சனி, 29 செப்டம்பர், 2012

முதியோர்கள்



மானுடத்தின் வளர்ச்சிக்கும், வசதியான வாழ்க்கைக்கும் அறிவியல் உலகம் அளித்த வரங்கள் ஏராளம். மனிதன் தன்நிலையில் இருந்து சற்றுத் தாழ்ந்தாலும் சக மனிதனே ஒதுக்கும் போக்கு மனித சமூகத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்!

சாலையோரங்களிலும், தெருக்களிலும், கோயில் பகுதிகளிலும் மனநிலை பாதித்த, முதுமை சுமந்த மனிதர்கள் பலர் நிற்கிறார்கள்.

 இருப்பினும்,கருணை உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.

இதற்கு மிக முக்கிய காரணம் சிதைந்து போன கூட்டு குடும்ப வாழ்க்கை முறையே என்பது என் கருத்தாகும்.இன்றைய இயந்திரத்தனமான வாழ்கையில் நாம் முதியவர்களை புறக்கணிக்கிறோம்,அவர்களை அரவணைக்கவும்,ஆதரிக்கவும்,அன்பு செலுத்தவும் மறுக்கிறோம்.அவர்களின் வார்த்தைகளை காது கொடுத்து கூட கேட்பது இல்லை மேலும் அவர்களின் அனுபவங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முன்வருவதில்லை மாறாக வார்த்தைகளை எள்ளி நகையாடுகின்றோம்.

பெற்று,வளர்த்து,படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோர்களை வயதானவுடன் அரவணைக்கவும்,அன்பு செலுத்தவும் மறுப்பது மகா பாவம்,முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கேற்ப இன்று நம் பெற்றோர்களுக்கு என்ன செய்கின்றோமோ அது தான் நாளை நமக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

சில சமயங்களில் சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் வயதானவர்களை பார்க்கும்போது அவர்களை இந்த நிலைக்கு ஆளாகிய பிள்ளைகளை செருப்பால் அடிக்க தோன்றும்.அந்த நிலையில் அந்த பெற்றோரின் மனநிலையை நினைத்து பாருங்கள்.பெற்றவர்கள் வாழ்த்தினால் பிள்ளைகள் வாழ்வார்கள்,அவர்கள் சாபமிட்டாள் அந்த பிள்ளையின் வாழ்வும் சாபக்கேடாகதான் போய் முடியும்.

கூட்டு குடும்பத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதலில் பல பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்படும்,ஆனால் தனி குடும்பங்களில் பேசிப் பேசி பிரச்சனைகள் தான் வளருகின்றன.ஏனென்றால் பெரியவர்களே கிடையாது,பிரச்சனைகளை தீர்க்கின்ற அனுபவமும் கிடையாது,எல்லோரும் நிரம்ப கல்வி கற்றிருப்பதால் யார் பெரியவன் என்கிற ஆணவமும்,அதனால் வருகின்ற கோவமும் பிரச்சனைகளை வளர்த்து விடுகின்றன.
முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு நீதி போதனை கதைகளை சொல்லி கொடுத்து,அவர்களுக்கு அறத்தையும்,தர்மத்தையும் போதித்தனர்.
இப்போது எல்லாம் மறைந்து போய் விட்டது,அறத்தையும் தர்மத்தையும் தெரிந்து என்ன ஆகபோகிறது.இப்போதுள்ள குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் ஒன்றே போதும் என்பது இன்றைய மக்களின் மனநிலை.

இது ஒரு சாதாரண பிரச்சனை அல்ல,இது சமுதாயத்தில் புரையோடி இருக்கும் புற்று நோய்.

இப்படிதான் ஒரு ஒரு சமுதாயம் வளருமானால் அது மனிதாபிமானம் அற்ற சமுதாயமாகவே இருக்கும்.

சிலர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்,சிலர் வாழ்க்கையை தேடிக்கொண்டு இருப்பார்கள்,இன்னும் சிலர் வாழ்ந்து தொலைத்த வாழ்க்கையை தேடிக்கொண்டு இருப்பார்கள்,அவர்களில் இவர்கள் மூன்றாவது வகை.

என்ன தான் முதியவர்களை பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும்,அரசு நிவாரண உதவிகள் வழங்கினாலும் முதியோர்கள் கேட்பது அன்பும்,அரவணைப்புமே அன்றி வேறு எதுவும் இல்லை.


. 

வியாழன், 27 செப்டம்பர், 2012

மனித உறவுகள் மென்மையானவை!

