சனி, 30 மே, 2020

உப்பு நாய்கள் நாவல் விமர்சனம்


சில ஆண்டுகளாக சில எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டாமெனக் கடந்து போனதுண்டு, அப்படி வாசிக்க வேண்டாமெனக் கடந்துபோன  எழுத்தாளர்களில் திரு. லக்ஷ்மி சரவணக்குமாரரும் ஒருவர். கடந்த இரண்டு மாதங்களாக நான்கு சுவர்களுக்குள்ளேயே  இரவையும், பகலையும் கடத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதனாலேயே நான் இணையத்துக்குள் சிறைப்பட்டுப் போனன். சூரியனும், சந்திரனும் என்வீட்டு மின்விளக்கிற்குள் சிறைப்பட்டுப்போனது.

ஒரு எழுத்தாளரின் படைப்புகள் எதையும்  வாசிக்காமல் அவரைப்பற்றி, அவர் படைப்புகளைப் பற்றி நண்பர்களிடம்  விவாதிப்பது சற்று நெருடலாக இருந்தது. அதனால் கடந்தவாரம் இவரின் 'நீலப்படம்' நாவலை வாசித்தேன். நாவலாசிரியர் திரு. லக்ஷ்மி குமாரின் எழுத்துநடை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அக்கவர்ச்சியில் அவரின் படைப்புகளொன்றான 'உப்பு நாய்கள்' நாவலை வாசித்தேன்.

நாவலைப் பற்றிய சில விமர்சனங்கள் உங்கள் பார்வைக்கு.

இந்நாவலில் பேசப்படும் கதைக்களம், சென்னை நகரத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் அறியாமையையும், வாழ்வின் சூழலில் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள அவர்கள் கையாளும் குற்றச் செயல்களையும், அதனால் அவர்கள் படும்  வதையையும் பேசுகிறது. பேசப்படவேண்டிய முக்கியமான கதைக்கருவென்றாலும், அது நேர்மையாகப் பேசப்பட்டிருக்கிறதா என்றால் இல்லையென்பேன்.
இந்நாவலில் பேசப்படும் கதாபாத்திரங்கள்.

மணியும் சம்பத்தும் நண்பர்கள். நண்பன் சம்பத்தின் தாயை மணி அபகரித்துக்கொள்ள, அதன் பொருட்டு தன் தாயை நடுரோட்டில்  அம்மணமாக்கி ஓடவிடுவதும், மணியின் ஆணுறுப்புத் துண்டித்து தன் தாயிடமிருந்து பிரிக்க நினைப்பது மிகவும் வக்கிரத்தோடு எழுதப்பட்டிருக்கிறது.

சின்ன சின்ன திருட்டைச் செய்துகொண்டிருந்த செல்வியும், தவிடும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் மாட்டிக்கொள்ள அங்கே மற்றொரு கைதியான லட்சுமியோடு நட்புக் கொண்டு ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சார வேளைகளில் ஈடுபடுகிறார்கள்.

சென்னை ஆர்மீனியன் தேவாலய பாதிரியார் திருட்டு, கடத்தல், கன்னிப்பெண்களை பாலியலுக்கு உட்படுத்துவதும், கன்னியாஸ்திரிகள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள சுய இன்பம் கொள்வதாகவும்... ரவுடிகளின் கைவசம் தஞ்சமடைவதாகவும், பாஸ்கரன் காமத்துக்காக பிச்சைக்காரிகளைத் தேடியலைவதையும்  அதீத காமத்துடன் எழுதியிருக்கிறார். காமமும், குற்றச் செயல்களும் கூவத்தைப் போல் நாவலில் இரண்டு பாதியிலும் தேங்கி நிற்கிறது.

ஆரம்பத்தில் குருவியாகக் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கோபால் ஆட்டிறைச்சிக்குப் பதிலாக நாய்க்கறி விற்பதாய் கதை விரிகிறது... இக்கதாபாத்திரம் சிறப்பாகப் பேசப்படவேண்டியதொன்று... ஆனால் பேசப்பட்டதா..? சமீபத்தில் நாம் எல்லோரும் செய்தித்தாள்களில் வாசித்ததென்றாலும் இன்னும் நகரத்திற்குள் நடந்துகொண்டிருப்பது இச்செயல் அவலத்தின் உச்சம்தான்.

