திங்கள், 16 ஏப்ரல், 2018

கொடுக்காய்ப்புளி



ABU DHABI (UAE) யில் வேலை நிமித்தமாக BANIYAS கிழக்குப் பகுதிக்கு தொடர்ந்து செல்வேன், அங்கு ஒரு மிகப்பெரிய TRANSPORT நிறுவனம் உள்ளது.
அந்த நிறுவனத்தின் நுழை வாயிலில் ஒரு கொடுக்காய்ப்புளி மரம் இருக்கிறது, அந்த மரத்திற்கும் எனக்கும் நான்கு வருட காதல்!
ஒவ்வொரு வருடமும் April மாதம் மட்டும் பூச்சூடி, காயும், கனியுமாக தன்னைத் தானே அலங்கரித்து நிற்கும் அந்த மரம்.  நான் அந்த மரத்தை கடந்து செல்லும்போது, எனக்குள்ளே ஒரு தவிப்பு! காதலித்த காதலியை தொலைத்து நிற்கும் ஒரு மன நிலை! இருந்தாலும் தன் காதலி கண்முண்ணே சந்தோசமாக வாழ்வதை பார்க்கும்போது, கண் கசிந்து உப்பு நீர் உதட்டில் பட்டு இனிக்கிறது!
அந்த மரத்தில் காய்த்துக் கிடக்கும் காயை பார்க்கும் போதெல்லாம்  என்னை  விமானக் கட்டணம் இல்லாமல், விமான நிலையத்தில் Customs என்ற பேரில் எந்த ஒரு பிடுங்கலும் இல்லாமல், காற்றில் தவழும் தென்றலாய் என்னை  என் கிராமத்திற்கு அழைத்துச்செல்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலத்தில் சிவப்பான கொடுக்காய்ப்புளிகளை தின்பண்டங்களாக உண்ணாத சிறுவர், சிறுமிகள் இருந்திருக்கமாட்டார்கள்! அதில் நானும் ஒருவன்.
அதே நினைவோடு என் மனதை குழந்தையாக்கிக் கொண்டு என் கடந்த கால  நினைவுகளுடன் மரத்தின் அருகில்  சென்று இரண்டு காயைப் பறித்துத் தின்றேன், அதைப் பார்த்த இரண்டு காவலர்கள் (பாக்கிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர்கள்) பார்த்து ஏதோ போசி  சிரித்துக் கொண்டே இருந்தார்கள்! நான் அவர்களை மெல்லக் கடந்து செல்லும்போது, என்னைப் பார்த்து  நீ என்ன ஆட்டுக் குட்டியாஎன்று அவர்கள் என்னைப் பார்த்து  (ஹிந்தி   மொழியில்) கேட்டார்கள்.
பாவம் அவர்களுக்கு எப்படித் தெரியும் இதன் அருமை.
சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மையான மரங்களில் ஒன்றாக கொடுக்காய்ப்புளி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரத்தின் காய்கள் எளிதில் உதிர்வதால்உகாமரம் என்ற பெயரில் குறிப்புகள் காணப்படுகின்றன.

அது எப்படி இருக்கும் என்று குறுந்தொகை பாடல் எண் 274 தெரிவிக்கிறது. இந்தப் பாடலைப் பாடியவர் உருத்திரனார் என்னும் புலவர்.

புறவுப் புறத்து அன்ன புன்கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர
விடுகணை வில்லொடு பற்றிக் கோடு இவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்.

மருத்துவ குணம் கொண்ட கொடுக்காய்ப்புளி மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியன மாதவிடாய் சிக்கல், நீர்க்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பல நோய் களுக்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொடுக்காய்ப்புளிகள் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் சக்தியாக விளங்கியது.
ஆனால், இன்று கொடுக் காய்ப்புளியை அறியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தாத்தா பாட்டியை புதைத்துக்கொண்டே வருவதைப் போல், என் மொழி, என் விளையாட்டு, என் உணவு  என ஒவ்வொன்றாய் புதைந்து கொண்டே போகிறது, புதைத்துக் கொண்டே போகிறோம்.

பறவைகளின் எச்சங்கள் மூலம் கொடுக்காய்ப் புளி விதைகள் வீட்டுத் தோட்டங்களிலும் விழுந்து, வளர்ந்து பல்லுயிர் பெருக்கமும் உண்டானது. ஆனால், இன்று பறவைகளுக்கு உரிய உணவு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் கொடுக்காய்ப்புளி மரங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.



குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...