திங்கள், 18 ஜனவரி, 2021

மாஸ்டர் திரைப்பட விமர்சனம்

#மாஸ்டர்_திரைப்பட_விமர்சனம் 

நண்பர்களின் வற்புறுத்தலுக்கு மதிப்பளித்து 'மாஸ்டர்'  திரைப்படத்தைத் தியேட்டரில்   பார்த்தேன். படத்தைப் பற்றி ஒவ்வொருவருடைய பார்வையும் வித்தியாசப்படும்... எனது பார்வையை இக்கட்டுரையில் அல்லது இந்த விமர்சனத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்துச் சொல்லனுமா? என்றால் தேவையில்லை என்பதுதான் என் எண்ணம் என்றாலும், இப்படம் பேச மறந்த சிலவற்றைப் பற்றிப் பேசவேண்டும் என்பதால்தான் எனது பார்வையை இங்கு விரிக்கிறேன்.

 பலரால் பரவலாகப் பேசப்படும் அல்லது விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் படங்களை மட்டுமே தியேட்டரில் போய்ப் பார்ப்பதுண்டு... தமிழில் வருடத்திற்கு நூற்றுக்கு மேலான திரைப்படங்கள் வெளிவந்தாலும், விரல் விட்டு எண்ணும்படியாக ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியடைகிறது என்பது நாம் அறிந்ததே. நான் சொல்லும் வெற்றி என்பது வர்த்தக ரீதியான வெற்றி மட்டுமில்லை... இந்தச் சமூகம் சார்ந்த நல்ல கதையை  நேர்மையாகவும், எதார்த்தமாகவும், மிகைப்படுத்தாமலும் எடுக்கப்படும் திரைப்படங்களையே நான் வெற்றிப்படமாக பார்க்கிறேன்.

 கடைசியாக நான் பார்த்து ரசித்த படங்களில் 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'அசுரன்' எனது பார்வையில் மிகப்பெரிய வெற்றிப் படைப்புகள். இந்த இரண்டு படங்களும் இன்றும் என் நினைவு அடுக்குகளிலிருந்து நீங்க மறுக்குகிறது..! அந்தப் படங்களின் கதையோட்டமும் பேசிய விஷயமும் ரொம்ப முக்கியமானது.

 இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் ஒரு திறமையான இயக்குநர் என்பதை முந்தைய படங்களில் நிரூபித்திருந்தார். ஒரு நல்ல கதையை அதன் வீரியத்துடன் சரியாகக் கொடுக்காமல் சொதப்பியிருப்பதும், விஜய் எனற மாஸ் கதாநாயகனுக்கு ஏற்றால் போல் தன் பாணியில் இருந்து விலகித் திரைக்கதையை வடிவமைத்திருப்பது கோமாளித்தனமாக இருந்தது. இயக்குநர் நாயகனுக்காக மாறினால் இப்படித்தான் படம் எடுக்க முடியும் என்பதை தமிழில் பல நல்ல இயக்குநர்கள் இதற்கு முன் நமக்குக் காட்டியதுடன் காணாமலும் போய்விட்டார்கள்.

 படத்தில் இசை என்ற இம்சை எந்தப் பின்னணிக் காட்சிகளுக்கும், கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கும் பொருந்தாமல் அடுக்குப்பானைக்குள் புகுந்த எலி உருட்டுவது போல் உருட்டி எடுத்ததில் நல்ல காட்சிகளைக் கூட ஒன்றிப் பார்க்க முடியவில்லை. படம் முடியும் போது அனிருத் தலைக்குள் உருட்டிக் கொண்டிருந்தார்... தலைவலியைச் சுமந்தே திரும்பினேன்.

 கதையின்படி, தொடக்கத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் ஜே.டி(விஜய்) ஆறு மணியானால் பாட்டிலும், கையுமாகத்தான் இருக்கிறார்... இப்படி இருக்கும் ஒரு பேராசிரியரை மாணவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், குடித்துவிட்டு சோபாவில் படுத்துக் கிடக்கும் ஜே.டியை மாணவர்கள் எல்லோரும் சோபாவோடு தூக்கிக் கொண்டு வந்து கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வைப்பதும் அபத்தத்தின் உச்சம். ஏற்கனவே தமிழக அரசின் சாதனைச் சாராய வாசனை இளைய சமுதாயத்தைக் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது... பற்றாக்குறைக்கு விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது இன்றைய இளைய சமுதாயத்தை தவறான திசையில் செல்ல வழி வகுக்கும் செயலாகத்தான் இருக்குமே ஒழிய, மாற்றத்தைக் கொண்டு வராது. படத்தின் பாதியிலேயே அவர் திருந்தி விட்டாரே என்று சொன்னாலும் தண்ணி அடித்திருக்கும் போது அவரைக் கொண்டாடியதே கண்ணுக்குள் நிக்குமே தவிர திருந்திய பின்னான காட்சிகள் அல்ல.