மனித வாழ்வுக்கு உரம் சேர்ப்பது உறவு. நெருக்கமாக இருக்க வேண்டிய உறவுகளெல்லாம் இப்போது விரிசல் கண்டு வருகின்றன. இரு வழிப் பாதையாக இருக்க வேண்டிய உரையாடல் ஏனோ பல நேரங்களில் ஒரு வழிப்பாதையாகி விடுகிறது.
உரையாடல் மனங்களைத் திறந்து உறவை ஆழமாக்கும். பலருக்கு உரையாடல் என்றால் என்ன என்கிற தெளிவு கிடையாது. பல குடும்பங்களில் அது பெரும்பாலும் உரையாடலாக இருப்பதில்லை. மாறாக, தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் பிறர் மீது திணிக்கின்ற யுத்த களமாகவே அமைந்து விடுகிறது.
பலர் உரையாடல் என்கிற பெயரில் வாதாடுகின்றனர். அப்படியே உரையாடினாலும் மற்றவர்களைவிட தாங்கள் பெரியவர்கள், மேலானவர்கள், அதிகம் தெரிந்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான தருணமாக உரையாடலைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இருக்கின்ற உறவுகளையும் இழந்து விடுகின்றனர்.
உரையாடலின் போது நாமே ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. நம்முடைய பிரச்சினைகளையே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்களைக் குத்திக் காட்டி பேசக் கூடாது. எதிரியிடத்திலும் கூட கருணைமிக்க கண்ணியமான வார்த்தை களைப் பயன்படுத்தினால் அவர்களின் கோபமும் எதிர்ப்பும் மறைந்து உறவு மலரும்.
உரையாடுவது மட்டுமல்ல. உறவினர்களிடமும், நண்பர்களிடமும் உறவு கொள்வதும் குறைந்து வருகிறது. வீட்டை விட்டு வெளியில் சென்று உறவினர்களை நேரில் பார்த்துப் பேசும் பழக்கம் குறைந்துவிட்டதால் இளைய தலைமுறைக்கு உறவு முறைகளே தெரிவதில்லை.
இன்றைய உறவை ‘Out of Sight, Out of Mind’ என்று சொல்வார்கள். அதாவது நாம் பார்க்கும் போது மட்டும் கண்ணாடி நம் முகத்தைக் காட்டும் விலகி விட்டால் கண்ணாடி நம் முகத்தைக் காட்டாது இந்தக் கண்ணாடியின் நியதி இன்றைய உறவு நிலைக்கும் பொருந்தும்.
நீண்ட காலம் பழகிய நண்பர்களையே தனித்தனியே விசாரித்தால் இருவரிடம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத போக்கு பற்றிய வருத்தம் வெளிப்படுகிறது. ஈருடல் ஓருயிர் என்று கருத்தொருமித்து வாழ்ந்து வருவதாகக் கூறிக்கொள்ளும் கணவன் – மனைவியைக் கூட தனித்தனியாக விசாரித்தால் ஒருவரைப் பற்றிய ஒருவர் கொட்டித் தீர்த்து விடுவதைப் பார்க்க முடிகிறது.
மனித உறவுகளுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பது ‘தான்’ என்னும் மாயப்பிசாசு பல ஆண்டுகள் ஒருவரை ஒருவர் நேசித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கூட மாங்கல்ய மஞ்சள் காயும் முன்பே குடும்ப நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டுகின்றனர்.
பெரியவர்கள் என்று பிள்ளைகள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. பிள்ளைகள் என்று பெரியவர்கள் சகித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. ‘அன்னை இல்லம்’ என்று வீட்டிற்குப் பெயர் வைத்து விட்டு பெற்ற அன்னையை அனாதை இல்லத்தில் விட்டிருக்கும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிடிவாதங்கள் வாழ்க்கை என்னும் வரத்தைச் சாபமாக்கி விடுகின்றன. பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள அகந்தையும், ஆணவமும் அனுமதிப்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் சக மனிதர்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், இந்த மனிதன் சமுதாயத்தின் மாபெரும் பிரச்சினைகளில் நமது பிரச்சினை ஒன்றுமே இல்லை என்பதை உணர முடியும்.
ஹிட்லர் தன் சுயசரிதையில் இப்படிச் சொல்கிறார். ‘ஒருவன் தலைவனாகத் தொடர தன் நாட்டில் அமைதி நிரந்தரமாகத் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கலவரங்களை ஏதாவது ஒரு கணத்தில் பிரசவிக்கச் செய்ய வேண்டும். தற்காப்பாற்ற நிலையிலும் பயத்திலும் மக்களை வைத்திருக்க வேண்டும். தலைவன் தான் தனக்கு எல்லாம் என்ற நம்பிக்கையில் வாழவைக்க வேண்டும். அப்பொழுதுதான் தன் வசதியும் வாய்ப்பும் பறிபோகாது!’ என்று.
