சனி, 3 அக்டோபர், 2020

திமில் புத்தக விமர்சனம்

தெரிசை சிவாவின் குட்டிக்கோரா வாசித்த பின்பு  அவரின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் நெருக்கமானதாகிப் போனது. அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகளும் குறைந்த பக்க எண்ணிக்கைக்குள் ஆழமான காயத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், அதே சமயத்தில் ஒரு கதையைப் படிக்கும் முன் இருந்த மனநிலையிலிருந்து அக்கதையைப் படித்து முடித்த பின் வேறொரு கோணத்திலான மனநிலைக்கு உயர்த்தக்கூடியதாகவும் இருப்பதுடன், கதைக்கும் வாசகனுக்கும் இடையே சொல்லால் சொல்லப்படாத இடைவெளியை விட்டு அவனோடு உறவாடிக்கொண்டிருக்கிறது. 

சிவா கதை சொல்லும் விதம் அமைதியாய் இருக்கும். அதே நேரம் வாசகனைக் கிளர்ந்தெழச் செய்வதும், கிளர்ந்து கிடக்கும் வாசகனின் சிந்தனையை அமைதியுறச் செய்வதுமாக ஒரு வாசகனைக் கதைக்குள்ளேயே கட்டிப்போடும் வித்தை தெரிந்த எழுத்தாளர் ஆவார். அமீரகத்தில்  தவிர்க்க முடியாத எழுத்தாளர்களில் சிவாவும் ஒருவராக வருவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறுகதைகள் இருக்கிறது... புத்தகத்தை வாசித்து முடித்து விட்டு எதைப் புகழ்வது, எதை விடுவது என்ற குழப்பமான மனநிலையே இருந்தது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமான சிறப்புடன் இருப்பதுடன் வெவ்வேறான மனவெழுச்சியை உண்டாக்க வல்லது...  தொகுப்பைப் பற்றி ஒரு நாள் முழுவதும் பேசினாலும் பேச முடியாது.

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம் கூடவே வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் எளிய மக்களின் வலிகளையும், வாழ்வியலையும் எதார்த்தமாக எந்தவொரு வார்த்தை அலங்காரமின்றி நாஞ்சில் வட்டார மொழி வழக்கில் எழுதியிருப்பதை வாசிக்கையில் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகி விட்டது. 

1.சுப்பாச்சி 2. பேதலிப்பு 

3. கூடப்பொறப்பு 4. உயிர்மெய் 

5. ஜன்னல்  6. சிவன் சொத்து  

7. இடுகாட்டுமோட்சம8.ஆவி  

9. கொளுப்போட்டி  10.  சுமை 

11. கோழி  12. பொன்னுலஷ்மி  

13. மாங்காமடையன் 14.முத்தம்  

15. கிரிதி   16. யோக்கியன் 

என மொத்தம் பதினாறு கதைகளில் எனக்கு  மிகவும் பிடித்த ஐந்து கதைகளைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பேசலாம் என்று நினைக்கிறேன்.

சுப்பாச்சி ; நம் கிராமங்களில், நகரங்களில் எல்லா இடங்களிலும் சுப்பாச்சி போன்றவர்கள்  வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... சுப்பாச்சியின்   கள்ளம் கவடமில்லாப் பேச்சும், கடும் கோபமும்  அவளுக்குள்  அழுத்திக் கொண்டிருக்கும் மனச்சுமையை நமக்கு உணர்த்துகிறது. 

முதியோர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளில் மிகவும் கொடுமையானது அவர்கள் அனுபவிக்கும் தனிமைதான். அதுவும் சுப்பாச்சி  போன்று தன் இணையை பிரிந்து வாழும் குழந்தைகள் இல்லாத ஆதரவற்ற முதுமையென்பது இன்னும் கொடுமையானது. தன் மனதில் தோன்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாதிருத்தல், தனது சுக துக்கங்களை மனம் விட்டு பேச முடியாமல் இருத்தல் போன்ற விசயங்கள் அவர்களை இன்னும் கொடுமைப்படுத்துகின்றது. 

நகரங்களோடு ஒப்பிடுகையில் கிராமத்து மனிதர்கள் நெஞ்சில் இன்னமும் கொஞ்சம் ஈரம் ஒட்டிக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். கிராமங்களில் தனிமையில் இருக்கும் முதியவர்களை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எட்டிப் பார்த்து உறவாடுவதும், சிறு சிறு உதவிகள் செய்து கொடுப்பதும், கலாச்சார ரீதியாக இன்னும் கிராமங்களில் மறையாமல் இருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் பெருநகரங்களில் பக்கத்துவீட்டில் யார் இருக்கிறார் என்றுகூட தெரியாதிருத்தல் எவ்வளவு கொடுமையானது.

சாகக் கிடந்த சுப்பச்சி.... நீ வாங்கிக் கொடுத்த போனில் யாருமே கூப்பிடவில்லையே...! என்று சொல்வதுடன் அவரின் உயிர் பிரியும். இக்கதையை  வாசித்து முடித்தபின் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் பிடித்தது. மனமெங்கும் இருள் சூழ்ந்தது போல் இருந்தது. இன்னும் பெரும் நகரங்களின் சாலையோரங்களிலும், ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், வானத்தையும் பூமியையும் ஒரு நூலில் கட்டி இழுப்பது போல் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே மெல்லிய நூலைக் கட்டி அதை இழுத்து நிறுத்தி நாட்களைக் கடத்தும் முதுமைகள் ஏராளமாக இருப்பதை காண முடிகிறது. 

