வெள்ளி, 26 நவம்பர், 2021

ஸ்னெஹி எனும் நாய் புத்தக விமர்சனம்

சகோதரர் கவிஞர் சிவமணி அவர்கள் எனது நண்பர்கள் மூலம் எனக்கு அறிமுகமானபோது 'மௌனச் சிதறல்கள்' என்னும் கவிதை நூலை வெளியிட்டிருக்கும் கவிஞராகத்தான் அறிமுகம் செய்யப்பட்டார். அவரின் கவிதைத் தொகுப்பில் ஒரு சில கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானதாகவும், பள்ளிப் பருவத்தில் நான் கடந்துவந்த பாதையை மீட்டெடுக்கும் விதத்திலும் இருந்தது. 

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவரின் கவிதைகளைப் பற்றி நிறைய பேசியதுடன் அடுத்தடுத்து நீங்கள் வெளியிடப் போகும் உங்கள் கவிதைத் தொகுப்புகள் வெறும் காதலை மட்டுமே பேசாமல், இச்சமூகத்தின் மீது பாசி போல் படர்ந்திருக்கும் அழுக்குகளையும் சுட்டிக்காட்டும் தொகுப்புகளாக மலரட்டும் என்று சொன்னேன். 

அவர் எழுதிய 'ஸ்னெகி எனும் நாய்' சிறுகதைகதைத் தொகுப்பை ஆசிப் மீரான் அண்ணாச்சியின் சத்திரத்தில் நடந்த பிலாலை வழியனுப்பும் விழாவுக்குச் சென்றபோது எனக்குக் கொடுத்தார். வாசித்துவிட்டு சில வரிகளையாவது எழுதாமல்  என்னால் இருக்க முடியவில்லை. இச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்துக் கதைகள் இருக்கிறது அந்த பத்துக் கதைகளையும் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள நண்பர்களின் அனுபவத்தையும் வைத்தே எழுதியிருக்கிறார் என்பதை வாசிக்கும் போது நம்மால் உணரமுடிகிறது.

முதல் கதையின் கதைக்கரு இச் சமூகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் காலம்காலமாகத் தூக்கிச் சுமக்கும் மனநிலையை ஒத்ததாக இருக்கிறது. தன் பிள்ளை முதல் மார்க் வாங்க வேண்டும் என்ற பேராசை இருக்கிறதே தவிர தன் பிள்ளையைச் சிறந்த மனிதனாக வளர்க்க நினைப்பதில்லை என்ற உண்மை கதையில் விரியும் போது வருத்தத்தையே தருகிறது. அதிலும் மிகப்பெரிய வலியைத் தரக்கூடியது ஸ்பெசல் சைல்ட் என்று சொல்லப்படும் சற்றே மனவளம் குன்றிய குழந்தைகளை வளர்ப்பதுதான். அப்படி ஒரு குழந்தையைப் பார்த்துப் பார்த்து வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய சவாலாக காரியம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இறைவன் எல்லோருக்கும் அந்தப் பாக்கியத்தை கொடுக்கமாட்டான் அந்தக் குழந்தையை வளர்த்தெடுக்க தகுதியான பெற்றோர்களிடம் மட்டுமே அந்தக் குழந்தைகளை இறைவன் கொடுக்கிறான் என்பதுதான் உண்மை. அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் கடவுளுக்கு மேலானவர்கள். இக்கதையில் அப்படி ஒரு தகப்பன் தன் மகன் மதிப்பெண் பெறவில்லை என்று வருந்தும் தகப்பனுடன் பேசுவது சிறப்பாக வந்திருக்கிறது. இக்கதை என் மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்தது.