மகேஷ், ஷிவானியின் உறவு மிகக் கொச்சையாக இருந்தாலும், மகேஷ் பெண்களை பாலியல் இச்சைக்குற்படுத்தி, அந்தக் காணொளியை இணையத்திலும், நட்பு வட்டத்திலும் பகிர்வதையறிந்த ஷிவானி மகேசை தண்டிக்கும் இடத்தில் நாவல் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தது.
இரண்டாம் பாதி பிழைப்புத் தேடிசென்னை வரும் ஆதம்மாள் குடும்பம் மற்றும் கட்டிடத்தொழிலில் ஈடுபடும் மக்களைப் பற்றி விவரிக்கிறது... எண்ணற்ற கனவுகளுடன் சிறகை விரித்துப் பறக்கும் முன் அதன் சிறகை உடைக்கும் குழந்தைத் தொழிலாளி ஆதம்மாள், கணிப்பொறியாளர் ஆர்த்தி இருவரின்  கதாபாத்திரங்கள் இயல்பை மீறிப் பேசப்பட்டிருந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தது.

இரண்டு பாதியாகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும் இரண்டிற்கும் வேறுபாடுகள் எதுவுமில்லாமல் காமம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.
நகரத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வு மற்றும் அவர்களின் குற்றச் செயல்கள் குறித்தெழுதும்போது ஒரு எழுத்தாளர்  சமூக அக்கறையுடனும் எழுதவேண்டும். எந்த அக்கறையுமின்றி மனம் போன போக்கில் எழுதுவது நாகரிகமற்ற செயல்... இச்செயலைத்தான் இந்நாவலாசிரியர் செய்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை எழுதும்போது அவர்களுக்குள் இருக்கும் நற்பண்புகள் குறித்தோ, அவர்களுக்கு இருக்கும் வாழ்வியல் சிக்கல்கள் குறித்தோ எதுவும் எழுதப்படவில்லை. வெறும் காமத்தையும், அவர்களின் குற்றச்செயல்களையும் பற்றியே எழுதப்பட்டிருக்கிறது.

இந்நாவலை வாசிக்கும்போது விளிம்பு நிலை மனிதர்களென்றால் கஞ்சா விற்பவர்கள், விபச்சாரம் செய்பவர்கள், நாய்க்கறி விற்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற கட்டமைப்பிற்குள் வாசிப்பவனைத் தள்ளுவது வன்மையான செயல். அம்மக்களின் மீது சிறு கரிசனையோ, அக்கறையோ ஏதுமற்று ஒரு எழுத்தாளர்  எழுதுவது பொறுப்பற்ற செயல் அப்பொறுப்பற்ற செயலைத்தான் நாவலாசிரியர் செய்திருக்கிறார்.

நாவல் முழுக்க கதை மாந்தர்கள் மாறிமாறிப் பாலியல் வண்புணர்வில் ஈடுபடுவதும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதுமாய்த்தான் காட்சிப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு புணர்ச்சியும் நீண்ட நேரம் நீடிக்கிறது என்பதை விலாவாரியாக விவரித்து எழுதியதை வாசிக்கையில் நகராட்சி கழிவறைக்குள் எழுதப்பட்டிருக்கும் வாசகம்போல் இருந்தது.....இதெல்லாம் இலக்கியமென்றால் நாளைய தலைமுறை நகரத்தின் கழிவறைகளை வாசிக்க வேண்டியதாகிவிடும். தயவுசெய்து நாளைய தலைமுறையைக் கழிவறைக்கும் பூட்டிவிடாதீர்கள்.