 

விஜய் சேதுபதிக்கான கதாபாத்திரம் மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது... நடிப்பில் சோடை போகும் மனிதன் இல்லை என்பதால் பவானியைக் கண் முன் நிறுத்தினார். சிறு வயதிலேயே குடும்பத்தை இழந்து செய்யாத தவறுக்குச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படும் பவானி, உள்ளே தவறான வழிநடத்தலுக்கு உட்பட, வெளியில் வந்ததும் அனைத்து விதமான சட்ட விரோதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்... அமைதிப்படை அமாவாசையைப் போல மேலே மேலே ஏறி ஒரு கட்டத்தில் தானே தலைவனும் ஆகிறார்.  தான் படித்த சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களைக் கொண்டே, தன் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார். இந்த கதாபாத்திரம் மட்டுமே இயல்பாகவும் எதார்த்தமாகவும் இருப்பதுடன் இன்றைய ரவுடிகளின் மறுபக்கத்தைப் பற்றிப் பேசுகிறது என்று கூடச் சொல்லலாம்.

ஜே.டியாக, குடிகாரனாக வரும் விஜய்யின் கதாப்பாத்திரம் முற்றிலும் நடைமுறைக்கு பொருந்தாத, இந்தச் சமுதாயத்திற்குத் தேவைப்படாத, இந்தச் சமூகம் நிராகரிக்கப்பட வேண்டிய அத்தனை விஷயத்தையும் படம் முழுவதும் செய்வது அபத்தமானதாகவும், ஆபத்தானதாகவும் தெரிகிறது. இரு சிறுவர்களின் கொலைக்குப் பின் திருந்திவிட்டதாகவும் ரவுடியான பவானியைப் பழி வாங்குவதாகவும் கதையை முடிக்கிறார்கள்... அபத்தமாகச் செய்துவிட்டு நல்லவனாக மாறினால் ஹீரோயிஸம் என்பது தமிழ்ச் சினிமாவில் தொன்று தொட்டுத் தொடர்வதுதானே. இங்கே ரவுடியைத்தானே நாயகி காதலிப்பாள் இல்லையா..?

 படத்தில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் நடைபெறும் சம்பவங்களையும் ஜெயில் அதிகாரிகளின் சுரண்டல்களையும், பொறுப்பற்ற செயல்களையும் விரிவாகப் பேசவில்லை என்றாலும் ஓரளவுக்காகவாவது சொல்லியிருப்பது மட்டுமே.

 கைதி படத்தைப்போல் இக்கதையும் இன்னும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருந்தால் இந்த அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் மிகப்பெரும் அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் என்று திடமாக நம்புகிறேன்.  மேலும் விஜய் போன்ற மாஸ் நாயகர்கள் இதுபோன்ற கதைகளைத் தைரியமாக எடுக்கும் போது மக்கள் மத்தியில் இன்னும் நல்ல பெயர் கிடைக்கும்.

 மாஸ் என்ற வட்டத்துக்குள் சிக்கி, படத்தையும் கெடுத்து தன்னைத் தெய்வமாக நம்பும் ரசிகர்களையும் இவர்கள் கெடுப்பதுடன், மக்களுக்கு ஏதோ நல்லது செய்து விட்டதைப் போல பேசுவது வேதனைக்குரியது.

 தென்மாவட்டங்களில் வளர்ந்து வரும் ரவுடிசம், கொலை கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் ஆணவக் கொலைகளை செய்வது பதின்ம வயதில் இருக்கும் சிறார்கள்தான். இதை ஊக்குவிப்பது ஒரு சில அரசியல்வாதிகள் என்பது காவல்துறைக்கு நன்றாகவே தெரிந்த விஷயம். ஒவ்வொரு அரசியல்வாதியின் பிடியிலும் பத்துக்கு மேற்ப்பட்ட மீசை முளைக்க ஆரம்பித்த சிறார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... இவர்கள் கை காட்டும் ஆளை அடிப்பதற்கும், மிரட்டுவதற்கும், தேவைப்பட்டால் தலையை எடுப்பதற்கும்.

 அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்கு இவர்களைப் பயன்படுத்துவதற்குக் காரணம் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், சிறுவர்கள் என்பதால் அவர்களைச் சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையும்தான்.

 அரசியல்வாதி கொடுக்கும் அதீதப் போதைக்காகவும் சொற்பப் பணத்துக்காகவும் இவர்கள்  இதுபோன்ற செயல்களில் தைரியமாக ஈடுபடுகிறார்கள். காலப்போக்கில்  இதுவே அவர்களின்தொழிலாகப் பழகிப்போக, எதிர்காலத்தில் மிகப்பெரிய ரவுடியாக உருமாறுகிறார்கள். எதையும் சிந்திக்க விடாமல் இதுதான் பாதை, இதுதான் வாழ்க்கை என போதைக்குள் இவர்களைத் தள்ளி, தங்கள் ஆட்டத்தினைத் தைரியமாகத் தொடரும் அரசியல்வாதிகளும் அரசும் கைகோர்த்துக் காய் நகர்த்துவது வருந்தத்திற்குரியதாக இருக்கிறது. இது மாற வேண்டுமென்றால் இந்தப் போதைக்குள் சிக்கும் இளைஞர்கள் முதலில் மாற வேண்டும்.

 இன்னும் சொல்லப்போனால் இன்றைய நிலையில் மீடியா கூட பொறுப்பற்ற  நிலையில் தான் இருக்கிறது... கூலிப்படையினர் கொலை செய்தார்கள் என்று எதார்த்தமாக, ஏதோ ராணுவம் எதிரி நாட்டைத் துவம்சம் செய்தது போல் பேசிவிட்டு, அதை எதார்த்தமாகக் கடந்து செல்வதும், அதைப் பற்றி நாலு பேரை உக்கார வைத்து மணிக்கணக்கில் பேசுவதும் மன்னிக்க முடியாத செயல்.

 சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளிவந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்... 'என்னை தொட்டுப்பார் பார்க்கலாம்..? தொடர்ந்து பத்து வருசமா ஜெயிலுக்கு வந்துட்டுப் போய்கிட்டு இருக்கேன் எனக்குத் தெரியாதா...? என் மேல் கை வைத்தால் சங்கை அறுத்துருவேன்' என இராமநாதபுரத்தில் இளைஞர் ஒருவர் ஜெயில் வாசலில் வைத்துக் காவலரிடம் சவால் விடும் காட்சிதான் அது. அந்த அளவிற்கு சட்டமும் ஜெயிலும் ரவுடிகளை வளர்த்தெடுத்திருப்பதைப் பார்க்கையில் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் வருங்காலங்களில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

 இந்த அரசு தெருவிற்கு ஒரு கோவிலும், ஊருக்கு ஒரு பள்ளிக்கூடமும் இருக்கவேண்டிய இடத்தில் தெருவிற்கு ஒரு மதுக்கடையைத் திறந்து இன்றைய இளைய சமுதாயத்தைத் தவறான திசையில் வழிநடத்துவதுவதுடன் சினிமா என்ற பெயரில் மாஸ்டர் போல மகா மோசமான படங்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருப்பது வருத்தத்தையே தருகிறது. மக்கள் பணி செய்வதை விட இது போன்ற விஷயங்களில்தான் இன்றைய அரசு தீவிரம் காட்டுகிறது.

 சமீபமாய் சாதியைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ்ச் சினிமா, மதுவையும் கொண்டாடவே செய்கிறது. விஜய்கள் மாற மாட்டார்கள்... லோகேஷ்கள் மாறலாம். நடிகருக்காக தன் சுயம் இழக்காமல், இனியேனும் இது போன்ற குப்பைகளைக் காட்சிப்படுத்தாமல் மக்களுக்குச் சென்று சேர வேண்டிய விஷயங்களைக் காட்சிப்படுத்துங்கள்.

 அடுத்த படத்தில் லோகேஷ் மாஸ் நாயகனாக மாறாமல் லோகேஷாகவே இருப்பார் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.



குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...