ஸ்னேகி என்னும் நாய் கதைதான் புத்தகத்தின் தலைப்பாக இருந்தது, நாய் வளர்ப்பில் பலருக்கும் இருக்கும் சிக்கல்கள்தான் இக்கதைச் சுருக்கம், பணிச்சூழல்கள் காரணமாக பல இடங்களில் வீடு மாறும்போது அல்லது ஊர் விட்டு ஊர் போகும்போது கூடவே தன் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளை கொண்டு போகமுடியாமல் எங்காவது ஒரு இடத்திலோ அல்லது தெரிந்த நபர்களிடமோ விட்டு விட்டு செல்லும்போது அந்தப் பிராணிகளை விட்டுப் பிரியமுடியாத உளவியல் சிக்கல்களை சொல்கிறார். ஆடு வளர்ப்பது அறுக்கத்தான் என்று தெரிந்தாலும் அந்த ஆட்டை கரிக்கடைக்காரரிடம் விற்றுவிட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் படுத்து அழும் என் அம்மாவின் நினைவுகளை எனக்கு இக்கதை ஞாபகத்தில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது. பொதுவாக எந்த ஒரு பிராணியையும் வீட்டில் வைத்து வளர்த்துவிட்டால் அதைப் பிரிவது எவ்வளவு மன உளைச்சலைக் கொடுக்கும் என்பதை நான் அறிவேன். அது இக்கதையில் நன்றாகக் கடத்தப்பட்டிருந்தது.

உயில் என்ற சிறுகதை. மனிதனுக்கு மட்டுமே இறப்பின் மீது பயம் வருகிறது. மனிதனுக்கு மட்டுமே எது வாழ்வு, எது சாவு, எது மறையக் கூடியது எனத் தெரிந்தும், தன் இளமையில் முதுமைய நோக்கிய சிந்தனைகளும் உயிர் பயமும் வருகிறது. இருக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை என்று தெரிந்த மனிதன் பொருள் தேடுவதிலையே தன் வாழ்வை இழந்து விடுகிறான். மனித வாழ்வில் இருக்கும் சிக்கலை தனது கேள்விகள் மூலம் முடிவதும், அதே கேள்வியைக் கொண்டே அம்முடிச்சை அவிழ்ப்பதுமாக இக்கதையை நகர்த்திருப்பது பாராட்டுக்குரியதாக இருக்கிறது. 

வாக்கு என்ற கதை வாடகை வீட்டில் இருக்கும் சிக்கல்களை பேசுவதுடன், ஒரு மனிதனுக்கு வீடு என்பது வாழ்விடம் மட்டுமில்லை அது ஒரு அடையாளம் என்பதைச் சொல்ல வந்தாலும் வேறு பாதையில் நகர்ந்து மேலோட்டமாகவே பேசுகிறது என்பதால் கதையில் அழுத்தமில்லை. இக்கதையின் போக்கை சற்றே மாற்றி இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் சிறப்பான கதைகளில் ஒன்றாக இருந்திருக்கும்.

கின்டில் என்ற கதை புத்தகப் பிரியரான பவித்ரன் பிழைப்புத் தேடி தாய்நாடு விட்டுப் போகும்போது அங்கே புத்தகம் வாசிக்கமுடியாமல் போவதையும் அதற்காக அவன் படும் பாட்டையும் பேசி மற்றொரு பக்கமாய் நகர்கிறது. அவன் புத்தகத்தையும், தாய் மண்ணின் அருமையை உணர்வது தான் கதைக் கரு என்றாலும் சில இடங்களை வாசிக்கும்போது ரொம்பவும் மிகைப்படுத்தி எழுதியிருப்பது போல் தோன்றியது.

தாயுமானவர், ராசி மற்றும் ஆயில்யம் இந்த மூன்று கதைகளையும் மற்ற கதைகளுடன் ஒப்பிட்டு நோக்கினால் இக்கதைகளின் எழுத்துநடையில் சிறப்பான மாற்றம் தெரிகிறது. அந்த எழுத்து நடை கதையை அழகாய் நகர்த்துக்கிறது. இது எழுத்தாளரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இக்கதைகளில் ஆசிரியர் பிற்போக்குத்தனத்தையே அதிகமாய் புகுத்தியிருக்கிறார்.