ஞாயிறு, 24 மே, 2020

சிலையும் நீ சிற்பியும் நீ- மனச்சிறையில் சில மர்மங்கள்

நாகூர் ரூமி - சிலையும் நீ சிற்பியும் நீ

ரூபியின் கட்டுரைகள் மனமென்பது மிகப்பெரிய சக்திவாய்ந்ததாகவும், நாம் எதை அடைய நினைக்கிறமோ அதன்மீது தீர்க்கமான நம்பிக்கை வைத்தோமானால் அதனை அடைவது எளிது என்றும். நம் எதிர்காலத்திற்கான விதைகளை நம் மனமே நமக்குள் தூவுகிறது என்றும், நம் மனதை சரியாக அணுகினால், சரியாகக் கையாண்டால் நம் விருப்பங்களை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை விதைக்கிறது.!
மனம் வலிமையானதாக இருந்தால் எதையும் அடைவது சாத்தியம் என்பதற்கு ஆதாரமாக பல சம்பவங்களையும், பல வெற்றிபெற்ற மனிதர்களையும் ஆதாரமாக ரூமியின் கட்டுரைகள் நமக்கு விளக்குகிறது...! மொத்தத்தில் நம் சிந்தனைகள் அத்தனையும் நம் மூளைக்குள் இருந்தாலும், மனம் ஒன்றுதான் நம்மை கட்டுப்படுத்துவதாகவும், நம் மனதை ஒருநிலைப்படுத்தினால் வெற்றிபெறலாம் என்பதையே அறிவுறுத்துகிறது.

மருத்துவர் ஷாலினியின் - மனச்சிறையில் சில மர்மங்கள்
மனம் என்பது என்ணங்களின் கூட்டமைப்பு, நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழிநடத்திச் செல்வதாகவும், மனதால் முடியாதது எதுவுமில்லை என்கிறது. அதே சமயத்தில் மனம் என்பது ஒரு அற்புதமான கருவி அதை சரியாக கையாண்டால் அதைப்போல் அதிசயமான உறுப்பு வேறொன்றுமில்லை என்கிறது.
இதற்கு ஆதாரமாக பல சம்பவங்களையும், உடல்ரீதியாக ஏற்படும் ரசாயன மாற்றத்தையும், அதற்கான தீர்வையும் கொடுக்கிறது. மொத்தத்தில் சரியான தூக்கம், சரியான உணவு, மன அழுத்தமின்றி இருந்தால் மனதை எளிமையாகக் கையாளலாம் என்ற தீர்வை தந்திருக்கிறார் மருத்துவர் ஷாலினி. மனதை உங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இந்த உடலை வெற்றியோடு வழிநடத்தலாம் என்கிறார்.
இந்த இருவரின் கட்டுரைகள் அறிவியலும் ஆன்மீகமும் சேர்ந்து ஒன்றை மட்டும் நமக்கு ஆழமாக வலியுறுத்துகிறது. “மனதை கையாள்வது எப்படி”
இந்த இக்கட்டான காலகட்டத்தில் சோகம், மன அழுத்தம், மனக்குழப்பம், பயம், தூக்கமின்மை ஏற்படுவது இயல்புதான். எனவே எதிர்மறை எண்ணங்களை சிந்திக்காமல் எப்போதும் நல்ல எண்ணங்களை ஆளுபவராய் நீங்கள் முயற்சி செய்தால் கெட்டவற்றை நெருங்கவிடாமல் அமைதியான மன நிறைவை அடையலாம் என இதுபோன்ற கட்டுரைகள் நமக்கு உணர்த்துகிறது.