சர்வாதிகாரியின் இந்த வார்த்தைகள் பல குடும்பங்களுக்கும் கூட பொருந்துவதாக உள்ளது. இத்தகைய சர்வாதிகார எண்ணங்கள் குடும்பத் தலைவன் அல்லது தலைவியிடம் தோன்றும் பொழுது ‘தான்’ என்ற அகங்காரம் தலை தூக்கி குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகிறது.
நம்மில் பலருக்கு வசதியாக வாழ்வதாகக் காட்டிக்கொள்வதில் கொள்ளைப் பிரியம். இதன் காரணமாகத்தான், பலருடைய சொல் வேறு, செயல்வேறு என்றாகிவிட்டது. பொய்யாக செளகரியங்களுக்காக உண்மையான சந்தோஷத்தையும் விற்கத் தயங்காத மனப்பான்மை வளர்ந்துவிட்டது.
மனிதன் பகட்டாக ஆடம்பரமாக வாழ மட்டும் விரும்புவதில்லை. அத்தகைய தன் வாழ்வை பிறர் அறிய வேண்டும் என்றும் விரும்புகிறான். வாழ்க்கை என்பது மிகக் குறுகிய காலம் தான். அதில் பணம் சேர்ப்பது மட்டும் குறிக்கோள் அல்ல.
செளகரியத்திற்காக பணம் தேவை என்றாலும் எதையும் செளகரியமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும்.
மனைவியும் சம்பாதித்தால் பொருளாதார ரீதியாக குடும்பத்திற்கு நல்லதுதான். ஆனால் ஓடி ஓடி உழைத்து, சம்பாதித்து ஓரிடத்தில் உட்கார்ந்த பிறகுதான் கணவன் மனைவி இருவருக்குமே புரியும். ‘எத்தனை சந்தோஷமான நாட்களை, சம்பாதிக்கும் ஆசையில் இழந்து விட்டோம்’ என்று!’
எத்தனையோ குடும்பங்கள் வசதி இல்லாமல் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அந்நியோன்யமாக ‘வாழ்க்கையை வாழ்க்கையாக’ அனுபவிக்கின்றனர். வாழ்வின் அர்த்தம் அதுதான்.
சக்திக்கும் வருவாய்க்கும் உட்பட்டு கிடைக்கும் வசதிகளே போதும். ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று ஆசைப்படும் போது, அந்த வசதிகளைத் தகுதிக்கு மீறி அனுபவிக்கும் ஆசைக்கு உட்படும்போது தடுமாறவும் தவறு செய்யவும் நேரிடுகிறது. இருப்பதில் நிறைவு காணும் மனம் படைத்தவர்களால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
வாழ்க்கைக்கும் ஒரு வாய்ப்பாடு உண்டு. ஓர் எட்டில் (8) நல்ல பண்புகளும், ஈரெட்டில் (16) நல்ல கல்வியும், மூவெட்டில் (24) திருமணமும், நாலெட்டில் (32) நல்ல பிள்ளைகளும், ஐந்தெட்டில் (40) செல்வமும் சேர்த்துவிட வேண்டும். ஆறெட்டில் (48) உலக அனுபவமும், ஏழெட்டில் (56) மிகுந்த புகழையும் அடைந்து, எட்டெட்டில் (64) அனைவரின் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவனாக வாழவேண்டும். இந்த வாழ்க்கை அட்டவணையை ஓரளவு மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு சிறுவன் தன் தந்தையுடன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். ‘அப்பா இந்தப் பட்டம் எதனால் உயரமாகப் பறக்கிறது?’ என்றான் சிறுவன். ‘பட்டத்தில் கட்டியிருக்கும் நூல் கயிற்றால்தான்’ என்றார் அப்பா. ‘இல்லை இல்லை அந்தக் கயிறு பட்டத்தை மேலே பறக்க விடாமல் இழுத்துப் பிடித்துக் கொள்கிறது’ என்றான் சிறுவன். உடனே தந்தை அச்சிறுவனுக்கு புரிய வைக்க அந்த நூலை அறுத்து விட்டார். பட்டம் கீழே விழுந்தது. ஆம் அந்தக் கயிறு பட்டத்தை இழுத்துப்பிடிப்பது போல் தோன்றினாலும் அதுதான் பட்டத்தை உயர்த்துகிறது. பட்டத்தின் நூல் கயிற்றைப் போன்றதுதான் நம் ஒழுக்கமும். சுயகட்டுப்பாடும் நாம் எதைத் துன்பம் என்று சொல்கிறோமோ அதுவும் இயற்கையின் இயல்புதான் என்று எடுத்துக் கொண்டால் எல்லாமே இன்பம்தான்.
மானுட அன்பில் எப்போதும் ஓர் எதிர்ப்பார்ப்புண்டு. தான் கொடுத்த அன்பை அது பிறரிடம் எதிர்பார்க்கும். அது கிடைக்காது போனால் அன்பு நீர்த்துப் போகும். உறவுகளுக்குள் சிறிய கோப தாபங்கள் ஏற்படுவது இயற்கை. அது தவிர்க்க முடியாதது. சொன்ன ஒரு சொல்லை அல்லது சம்பவத்தை ஊதிப்பெரிது படுத்துவதை விடுத்து அதை மறக்கவும், மன்னிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனித உறவுகள் மென்மையானவை. மிக மெல்லிய இழைகளால் ஆனவை. கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளும் எச்சரிக்கை உணர்வுடன் உறவைக் கையாண்டால் பிரச்சினை வராது. பெருந்தன்மை உள்ள, பேரம் பேசாத, குறை காணாத அன்பு இருந்தால் மனப்பூசல்கள் விலகி உறவுகள் வலுப்பெறும்.