ஒரு ஆண் இல்லையென்றால் பெண்ணால் வாழமுடியாது என்பதைப் போலவும், பெண் என்பவள் ஆண்களின் அரவணைப்பில்தான் வாழமுடியும் என்பதைப் போலவும் இக்கதைகளைச் சொல்லியிருக்கிறார். உண்மையில் மனைவி இறந்துவிட்டால் ஆண் தனியாக பிள்ளைகளை வளர்க்க முடியாது, ஆனால் அதே நேரத்தில் கணவன் இல்லாத ஒரு பெண்ணால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும். அது மட்டுமில்லாமல் பெண் என்பவள் தனக்கான வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுய சிந்தனைகளற்ற சடலமாகவும், தன் வாழ்க்கையை ஏதோ ஒரு சூழ்நிலையில் மற்றவர்கள் விருப்பத்திற்கு வாழ்வது போலவும், ராசி பலன் நேரம் சரியில்லை போன்ற பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்ட கதைகளாகவே இவைகள் இருந்தது. 

மொத்தத்தில் எழுத்தாளர் சிவமணி எடுத்துக்கொண்ட அத்தனை கதைக்கருவும் அவசியம் பேசப்படவேண்டியவை ஆனால் அவர் அவற்றைச் சரியாக பேசவில்லை என்பதுதான் எனக்கு இக்கதைகளில் குறையாகத் தெரிந்தது. இச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் சில குறைகளை அவரிடம் நேரடியாக பேசிவிட்டேன் என்பதால் இங்கு குறைகளைச் சுட்டி எழுத வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

எழுத்தாளர் சிவமணிக்கு இது முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதாலும் சரியான நண்பர்களின் வழிகாட்டுதல் இல்லையென்பதால் சில குறைபாடுகள் இருந்தது உண்மைதான். அத்தனை குறைகளையும் களைந்து அடுத்த புத்தகம் இன்னும் சிறப்பான கதைக்களங்களுடன் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவமணியின் வேட்கையும் எழுத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான். அது நிச்சயம் நடக்கும். 

உங்கள் எழுத்துக்கள் மென்மேலும் சிறப்பாக அமைய என் அன்பும் வாழ்த்துகளும் சிவமணி.

-பால்கரசு- 

27/11/2021

வியாழன், 18 நவம்பர், 2021

ஷார்ஷா பன்னாட்டு புத்தகக் கண்காட்சி

 கடந்த ஒரு மாதமாக கடுமையாக பணிச்சூழலுடனும் முதுகு வலியுடனும் அவதிப்பட்டுக் கொண்டிருந்த என்னை, 'நீயும், நித்யா குமாரும் எப்படியாவது வந்தே ஆகவேண்டும்'  எனப் பாலாஜி அண்ணன்  அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர் குழும புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைத்தபோது மறுக்க முடியவில்லை. 

'என்ன செய்யலாம்? போவோமா இல்லை வேண்டாமா..?' என்ற எண்ணற்ற கேள்விகளுடன்தான் குமாரை அழைத்தேன்.  முடிவு  உங்கள் கையில் நீங்கள் செல்வதாக இருந்தால் மட்டுமே நானும் வருவேன் என்பதால் உங்க முடிவைப் பொறுத்தே நானும் முடிவெடுக்க இயலும் என்று சொல்லி எனது அத்தனை கேள்விகளையும் தூண்டில் நரம்பை நண்டு நறுக்கி விடுவதைப் போல 

இது நமது குழும நிகழ்வு அனுமானாக இல்லையென்றாலும் அணிலாகவாது இருக்க வேண்டுமென்ற ஆசையும் அக்கறையும் எனக்குள் இருக்க,  சரி போகலாம் என முடிவு செய்தேன். அதன் பின் 'எனக்கு அபுதாபியில்தான் இன்று வேலை... மூன்று மணிக்கு மேல் நாம் அங்கிருந்து கிளம்பலாம் 'என்று குமாரிடம் பேசி முடிவு செய்து அதன்படி மூன்றரை மணிக்கு அவரின் அலுவலகம் சென்று அழைத்துக் கொண்டேன்.

