிராகரிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் நினைத்துப் பார்த்த ஒவ்வொன்றும் கருக்கருவா நெல்லுத்தாளை அறுப்பது போல நெஞ்சுக்குள் அறுத்தது.

லோகிதாசன் செத்த சோகத்தில் ஊரே அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

கந்தசாமி துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு எழுந்து கூட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேட்டியை அவிழ்த்து உதறிக் கட்டிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானார்..

"சாமி என்ன கிளம்பிட்டீங்க…? இனித்தானே நாடகம் நல்லாயிருக்கும்" என்றார் கோவிந்தன்.

“வீட்டு வரைக்கும்  போய்ட்டு வர்றேன்..." என்றார் சாமி. 

நாடகத்தில் சந்திரமதி, லோகிதாசனின் பினத்தைத் தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு என் சாமி என கத்திக் கதறிக் கொண்டிருக்கையில்...

அவள் கிளம்பிப் போனச் சிறிது நேரத்தில் ‘அய்யோ…. சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே… நா என்ன செய்வேன்..’என ஊருக்குள் இருந்து உடைத்துக் கொண்டு வெளிவந்த வெள்ளையம்மாளின் அழுகைச் சத்தம் சந்திரமதியின் அழுகைச் சத்தத்தை மிஞ்சிக் கேட்டது.

நாடக மேடையில் இருந்து பதறி எழுந்த ஊர்ச்சனம் என்னமோ ஏதோவென  கந்தசாமியின் வீட்டை நோக்கி ஓடியது.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...