புதன், 26 செப்டம்பர், 2012

உறவுகள்

பெரும்பாலான பாலூட்டிகளைப் போல மனிதனும் ஒரு கூட்டமாகக் கூடி வாழும் இயல்பினன்.குடும்பம் என்ற அமைப்பு ஏற்பட பல நூற்றாண்டுகள் கடந்திருக்க வேண்டும். சங்க காலத்தில் தனிக் குடும்ப அமைப்புதான் தமிழகத்தில் பெரு வழக்கினில் இருந்தது. கூட்டுக் குடும்பம் என்ற கருத்தியல், சொத்துடமைச் சமுதாயம் வலுவடைந்த பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டும்.

‘கற்பு’ என்ற கற்பிதமும், கணவன் பிரிந்து வெளியே போனாலும், அவனுக்காக காத்திருத்தல் குடும்பப் பெண்ணின் இலக்கணம் என்ற வரையறை செய்திட சங்கப் பாடல்களும் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களும் முயன்றுள்ளன. குடும்ப அமைப்பினுக்குள் இணங்கி வராமல், பழைய தாய் வழிச் சமூக அமைப்பின் எச்சமாகத் தன்னிச்சையாக வாழ்ந்த பெண்களைப் ‘பரத்தை’ என்று குறிப்பிடும் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்களிடையே கூட்டுக் குடும்ப அமைப்பு வலுவாக நிலவியது. கணவன் இறந்துவிட்டால் விதவையான மனைவிக்குக் குடும்பச் சொத்தில் எந்தப் பங்கும் கிடையாது.

பெரிய கோடீஸ்வரர் இறந்தாலும், அவனுடைய மனைவிக்கு, தினசரி பொங்கிச் சாப்பிட கால்படி அரிசியும் வருடத்திற்கு இரண்டு சேலைகளும்தான் தரப்பட்டன. அதுதான் அந்தக் காலத்து நியாயம்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் புதிய சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும், அண்ணன் இறந்துவிட்டால், ‘ஏகக் குடும்பம்’ ஆக வாழ்ந்தோம் என்று தனது அண்ணியின் மீது வழக்குத் தொடுத்த சம்பவங்கள் பல நிகழ்ந்தன. தன்னுடைய அண்ணன் சொத்து வெளியே இருந்து மனைவியாக வந்து பிள்ளையும் பெற்றுக் கொண்ட பெண்ணுக்குப் போவது எந்த வகையில் நியாயம் என்று நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிய தம்பிகள், அன்று இருந்தனர்.

கிராமப்புறங்களில் யாராவது ஒருவர், வாரிசு இல்லாமல் இறந்து விட்டால் சுடுகாட்டில், கொள்ளிக் குடம் உடைத்து, கொள்ளி வைத்தவருக்குத்தான் சொத்து என்று பலரும் நம்பினர். குடும்பம் என்ற அமைப்பு வலுவடைவதற்குச் ‘சொத்து’ தான் ஆதாரமாக இருந்தது.

அறுபதுகளில் கூடக் கிராமப்புறங்களில் எல்லோரும் வயல் வேலைகளின் மூலம் தான் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர். அரசு அலுவலகங்கள், வியாபாரம், வட்டிக்கு விடுதல் என்பது மிகக் குறைவு.பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வீக நிலத்தின் மீது எல்லோருக்கும் பெரும் மரியாதை இருந்தது.
ஒரு குடும்பத்தில் நான்கைந்து அண்ணன் தம்பிகள் இருந்தனர் எனில், எல்லோரும் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டனர். பெரிய வீட்டில் ஒரே ‘உலை’ தான் பொங்கியது. ஒரு வேளைக்கு இரண்டு படி அரிசி சோறு ஆக்குவது சாதாரணம். சிலர் ஆடுமாடு மேய்த்தல், தென்னந்தோப்பு மூலம் வருமானம் ஈட்டினாலும், அதுவும் பொது வருவாய்க்குள் வந்து சேரும்.

இதுபோன்ற வசதியான குடும்பங்களில் நிலவிய உறவுமுறையானது, கூலி உழவர்களின் வீடுகளிலும் நிலவியது. குடும்பத்தில் தந்தை சொல்லுக்கு மறுப்பில்லை. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’, தந்தை சொல் கேளாத பிள்ளை குலத்திற்கு ஹீனம்’ போன்ற சொலவடைகள் தந்தையின் இருப்பை உறுதிப்படுத்தின.

தந்தை பேசும்பொழுது, பிள்ளைகள் அவருடைய முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசும் வழக்கமில்லை. பேரன் பேத்தி எடுத்த மகன் எனினும் - 50 வயது - தந்தையிடம் ஏதாவது சொல்ல வேண்டுமெனில், முகத்தைப் பார்த்துப் பேசுதல் என்பது மரியாதைக் குறைவாகக் கருதப்பட்டது.

என்னுடைய தந்தையார், பெரியப்பா, சித்தப்பா 4 பேர்) ஆகிய ஆறுபேரும் அவர்களுடைய அப்பாவிடம் பேசும்பொழுது, வேறு எங்கோ பார்த்துக்கொண்டு பேசுவார்கள். எங்க அப்பச்சியும் தனது மகன்களை விவரம் அறியாத சிறுவர்கள் என்பது போல அறிவுரை சொல்லுவார். சற்றுத் தள்ளி நின்று பார்க்கும் எனக்கு எல்லாமே வேடிக்கையாக இருக்கும்.

உடன்பிறந்தவர்களிடையே பேசும்பொழுது கூட, இருவரும் வேறுவேறு திசைகளில் பார்த்துக் கொண்டு பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அண்ணன் என்பவர் பெரியவர், மரியாதைக்குரியவர், குடும்பத்தலைவர் என்ற மதிப்பீடு நிலவியதால், மறுப்புச் சொல்வது தவறாகக் கருதப்பட்ட காலம் அது.