நாங்கள் இருவரும் நான்கு மணிக்குப் புறப்பட்டு மெதுவாக பேசிக்கொண்டே பேனோம். 

எப்பொழுதும் வியாழக்கிழமை மாலைப் பொழுதில் ஷேக் சயீத் ரோடு வாகன நெரிசல்களுடன் இருக்கும், அதுவும் நேற்று அநியாயத்திற்கு வாகன நெரிசலுடன் ஆங்காங்கே காதலன் காதலியும் முத்தமிட்டுக் கொள்வதைப் போல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முத்தமிட்டுக் கொள்ள. ஜெபல்அலியைக் கடக்கவே இரண்டு மணி நேரம் ஆனது. 

கந்தூத்தில் கொஞ்சம் இடுப்பு வலியைப் போக்கலாம் என்று நினைத்து, இதமான குளிர்காற்றை உடம்பில் வாங்கியபடி பேசிக் கொண்டே டீ சாப்பிட்டு,  இடுப்பு வலியையும் சற்றே குறைத்து மீண்டும் பயணப்பட்டோம். அண்ணன் பாலாஜி சொன்னதைப் போல இந்த இடுப்பு மட்டும் இல்லையெனில் இன்னும் இரண்டு நாள் கூட அன்னம் தண்ணி இல்லாமல் கார் ஓட்டுவேன். 

துபாய் நகரம் எனக்கு எவ்வளவு பழக்கப்பட்ட இடமாக இருந்தாலும் கூட போக வேண்டிய இடத்திற்கு சரியாக என்னால் எப்போதும் போக முடிவதில்லை, துபாய் நகரம் இரவு நேரத்தில் பருவ வயதில் முதல் காதலியின் புன்னகையை போல் புன்னகைக்க, நான் சாலையை மறந்து தடுமாறிப் போவது வழக்கமாகிப் போகிறது ஒவ்வொரு முறையும். அதேதான் இந்த முறையும்.

தொடர்ந்து வாகன நெரிசலுக்கிடையில் ஷார்ஷாவை நெருங்கிய பொழுது அண்ணன் பாலாஜிடமிருந்து அழைப்பு வந்தது. எந்த இடத்தில் வருகிறீர்கள் என்றார், குத்து மதிப்பாக ஷார்ஷா பாலத்திற்கு அடியில் வந்துவிட்டேம் என்றதும், 'ரொம்பச் சந்தோசம்... அண்ணாச்சி வீட்டிற்கு போக வேண்டாம்... நேர புக்பேர் போங்க... நானும் வந்துவிடுகிறேன்' என்றார். 

புக் பேர் போகும் வழியை அண்ணன் குமார் சரியாகத்தான் சொன்னார் இந்த வண்டி என்னவோ மதுரையை சுற்றிய கழுதை வெளியில் எங்கேயும் தங்காது என்பதைப் போல் அண்ணாச்சியின் சத்திரத்தைச் சுற்றியே வர கூகுள் வழிகாட்டியை நாடவேண்டியதாகிப் போச்சு எங்களுக்கு. 

அப்பவே அப்பனாத்தா பேச்சைக் கேட்காதவன் இப்ப கூகுள் பேச்சைக் கேட்கப் போறேன். அது மூணாவது வழியில போன்னு சொன்னா நான் ரெண்டுல போவேன். இப்படிக் கூகுள் ஒருபுறம் வழிகாட்ட, நான் ஒருபுறம் போக, எப்படியோ புத்தகக் கண்காட்சி அரங்கை அடைந்தோம்..., ஒன்றரை மணி நேரப் பயண தூரத்தை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு மேலாக ஆக்கிவிட்டது. அபுதாயிலிருந்தே ஆரம்பித்த வாகன நெரிசல். தொடர்ந்து வாகன விபத்துக்களைப் பார்த்தும் கூட வாகன ஓட்டிகள் எப்பவும் போல் நான் முந்தி நீ முந்தி எனப் பயணித்தது வேதனைக்குரியது. 