ஞாயிறு, 10 மே, 2020

எதிர்சேவை புத்தக விமர்சனம்

எதிர்சேவை புத்தக விமர்சனம்
எழுத்தாளர்: பரிவை சே. குமார்
பதிப்பகம்: கலக்கல் ட்ரீம்ஸ்
மனதில் அழுத்திக்கொண்டிருக்கும் சுமைகளை இறக்கி வைக்க எப்போதும் ஒரு நெருங்கிய நட்பு வேண்டும், பரிவை சே. குமார் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் பழக்கம் என்றாலும், என் மனச்சுமையைத் தாங்கும் தோள்கள் கொண்ட நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டார்.
மண்ணின் மனம் மாறாத அவரின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது, ஆனாலும் அவரின் சிறுகதைகள் புத்தகமாக வெளிவரவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. என்னைப்போன்ற பல நண்பர்களின் உந்துதல் மூலம் இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
குமார் கதையைத் தேடி எங்கும் செல்லாமல் தன்னோடு வாழும் எளிய மக்களின் நடைமுறை வாழ்க்கையிலிருக்கும் ஏராளமான கதைகளில் சிலவற்றை எடுத்து எந்தவொரு வார்த்தை அலங்காரமும் இல்லாமல் கதையை தென் தமிழக மக்களின் வட்டார மொழிகளுடன் இயல்பாக எழுதியதின் மூலம் இச்சிறுகதைத் தொகுப்பில் பனிரெண்டு கதைகளும் உயிர்ப்போடு இருக்கிறது.
ஒவ்வொரு கதைகளையும் நான் வாசிக்கும்போது நான் கடந்துவந்த பாதையில் மீண்டும் பயணிப்பது போலவே இருந்தது. அதில் என்னைக் கவர்ந்த சில கதைகள்.
ஆணி வேர்.
பொதுவாக வெற்றிபெற்ற காதல் திருமணங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை...அதே நேரத்தில், தோல்வியடைந்த காதல் திருமணங்கள் காலம் கடந்தும் அடுத்த தலைமுறைவரை நகர்த்தப்படுகிறது, அந்த நகர்வின் ஒரு பகுதியைத்தான் ஆணி வேர் உணர்த்துகிறது, குடும்ப உறவுகளின் நம்பிக்கையிலிருந்து தன்னை அகற்றிக்கொண்ட அபிராமி காதல் திருமணம் செய்துகொண்டால், அபிராமி எதிர்பாராத ஒரு விபத்தில் தன்னிலை மறந்துபோக... ராம் அவனில் நினைவுகளைமீட்டெடுக்க அவளின் தாயிடம் அழைத்துச் செல்கிறான்.. அங்கே வெறுப்புகளைக் கலைத்து தாயும் மகளும் கட்டியணைத்துக் கொண்டது மனதை நெகிழச் செய்தது....ஆணி வேர் ஒருபோதும் சல்லிவேரை நிராகரிப்பதில்லை.
தீபாவளிக் கனவு