பொதுவாகக் குடும்பத்தில் மூத்தவர் சொல்வதற்கு ஏதாவது பதில் அல்லது வேறு கருத்து சொன்னால், அது ‘அதிகப்பிரசங்கித்தனம்’ என்று கருதப்பட்டது. ஒருவிதமான அடிமைத்தனம் குடும்ப உறவுகளில் நிலவியது. இத்தகைய போக்கினுக்கு எதிராகக் குரலெழுப்பும் பெண்கள், சரியான கருத்து அல்லது நியாயத்தைத் தங்கள் கணவர் மூலம் தெரிவிப்பது கண்டிக்கப்பட்டது. ‘ராத்திரி புருஷனுக்கு தலையணை மந்திரம் போட்டு விடுகிறாள்’ என்று மருமகளைத் திட்டும் கிழவிகள் எங்கள் ஊரில் ஏராளம்.மனைவி சொல்லும் நியாயமான கருத்தைத் தனது தாயிடம் அல்லது தந்தையிடம் அல்லது அண்ணனிடம் தெரிவித்து விட்டால் போச்சு. வீட்டில் குழப்பம்தான்.

‘அவள் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுவிட்டு நடக்கிறான். பொம்பளை பேச்சைக் கேட்கிறவன் உருப்படுவானா? பொண்டுகப் பய’ என்று வசவு கிளம்பும். நிலமான்யச் சமூக மதிப்பீடு நிலவிய சூழலில், மனைவி பேச்சைக் கேட்கும் கணவனைப் பயமுறுத்திட ஒரே ஆயுதம் ‘ஆண்மை’யைச் சந்தேகிக்கும் பேச்சுதான். அப்புறம் ‘ஆண்’ முன்னோர்-பெரியோர் - வகுத்த வழியில் செல்ல வேண்டியதுதான்.
கிராமத்தில் ஒவ்வொருவரும் இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என்று அடையாளப் படுத்தப்படுகின்றனர். குடும்பத்திற்கெனத் தனிப்பட்ட மரியாதை நிலவியது உண்மைதான். நான்கைந்து தலைமுறைகளாகச் சொத்தினைச் சேர்த்துக் கொண்டு, வளமாக வாழ்ந்து வரும் பரம்பரையினர், ஏதோ ஒருவகையில் போற்றப்பட்டனர். இத்தகைய குடும்பப் பின்புலத்திலிருந்து வந்த ஆண்/பெண் சமூக ஒழுங்குகளை மீறும்போது ‘அந்தக் குடும்பத்திலிருந்து வந்தவனா/ளா இப்படிச் செய்வது? அது எப்பேர்பட்ட குடும்பம்’ என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

குடும்ப உறவுகளில் முதன்மையானது ‘பங்காளி’ உறவுதான். கோவில் திருவிழா, குலதெய்வம் சாமி கும்பிடுதல், மரணம் போன்ற நிகழ்வுகளில் பங்காளிகள் முக்கியமானவர்களாக நடத்தப் பெற்றனர். ஒரே தந்தையின் கீழ் வந்த வாரிசுகள் எல்லாக் குடும்பங்களிலும் கௌரவிக்கப்பட்டனர். நல்லது, கெட்டது - இரண்டுமே பங்காளிகள் இல்லாமல் நடக்காது.

நிலத்தை மூலமாகக் கொண்டு வாழ்ந்த நிலமான்ய அமைப்பில் அவ்வப்போது ஏற்படும் சண்டை, சச்சரவுகளில் பங்காளிகள் ஒரே அணியில் திரண்டு நின்றனர். ஒருவிதமான சமூகப் பாதுகாப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பங்காளிக்காக, தனது உயிரைக் கூடச் சண்டையில் இழந்தவர்கள் உண்டு, குலதெய்வம் கும்பிடும்போது-துடியான தெய்வங்களான மாடன், இசக்கி - பங்காளிகள் ஒன்று சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.

பங்காளிகளுக்கிடையில் ஏற்பட்ட சண்டையினால் மூன்று தலைமுறையாகப் பேச்சு வார்த்தை இல்லாத குடும்பங்கள் எங்கள் ஊரில் இருந்தன. ஐந்து வயதுச் சிறுவனிடம்கூட ‘பங்காளி எதிரி’ எனக் கற்பிக்கப்பட்டு, அந்த வீட்டுப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவது தண்டனைக்குரியதாகக் கருதப்பட்டது. ‘பரம்பரை பகை’ என்று ஏதோ ஒன்றை ரோஷமாகப் பிடித்து வீராப்புடன் திரிந்தவர்கள் அன்று பலர் இருந்தனர். வெளியூர்களில் இருந்து வீட்டிற்க்கு மருமகளாக வந்த இளம் பெண்களுக்குப் பிரச்சினை எதுவும் புரியாவிட்டாலும், விரோதம் கொள்வார்கள்.