புத்தகக் கண்காட்சிக்கு உள்ளே நுழைந்ததும் தமிழ் புக் ஸாடால் எங்கே இருக்கிறது என்று தேடி அலைந்தும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. எவ்வளவு நெரிசலான திருவிழாக் கூட்டத்திலும் தாயின் சேலையை அடையாளம் கண்ட பிள்ளையைப் போல அண்ணன் பாலாஜியை அடையாளம் காண, அந்த மகிழ்வான அணைப்பு எங்களின் பயணத்தின் களைப்பைப் போக்கியது.  

எங்களுக்கு தமிழ் புக் ஸ்டால் எங்கே இருக்கிறது என்று மீண்டும் தேடிப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது ! தேடுகிறேம் ...தேடுகிறேம்... எங்கு பார்த்தாலும் மலையாள புத்தகங்கள் ஒவ்வொன்றும்  தலையணை சைசில், எண்ணற்ற கதைகளை சுமந்து அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். ஆங்காங்கே ஸ்டால்களில் மலையாள எழுத்தாளர் தங்களின் படைப்புகளைப் பற்றி  விளக்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு நின்ற மலையாளிகளின் கூட்டத்தைப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது. ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் மலையாளிகள்தான் முக்கால்வாசி இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

ஆம் அவர்கள் அறிவார்ந்த சமூகம் என்பதை மேலும் மேலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள், 

தமிழெங்கே என அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கையில் எழுத்தாளர் தெரிசை சிவா எங்களுடன் சேர்ந்து கொண்டார். எங்கே இருக்கிறது தமிழ் பதிப்பகம் என்ற எனது கேள்விக்கு அவரிடமிருந்து வந்த பதில் இங்கெல்லாம் இருக்காது...எங்காவது ஒரு ஓரமா இருக்கும் என்பதாய் இருந்தது. மனசுக்கு வேதனையாக இருந்தாலும் அதுதான் உண்மையாகவும் இருந்தது. 

சாலையோர ஹோட்டலில் சாப்பாடு ரெடி என்ற விளம்பர பலகையைப் போல் இங்கு தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் என்ற விளம்பரத்துடன் ஒரு ஓரமாக தமிழ் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான புத்தகங்கள் கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்து விற்காத பழைய புத்தகங்களாகவே இருந்தது. சிறிது நேரம் அங்கு நிற்பதைத் தவிர வேறொன்றும் வாங்கும் மனநிலையைக் கொடுக்கவில்லை சுற்றிலும் இருந்த மலையாள விளம்பரங்களும் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலையாளப் புத்தகங்களும்.

புத்தக வெளியீடு நடக்கும் 'ரைட்டர்ஸ் போரம்' நோக்கி நடந்தோம்.

விழா நிகழ்வுகளை எப்பவும் போல் குமார் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

நன்றி.

-பால்கரசு-



புதன், 17 நவம்பர், 2021

நஸ்க்காவின் பிறந்தநாள்

 #பிறந்தநாள்_வாழ்த்துகள்_நஸ்க்கா.

கொண்டாடுவதில் நஸ்க்காவிற்கு ஒருபோதும் நாட்டமிருந்ததில்லை, கடந்த காலம் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்பதைத் தீர்க்கமாக நம்புகிறவன் என்றாலும்  மற்றவர்கள் தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை அவன் ஒருபோதும் கேலியோ உதாசீனமோ செய்ததில்லை. 

தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் மேற்கத்தியக் கலாச்சாரம் கிராமப்புறங்களில் கொரோனாத் தொற்றைப் போல் பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவனுடைய பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களில் ஒருவனான அந்தோணி புத்தாடை அணிந்து பிறந்தநாள் கேக் மற்றும்  சாக்லெட்டுடன் தேவ தூதரின் பிள்ளையைப் போல் பள்ளி வகுப்பறையில் நுழைந்ததைப்  பார்த்த நஸ்க்காவிற்கு ஆச்சர்யமாகவும் புதுமையாகவும் இருந்தது. பிறந்தநாளுக்குக்கூட புதுத்துணி எடுத்துக் கொடுக்கிறார்களா என்று யோசித்தான்.