ஆதரவற்ற சிறுவர்களை அரவணைக்க, தத்தெடுத்து வளர்க்க ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் முதியவர்களிடம் மனமிட்டு பேசக்கூட யாருமில்லை என்பது வேதனைக்குரியது. 

பேதலிப்பு; மனநல காப்பகத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்கள், அங்கு அடைக்கப்ப்ட்டிருக்கும் பெண்ணின் மனநிலையை விவரிப்பதுடன் கதையை ஒரு வாசகனிடமே விட்டுவிட்டார் கதை ஆசிரியர்.... கதையை வாசித்து முடித்ததும் அவள் மனப் பிறழ்விற்கான காரணம் என்ன? ஏன் தாயை கொன்றாள்? என்ற பல்வேறு சந்தேகங்களை வாசகனிடமே விட்டுவிட்டு கதையை நகர்த்தும் சாமர்த்தியம் கதையை மேலும் விறுவிறுப்பாக்கி இருக்கிறது. 

மனநிலை காப்பகத்தில் இருப்பவர்கள் மனநிலை பாதித்தவர்கள் கிடையாது, இந்த சமூகத்தாலும், உறவுகளாலும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்பதைச் சொல்லிச் செல்லும் கதை இது. 

கூடப்பொறப்பு; அழகான கிராம மக்களின் பின்னணிகளையும், அவர்கள் வாழ்க்கையையும் பேசுவதோடு வயது முதிர்ந்த ஒரு  பெண் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பிருந்தும் அவள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போனதற்கான காரணத்தையும், காலம் கடந்து தன் மகளுக்கு குழந்தை பிறந்திருக்கும் நேரத்தில் தான் கர்ப்பமானதும் ஊர் உலகம் என்ன சொல்லும் என்ற காரணத்தால் கருக்கலைப்பு செய்துவிட்டு குழந்தைப் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கும் பெண்களின் வலியை பேசுகிறது... 

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதைச் சொல்லும் யதார்த்தமான, சமூகம் சார்ந்த நல்ல கதை இது.

உயிர்மெய்: இச்சிறுகதை வாழ்க்கையில் நான் என்ற அகம்பாவத்தை அகற்றி நாம் உயிரோடு வாழும் காலங்களில் மற்றவர்களுடன் அன்போடு வாழவேண்டும் என்பதையும் அப்படியான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் சொல்லும் கதை.

ஜன்னல்: வீட்டில் வைக்கப்படும் ஜன்னல் வேடிக்கை பார்ப்பதற்கும் காற்று வாங்குவதற்கும் மட்டுமல்ல, அந்த வீட்டுக்குள் இருக்கும் இன்ப துன்பத்தை வெளியுலகிற்கு காட்டும்  கண்ணாடியாகவும் இருக்கத்தான் செய்கிறது. 

வயது முதிர்ந்த ஒரு ஆணுக்கு தன் குழந்தை வயதில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதில் இருக்கும் சிக்கல்களை அழகாக விவரிக்கிறது... தன் உடல் தேவைகளை விலங்குகள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளும் ஒரு பெண்ணின் வலியை பேசுகிறது. 

முத்தம்; மனிதனுக்கு இப்போதெல்லாம் உடல் தேவை, மனத் தேவைகளை விட பொருள் தேவை அதிகரித்து விட்டது. வாழும் காலங்களில் சரியாக வாழாமல் ஏதோ சில நிபந்தனைகளை தலையில் தூக்கிக்கொண்டு ஓடும் இன்றைய மனித உலகிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கதை இருக்கிறது. 

இக்கதையை வாசிக்கும்போது ஒரே குழப்பமாகவே இருந்தது. கதையின் தொடக்கத்தில் மனைவி இறந்து விட்டாள் என்பது புரியத் தொடங்கிவிட்டது பின் யாருக்கு முத்தம் கொடுக்கப் போகிறார் என்ற குழப்பத்துடனே வாசித்தேன்... கடைசியில் தன் மனைவியின் புகைப் படத்திற்கு முத்தம் கொடுக்கும் போது அந்த சஸ்பென்ஸ் உடைவது மிக நெகிழ்வாக இருந்தது. 

திமிலில் குறைகள் என்றால் எல்லாக் கதைகளும் நாஞ்சில் வட்டார மொழி வழக்கில் இருந்ததால் இரண்டு மூன்று கதைகளுக்குப் பின் லேசாக அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. 

கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாக் கதைகளிலும் ஒரே மாதிரியாக இருந்தது. சில கதைகளை தவித்திருக்கலாம். முதல் கதையில் இருந்த எதிர்பார்ப்பு அடுத்தடுத்த கதைகளில் இல்லையென்பது உண்மை. 

சமூக நலன் சார்ந்து சில அவசியமற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. திமில் தலைப்பிற்கும், அட்டைப் படத்திற்கும், கதைகளுக்கும் எந்தவித  சம்பந்தமும் இல்லை என்பதும்... திமில் கதை வரும்...வரும் என்று ஒவ்வொரு கதையாக எதிர்பார்த்து மாடு பிடிக்கும் வீரனைப் போல் காத்திருக்க, இறுதியில் இந்தாண்டு சல்லிக்கட்டு இல்லை என்ற நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டு ஏமாந்த மாடுபிடி வீரனைப்போல்ஏமாந்து போனேன் என்பதே உண்மை. 

குட்டிக்கோராவை வாசித்தவர்களுக்கு திமில் பிடிக்காது என்பது உண்மைதான். அடுத்தடுத்து நல்ல படைப்புக்களைக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் சிவா.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...