பெரியவர்கள் ‘மண்டை’யைப் போட்ட பிறகு ராசியான பங்காளிகளும் எங்கள் ஊரில் உண்டு. யாரோ ஒரு பெரியவர் முன்னிலையில் சமரசம் பேசி, வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்வதுடன், இரு வீட்டிலிருந்து வரும் தண்ணீரையும் மாற்றிக் குடிப்பதுடன் எல்லாம் ராசியாகிவிடும். ஏற்கனவே ஒளிவு மறைவாகப் பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

எழுபதுகளின் தொடக்கத்தில்கூட ஒரு வீட்டில் பெண் எடுக்கப் போனால், அப்பெண்ணுடன் பிறந்த அண்ணன் தம்பி உண்டா என்று கட்டாயம் விசாரிப்பார்கள். ஆண்வாரிசு இல்லாத வீட்டில் பெண்ணைக் கட்டத் தயங்குவார்கள். "எதிர்காலத்தில் ஏதாவது நல்லது கெட்டதுன்னா ‘மச்சினன்’ வேணும்ல" என்பார்கள். ‘மலைக்குப் போனாலும் மச்சினன் தயவு வேண்டும்’ என்ற பழமொழியை வரிக்கு வரி உண்மை என்று நம்பினர். யதார்த்ததில் உடன்பிறந்த சகோதரிக்காக, மச்சினன் கிராமத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது பக்கபலமாக நின்றனர்.

அன்றைய காலகட்டத்தில் சின்னப் பிரச்சினைக்குக் கூட அடிதடி, தகராறு என மோதிக் கொண்ட கிராமத்து வாழ்க்கை முறையில், மைத்துனர்களின் ‘தயவு’ மிகவும் தேவைப்பட்டது.

அறுபதுகளின் இறுதியில்கூட வீட்டிற்கு ஏழெட்டுக் குழந்தைகள் என்பது சர்வசாதாரணம். கிராமப்புறத்தில் நிலவிய குழந்தை வளர்ப்பு பற்றிய மூட நம்பிக்கை காரணமாகவும், போதிய மருத்துவ வசதி இன்மையினாலும், குழந்தைகள் மரணமடைந்தன. ‘எனக்கு எட்டுக் குழந்தை பிறந்ததில் ரெண்டு தவறிப் போச்சு’ என்று பேச்சுவாக்கில் சொல்லும் பெண்கள் எங்கள் ஊரில் ஏராளம். என்னுடைய உறவினர் ஒருவருக்கு மொத்தம் பத்து குழந்தைகள் பிறந்து, கடைசியில் இரு குழந்தைகள்தான் தங்கின. ஏன் இன்னும் சொல்லபோனால் என் அம்மாவோடு பிறந்தவர்கள் மொத்தம் பத்துபேர். அதில் அம்மா (பூமயில்) சித்தி (பாப்பா) மாமா (ராமசந்தரன்) என மூன்று பேர்மட்டும் தங்கின.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை இறந்துவிட்டால், வீட்டுக்குப் பக்கத்திலே புதைத்தனர். தாயின் அழுகை பலமாகக் கேட்கும். ‘குழிப்பிள்ளை வயிற்றிலே’ என்று சமாதானம் சொல்வார்கள். வயிற்றுப் போக்கினால் மாண்ட கைக் குழந்தைகள் ஏராளம். வறுமை, சுகாதாரமின்மை, மூட நம்பிக்கை நிலவிய சூழலில், தப்பிப் பிழைத்த குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்ப எந்தக் குழந்தைக்கு என்ன நடக்குமோ என்ற பயம் காரணமாகவே பெண்கள் வருடத்துக்கு ஒரு பிள்ளை பெற்றுக் கொண்டனர். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக மாறும்போது குடும்ப உறுப்பினர்களாக மாறி எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஏராளம்.

மகளுக்குத் திருமணமாகி கர்ப்பமாக இருக்கும்போது, தாயும் கர்ப்பமாக இருப்பதை யாரும் வித்தியாசமாகக் கருதிடாத காலம் இருந்தது. ஏனெனில் அப்பொழுது தாய்க்கு வயது முப்பத்தாறு; மகளுக்குப் பதினாறு. பெண் பெரியவளானவுடன் ஓரிரு ஆண்டிற்குள் திருமணம் நடைபெறுவது சாதாரண விஷயம். அவசரமான சூழலில், தனது தம்பியான கைக் குழந்தைக்குப் பால் கொடுத்த அக்காக்கள் அன்று இருந்தனர்.

குடும்ப உறவுகளில் ‘அக்கா-தம்பி’ உறவு மிகவும் முக்கியமானது. பெண் தனது மகளைத் தன்னுடைய தம்பிக்குத் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டினாள். வெளியே எவனுக்கோ தன்னுடைய அருமை மகளைத் திருமணம் செய்து கொடுப்பதை விடத், தனது தம்பிக்குக் கொடுத்தால், நன்கு பார்த்துக் கொள்வான் என்று நம்பினர்.

சின்ன வயதிலிருந்து தூக்கி வளர்த்த பெண்ணை, ஒரு காலகட்டத்தில் பிரியத்துடன் மணம் முடிக்க ‘தம்பி’கள் விரும்பினர்.அந்தப் பெண்களுக்கும் முன்னப்பின்னத் தெரியாதவனைக் கட்டிக் கொள்வதைவிட தன்மீது ஆசைப்படும் மாமனைக் கல்யாணம் செய்து கொள்வதில் ஈடுபாடு காட்டினர். இத்தகைய திருமணங்களில் கடைசி வரை ஆண், ‘அவள் சின்னப் பெண்’ என்று அன்புடனும், பெண், ‘அவன் மாமா மரியாதைக்குரியவர்’ என்ற பாசத்துடனும் பழகினர்.