தட்டில் காகிதங்கள் மினுமினுக்க என்னைப் பார் எனச் சிரித்த சாக்லெட்களைப் பார்த்த நஸ்க்காவின் அடி நாக்கில் எச்சில் சுரக்க ஆரம்பித்தது. வகுப்பாசிரியர் விஜயக்குமார் முன்பு சாக்லெட் தட்டை நீட்டினான் அந்தோணி. அவரோ பிறந்தநாள் வாழ்த்துகள் என்றதுடன் கம்மங்காட்டில் புகுந்த கோவில் மாட்டைப் போல, பசங்க இருக்காங்களே என்ற எண்ணமேதுமின்றி எல்லாம் தனக்கே என்பதாய் கலருக்கு ஒன்று எடுத்து மேயத் தொடங்கினார். 

நஸ்க்காவின் பார்வை முழுவதும் அந்தத் தட்டில் மீது இருந்தது. இந்த மேய்ச்சலில் சாக்லெட் எல்லாருக்கும் கிடைக்கும் விதமாய் மிஞ்சுமா..? நமக்கு ஒன்றாவது கிடைக்குமா என்ற கேள்வி அவன் மனசுக்குள் எழுந்து கண்ணின் வழி வகுப்பறையைச் சுற்றி வந்தது. வாத்தியார் எடுத்தது போக மீதமிருந்ததை ரவி தன் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கொடுத்தான்.  மற்றவர்களின் ஏக்கப் பார்வையைப் புறந்தள்ளி, தட்டை தன் பைக்குள் வைத்துவிட்டு  இருக்கையில் அமர்ந்து கரும்பலகையை நோக்கினான். நஸ்க்காவுக்கு சாக்லெட் என்னும் எழுத்துக்கள் தலைக்குள் சுற்றுவது போல் இருந்தது.

மேல் சட்டைப் பித்தான் இல்லாத, அரசாங்க காக்கிக் டவுசரில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நஸ்க்காவைப் போன்ற நான்கய்ந்து பேருக்கு மட்டும் சாக்லெட்டின் மேலிருந்த கலர் பேப்பருக்குள் எப்படியான சுவை இருக்கும் என்ற கனவு வானவில்லாய் கரைந்து போனது. 

'ஏய் எல்லாரும்  பாடத்தைக் கவனியுங்கள்' என்றபடி பாடத்தை ஆரம்பித்த வாத்தியார் தன் சொத்தைப் பல்லில் சிக்கிக் கொண்ட சாக்லெட்டை நாவால் நெம்பிக் கொண்ட சிலரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார். வகுப்பறை முழுவதும் மயான அமைதி நிலவியது, நஸ்க்காவின் மனசு மட்டும் இழவு வீட்டைப் போல் இருந்தது.

அன்று மாலை வீட்டிற்குப் போனதும் அம்மாவிடம் போய் 'என் பிறந்தநாள் எப்பம்மா..?' என்று கேட்டான்.

'ஆமா... பொறந்தநாள் ஒன்னுதான் கொரச்சல்... போ... போயி மாட்டை அவுத்துக் கட்டுடா... பொறந்தநாளு தெரிஞ்சி நாட்ட ஆளப் போறியளாக்கும்" என்றதும் காற்றில் அசையும் அத்தி மரத்தின் இலைகளின் இரைச்சலை அவனுக்குள் இறக்கி வைத்தது. பிடித்துக் கட்டிய மாட்டிற்கு கம்மந்தட்டையுடன் பிறந்தநாளைக் கொண்டாடும் கனவையும் சேர்ந்தே ஒடித்துப் போட்டான். 

அம்மாவின் பேச்சு கோபத்தை ஏற்படுத்தினாலும், இனி இந்த அவமானம் தேவையா என்று யோசித்தாலும் தனது பிறந்தநாளைத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவனுக்குள் கூடித்தான் இருந்தது. 