கதையில் சுந்தரி உறவுக்காரர் மூலம் தெரிந்த வீட்டிற்கு வீட்டு வேலைக்குப் போகிறாள்... வயதுப்பெண்ணை வீட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு, அக்கம் பக்கத்தில் நடக்கும் சம்பவங்களைக் கேட்டுப் பதறும் தாய்... மூன்று ஆண்டுகளுக்குப் பின் வீட்டில் எல்லா உறவுகளோடும் சேர்ந்து இத்தீபாவளியைக் கொண்டாட நினைக்கும் சுந்தரிக்கு சில தடங்கல்கள்...! ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணின் வலிகளை, நியாயமான ஆசைகளை, அவளுக்குள் இருக்கும் நினைவுகளை ஒவ்வொன்றாய் நினைக்கையில்...என் நினைவுகளின் அடுக்குகளில் மறைந்திருந்த சில பக்கங்களை அனிச்சையாக புரட்டத் தொடங்கியது... ! என் சிறுவயதில் ஒவ்வொரு தீபாவளிக்கும் வறுமை என் வீட்டிற்குள் அமைதியாக வெடிக்கும், வெளியில் நான் வெடிக்காத ஊமை வெடியாகிப் போவேன், இப்படி என் கடந்த கால தீபாவளி நாட்களையும், எனக்கும் என் தாத்தாவிற்குமான நினைவுகளைப் புதுப்பித்தது.
எதிர் சேவை
உறவுகளைச் சேர்ப்பதிலும், பிரிப்பதிலும் திருவிழாக்களுக்கு முக்கியப் பங்குண்டு,என் பால்ய காலத்தில் பரமக்குடியில் நடக்கும் சித்திரைத் திருவிழாவை நினைவுபடுத்தியது... ஆற்றில் அழகர் இறங்குவதற்கு முன் இரவு முழுவதும் பரமக்குடி ஆற்றில் சுற்றித்திரிவதும்...பின் மறுநாள் காலையில் அழகர் வேடமிட்டுத் துருத்தி நீர் தெளிப்பவர்கள், திரியெடுத்து ஆடுபவர்கள் தப்பு தவிலுமாக ஒரு கூட்டமே ஆடி வருவதைப் பார்த்துவிட்டு...இரண்டுநாள் கழித்து வீட்டுக்குப் போவேன்.... அங்கே என் அப்பா சாட்டைக் கம்பெடுத்து இடும்பன் வேடமிட்டு நிப்பார்...ஆற்றில் அழகர் இறங்கியதும் நான் வீட்டை விட்டு இறங்க வேண்டியதாகிவிடும்..! கடந்த இருபது ஆண்டுகளில் எந்தத் திருவிழாவையும் பார்க்காத எனக்கு இச் சிறுகதையை வாசிக்கையில் திருவிழா பார்த்த ஞாபகம்.
வீராப்பு
இச் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த நெருக்கமான சிறுகதை,
நிகழ் காலத்தை கரம் பிடித்து நடக்கத்தெரியாமல், கடந்த காலத்தில் தவழும் சாமிநாதன் போன்ற முதியவர்களைக் கடக்காமல் கிராமப்புறங்களில் யாரும் பயணித்திருக்க முடியாது.
சாமிநாதன், டீ குடிப்பது, அவர் குடித்துவிட்டு வைத்த டம்ளரில் ஈக்கள் சண்டைபோடுவது, ஒரு செம்பு தண்ணீர் எடுத்து முகம் கழுவிவிட்டு துண்டை உதறி முகம் துடைப்பது, போயிலை போட்டுவிட்டு எச்சியை புளிச்சென்றும் தரையில் துப்ப, அது மண்ணில் உருண்டு திரண்டது...அதன் மீது ஈக்கள் உட்கார்ந்து பறந்தது... இப்படி நம்முடனே பயணிக்கும் சில யதார்த்தவாதிகளைப் பற்றி நம் அறிந்துகொள்ள முற்படுவதில்லை..! இந்த எதார்த்த மனிதர்களின் வாழ்க்கை நம்மை வெகுவாக பிரதிபலிக்கின்றன, வழிநடத்துகின்றன...! இப்படி எதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை வட்டார வழக்கில் எழுதும் சில எழுத்தாளர்களில் பரிவை சே. குமாரும் ஒருவர்.