தாயின் சகோதரன், தந்தையின் சகோதரி ஆகிய இருவரும் குழந்தையைப் பொறுத்தவரை முக்கியமானவர்கள். ஐந்தாறு வயதுப் பையனிடம் கூட ‘உன் மாமாவிடம் பெண்ணைக் கேள்’ என்றும் ஐந்தாறு வயதுச் சிறுமியிடம் ‘மாமா மகனைத் தான் கட்டிக்கிடுவேன்’ என்றும் பெரியோர்கள் சொல்வது சாதாரணமாக நிகழும். மிகச் சிறிய வயதிலே குழந்தைகளிடையே ‘திருமணம்’ என்ற கருத்தியலை விதைப்பதன் மூலம், ஆண்-பெண் உறவுக்கான ‘அடித்தளம்’ நிறுவப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அத்தை/ மாமா வீட்டில் வளரும் எதிர் பாலினரின் மீது நாட்டம் ஏற்படுவது இயற்கையாக நிகழும். ‘இந்தப் பையனுக்கும் இந்தப் பெண்ணுக்குமிடையில் திருமணம் நடைபெறவிருக்கிறது’ என்பது கிராமத்தில் - உறவினர்களிடம் - எல்லோருக்கும் தெரியும். எனவே வேறுயாரும் பெண்/ மாப்பிள்ளை கேட்டு அந்த வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள்.

ஒரு பையன்/ பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் பேசி முடிக்க வேண்டுமெனில், தாய்மாமன் எனப்படும் தாயின் சகோதரனிடம் சொல்லி அனுமதி பெற வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் ‘தாய் மாமன்’உறவு என்பது மிகவும் முக்கியமானது. திருமண நிச்சயம் முதலாகத் திருமண நாளில் முதல் மாலை அணிவிப்பதுவரை தாய்மாமன் தான் முன்னிலை வகிக்க வேண்டும்.

திருமணம் நடக்கவிருக்கும் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தாய்மாமன்கள் எல்லோருக்கும் முன்னர் மேடையில் அமர்ந்து, "என் சகோதரி பொண்ணுக்கு உங்க பையனைத் தருகிறீர்களா" என ஒருவர் கேட்டவுடன், இன்னொருவர் "என் சகோதரி பையனுக்கு உங்க பெண்ணைத் தருகிறீர்களா" என்று கேட்பார்கள்.
இருவரும் ‘பூரண சம்மதம்’ எனப் பரஸ்பரம் தெரிவித்தவுடன்தான் நிச்சயதார்த்த சடங்குகளான ‘தட்டுகளை மாற்றிக் கொள்ளுதல் நடைபெறும்.

சகோதரிக்கு மகன்/மகள் பிறந்தவுடன் சீர் கொண்டு வருதல் தொடங்கி, அவளுடைய வீட்டில் நடைபெறும் மங்கலகரமான நிகழ்வுகளிலும், மரண நிகழ்வுகளிலும் தாய்மாமன்தான் முன்னிலை வகித்துச் செயற்படுகின்றார்
திருமண நாளில் கிடாயைப் பிடித்துக் கொண்டு, சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தட்டுகளில் பல்வேறு பொருட்களை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு மணப்பந்தலுக்குள் தாய்மாமன் நுழைவது அற்புதமான காட்சி.

மாமன் வீட்டினரை மீறிச் சென்று வேறு இடத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள முயன்றால் ‘தகராறு’ ஏற்படும். சில இடங்களில் வெட்டு, குத்துகூட நிகழ்ந்திருக்கிறது.

ஆண் எப்பொழுதும் ‘பொருள்’ தேடுவதில் அளவற்ற ஆசையுடன் காலங்காலமாக அலைந்து கொண்டிருக்கிறான். தமிழகத்திலுள்ள சொத்துகளின் பத்திரங்கள் பெரும்பாலும் 85% ஆண்கள் பெயரில்தான் உள்ளன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெயருக்குச் சில பெண்கள்தான் ‘பதிவு’ விஷயமாக வருகின்றனர். சொத்து பற்றிய ஆர்வமின்மை காரணமாகத்தான் பெண்கள் இயல்பாகவே சகோதர சகோதரிகளிடம் ப்ரியத்துடன் பழகுகின்றனர்.

தங்கள் வீட்டிலுள்ள சின்னச்சின்ன பொருட்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்கின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் அம்மாவின் சகோதர சகோதரிகளுடன் நெருக்கமாகப் பழகுகின்றன. சித்தி, பெரியம்மா, மாமா, ஆச்சி, தாத்தா எனக் குழந்தையின் உலகம் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி அன்புமயப்பட்டதாக உள்ளது; உரிமையுடன் ஆச்சி வீட்டில் விளையாடுகின்றன.