சில நாட்களுக்குப் பிறகு, அம்மா சந்தோசமாய் இருந்த தருணத்தில் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். இப்ப நாடாளப் போறியான்னு கேக்காமல் சிரித்தபடி, 'அதெல்லாம் யாரு ஞாபகத்துல வச்சிருக்கா..? நீ பொறக்குறப்போ வீட்ல ஒரு காலண்டர் கூட இல்லை... வெள்ளி எது? சனி எதுனும் யாருக்குத் தெரியும்..?' என்றவள்,  'அப்ப அப்பசி முடிஞ்சி கார்த்திய மாசம்ன்னு நெனக்கிறேன்...  நல்ல அடமழ அன்னக்கி காலயில பொறந்தே...' என்றாள்.

அப்பாவோ 'கார்த்திய எங்கே... ஐப்பேசி மாதம்... மழயில்லாம குடிக்க ஒரு சொட்டுத் தண்ணி கூட இல்லாத கடும் பஞ்சத்தில் பிறந்தவன்... பஞ்சத்துக்குப் பிறந்தவன்' என்றா கடுப்பாய். 

அம்மாச்சியோ ' அட நீங்க என்ன சொல்லுறிய... நல்லாத்தான்...புள்ள பொறந்த தேதி கூடத் தெரியாம... கூறுகெட்ட கழுதைகளா...  எம்பேராண்டி ஆவணி மாதம் விடிகாலயில கோழி கூவுற நேரத்தில் பொறந்தான்... இதுகூடத் தெரியாம புள்ளப் பெத்துக்கிட்டாளுக... நாளும் கெழமயும் ஞாபகத்துல இல்லன்னு சொல்றதுக்கு எதுக்கு மீசங்கிறேன்...' என்று சொல்லி மாப்பிள்ளைக்கு ஒரு இக்கு வைத்தாள்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களே நஸ்க்கா காதைத் தொடுவதை வைத்து இந்த மாதம் பிறந்திருப்பான் என்று அவர்களாகவே ஒரு மாதத்தையும் நாளையும் பதிந்து வைத்திருந்தார்கள். அதுவே அவனின் பிறந்தநாள் என சான்றிதழுக்குப் போனாலும் அவனுக்கு அதில் நம்பிக்கையில்லை.

எது எப்படியோ... ஒருவேளை சோத்துக்கே வழியில்லாமல்  பல பேர் உயிரை மாய்த்துக்கொண்டிருந்த கடும் பஞ்சத்தில் பிறந்தவன் என்பதை மட்டும் உறுதியாகத் தெரிந்தது அவனுக்கு. 

'நீ தலையெடுக்க ஆரம்பிச்சதும் வீடு களையெடுத்துப் போச்சு, கிடுகிடுன்னு வளர்ந்தப்போ வீட்டுல இருந்த பானை சட்டியெல்லாம் கிடுகிடுத்துப் போச்சு... அன்னக்கிப் பிடிச்ச சனிதான் இன்னும் விடலை' என அடிக்கடி அப்பா சொல்ல ஆரம்பித்ததால்  வீடு என்பது அவனைப் பொறுத்தவரை இரவு கண்மூடிக் கிடக்கும் இடமாகிப் போனது. 

கால ஓட்டத்தில் காற்றின் திசையிலையே பயணித்த அவனுக்குப் பிறந்தாள்  என்ற ஒன்று எப்போது என்று தெரியாமலேயே போக அதைப் பற்றி யோசிப்பதையே விட்டுவிட்டான்.  அவன் பிறந்தநாள் யாருக்கும் தெரியாது என்றாலும் தன் மகள் பிறந்தநாளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சிரத்தையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவனிடம் உன் பிறந்தநாள் எப்போது என்று யாரும் கேட்டதில்லை! 

எல்லோருக்கும் வருடத்தில் ஒருநாள் பிறந்தநாள் என்றால் நஸ்க்காவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்ததாய் நினைத்துக் கொள்வான்.... கடந்த காலம் திரும்பி வருவதில்லை நிகழ்காலத்தைக் கொண்டாடுகிறான். ❤️


_பால்கரசு-

17/11/2021

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...