சனி, 2 மே, 2020

Article 15 இந்தி திரைப்பட விமர்சனம்

இன்று நான் பார்த்து ரசித்த இந்தி திரைப்படம் Article 15 (பார்வையாளர்களுக்கு படமில்லை, ஒரு பாடமாக அமைந்துள்ளது)
இத்திரைப்படம் இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைப் பேசுகிறது...!
1. சம உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை
4. சமய சார்பு உரிமை
5. கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
6. அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை
இந்திய அரசியலமைப்பில் மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பதைத் தடைசெய்கிறது என்ச் சட்டம் சொல்கிறது! ஆனாலும் கூட இன்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளில் சாதி மத மோதல்கள் எந்த ரகசியமின்றி வெளிப்படையாகவே நடந்துகொண்டிருக்கிறது.
படத்தில் ஒவ்வொரு வசனங்களும், சைகைகலும், அதிகார வர்க்கத்தின் அதிகாரக் குறியீடாக இருக்கும், அது எல்லாச் சலுகைகளும் பெற்று அனுபவிக்கும் கண்களுக்குப் புலப்படாது!
படத்தின் தொடக்கத்தில் ஒரு மனிதன் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஒரு சாக்கடைக்குளிக்குள்ளிருந்து அவன் உடல் முழுவதும் சாக்கடைக் கழிவுகள் வழிந்தோடிய நிலையில் வெளியே வாருகிறான்....! அந்தக் காட்சி அதிக விளக்கமின்றி அதன் கொடூரத்தின் அனைத்துப் பகுதிகளையும் அமைதியாக, நேர்மையாகப் பேசுகிறது....!
இப்படத்தைக் காணும் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு விசத்தையும் தெளிக்காமல், ஆர்டிக்கல் பதினைதிற்க்கும் மக்கள் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டைத் தெளிவாக எடுத்துறைத்த இயக்குனருக்கு
எனது பாராட்டுக்கள்.
திரைக்கதை இயக்கம் : அனுபவ சின்ஹா
நடிகர்கள்: ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பஹ்வா, குமுத மிஸ்ரா, முகமது சீஷன் அய்யூப், ஆஷிஷ் வர்மா, சயனி குப்தா, இஷா தல்வார், மற்றும் நாசர்.
கதைச்சுருக்கம்:
(ஆயுஷ்மான் குர்ரானா) அயன் ராசனாக நடிக்கிறார், புதிதாக ஐபிஎஸ் அதிகாரி உத்தரப்பிரதேசத்தின் அக்குள் உள்ள லல்கான் என்ற சிறிய நகரத்திற்கு அனுப்பப்பட்டார்....!
இந்தியாவின் சாதிய அடுக்குநிளைகளின் மேல்மட்டத்திலிருந்து முற்ப்போக்குச் சிந்தனையுடன் விழித்தெழுந்த நகர்ப்புற இளைஞர், ஆனால் அவருக்கு இந்தியாவின் சாதிக் கொடுமையின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பெரிதும் அறியப்படாதவர்.
பதவியேற்க கிராமத்திற்கு வரும்போதே அவரது காதலி அதிதியுடன் (இஷா தல்வார்) உரையாடிக்கொண்டே வருகிறார்....பாசி சமூகத்தின் கிராமத்திலிருந்து அவரால் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்க முடியாது என்பதை உணர்ந்ததில் அதிர்ச்சி ஏற்படுகிறது!
ஒரு கிராமத்திற்கு கூடுதல் கமிஷனராக பணியேற்று வருகிறான் அயன். அதே நாளில் வெறும் மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக காணாமல் போகிறார்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள்.
காவல்துறை மிகவும் மெத்தனமாய் அந்த வழக்கை கையாள்வதை அயன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காணாமல் போன பெண்களில் இருவர், ஊருக்கு நடுவே ஒரு மரத்தில் தூக்கில் மாட்டப்பட்டு இறந்து போயிருக்கிறார்கள்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர்கள் கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று சொல்கிறது....! ஆனால் அந்த அறிக்கையை மறைக்க காவல்துறையிலேயே ஒரு சதி நடக்கிறது....!
இந்த வழக்கின் வழியாக விரிகிறது அங்கு கெட்டியாக உறைந்திருக்கும் சாதிப் படிநிலைகளும், அது மக்களின் மேல் செலுத்தும் ஆதிக்கமும், வன்முறையும்.
இதை உணரும் அயன் அந்த வழக்கில் முழுமையாக ஈடுபட்டு, காணாமல் போன மூன்றாவது பெண்ணை கண்டுபிடிக்கவும் இறந்து போன இரண்டு பெண்களின் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தரவும் முற்படுகிறான்....!
சாதியின் அதிகாரநிலைகள் மூலம் அயனின் முயற்சிகளும், அதனால் ஏற்ப்படும் தடைகளும், அதற்கு அயனின் எதிர்வினைகளுமே படத்தின் திரைக்கதை.
அங்குள்ள சமூகக் கொடுமைகள், சாதாரண மனிதனான அவனுக்குள் என்ன மாற்றங்களை நிகழ்த்தும் என்பதை அருமையாக விளக்குகிறது இத்திரைப்படம்.
சாதிய ஆதிக்கத்தை பின்பற்றும் சமூகத்தின் வெவ்வேறு அடுக்கில் உள்ளவர்கள் தேவைக்கேற்ப கைகோர்த்துக் கொள்வதும், அதே தேவைக்கேற்ப ஒன்றுக்கொன்று முதுகில் குத்திக்கொல்வதையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார் படத்தின் இயக்குனர்.
படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் கூர்மையான ஆயுதம்போல் வன்முறையின்றி கருத்துக்களை விதைக்கிறது...! எல்லோரும் சமம் என்றால் ராஜாவாக யார் இருப்பார்?? என்ற கேள்விக்கு, ராஜாவாக ஏன் இருக்க வேண்டுமென்ற பதிலும் வசனத்தில் வெளிப்படுத்தப்படுவது ஜனநாயகம் என்றால் என்னவென்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
மொத்தத்தில் பார்க்கவேண்டிய படமில்லை, படிக்கவேண்டிய பாடம்.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...