தமிழ்க் குடும்ப அமைப்பானது, பெரும்பாலும் தாய் வழியாகவே இன்றும்கூட இயங்குகின்றது. பெண்ணுக்கு இயற்கையாக நடைபெறும் மாதவிலக்குத் தொடங்கி, கல்யாணம், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு என எல்லாவற்றிலும் அம்மாவைப் பெற்ற அம்மாவுடன் நெருக்கமான உறவு உள்ளது. அப்பா வழிப் பாட்டியைவிட அம்மா வழிப் பாட்டியிடம் பெண் குழந்தைகளுக்கு இயல்பிலே நெருக்கமும் ப்ரியமும் ஏற்படுகின்றது.

தந்தை -மகன் உறவு, சகோதரர்களுக்கிடையிலான உறவு சுமூகமானதாக இல்லை. ‘அஞ்சு வயதில் அண்ணன் தம்பி, பத்து வயசில் பங்காளி’ என்பது வெறும் வார்த்தை அல்ல. போன தலைமுறையில், ‘என் சுய சம்பாத்தியம் சொத்து, உனக்கு எதுவும் இல்லை’ என்று கூறி ‘விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிய தந்தைமார் அநேகம் பேருண்டு. இதனால் தந்தை இறக்கும்வரையில் பேசாமலிருந்த மகன்கள் கிராமப்புறங்களில் இருந்தனர். தந்தை மகன் உறவு என்பது கிராமப்புறங்களில் அதிகாரத்தின் வெளிப்பாடாக இருந்தது.

தெருவினில் தந்தை நடந்து வருவதைப் பார்த்தால், உடனே வேறு தெருவில் நடந்து போகும் திருமணமான மகன்கள் எங்கள் ஊரில் இருந்தனர். தந்தை என்பவர் கண்டிப்பும் கறாரும் மிக்கவர் என்ற பிம்பம் கிராமப்புறத்தில் நிலவியது. எனவே மகனின் உலகம் வெளியே தனித்து விளங்கியது.

சொத்து விஷயத்தில் அண்ணன் தம்பிகளுக்கிடையில் எப்பொழுதும் முணுமுணுப்புகள் நிலவின. மூத்த சகோதரனுக்குச் சொத்தினைப் பாகம் பிரிக்கும் போது, கூடுதலாக நிலம் தரும் வழக்கமிருந்தது. அது ‘மூப்புக் காணி’ எனப்பட்டது.

திடீரென தந்தை இறந்துவிட்டால், சொத்துகளைப் பிரிக்கும்போது, ‘கூடுதல் குறைவு’ காரணமாக, சகோதரர்களிடையே ‘வெறுப்புணர்ச்சி’ தோன்றி விடும். அப்புறம் மௌனமாக பங்காளிச் சண்டை தொடங்கிவிடும். ‘மகாபாரதம்’ சொல்லும் பங்காளிச் சண்டை வெவ்வேறு வடிவங்களில் இன்றுகூட கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மகாபாரதம் இன்றைய காலகட்டத்திலும் வாசிப்பதற்கேற்ற வகையில் சுவராசியமாக இருப்பது, தொடரும் பங்காளிச் சண்டையின் இன்னொரு அடையாள வெளிப்பாடுதான்.

கூட்டுக் குடும்பம் என்பது இன்று அருகி விட்டது. வசதிக் குறைவான குடும்பங்களில் வேறு வழியில்லாமல், பெரிய குடும்பமாகச் சேர்ந்து வாழலாம். மற்றபடி வயதான தந்தை, தாயைக்கூட வைத்துச் சேர்ந்து வாழ்வது சிரமமான காரியமாகி விட்டது. நகர்ப்புறத்தில் புறாக்கூடு போன்ற ‘அடுக்ககங்களில்’ அவரவர்க்கான இருப்பிடம் உறுதியாகிவிட்டது. குடும்பத்தில் ஒரு மகன், ஒருமகள் அல்லது இரு மகன்கள் அல்லது இரு மகள்கள்தான் உள்ளனர்.

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற சொற்கள் பழைய பொருண்மையில் இன்று வழக்கினில்லை. வயல், தோப்பு, துரவு என்ற விரிந்திடும் நிலப்பரப்பினில் குடும்ப உறவுகள் வெவ்வேறு வழிகளில் தமிழர் வாழ்க்கையினுள் ஆழமாக ஊடுருவியிருந்தன.

அற்ப விஷயத்துக்காக அடித்துக் கொள்வதும், சின்ன விஷயத்திற்காகச் சேர்ந்து கொண்டாடப்படுவதுமென வாழ்வின் பரப்புகள் விரிந்தபோது, ‘குடும்ப உறவுகள்’ என்ற சொற்களுக்கு அர்த்தமிருந்தன. நல்லதோ கெட்டதோ, எதுக்கும் பத்து பேர் ‘பங்காளி’ என்ற பெயரிலோ, ‘மாமன் மச்சான்’ என்ற பெயரிலோ கூடித் திரிந்த எழுபதுகள் காற்றில் கரைந்து போய் விட்டன; வெறும் பதிவுகளாகி விட்டன. குடும்ப உறவுகளை வேறு வடிவங்களில் நிலை நிறுத்திட, மனித இருப்பு தொடர்ந்து முயன்று கொண்டேயிருக்கின்றது.

கூட்டுக்குடும்பங்களால் வாழ்ந்தவர்கள் பலரும் இன்றைக்கு கருத்து வேறுபாடுகளினால் தனித் தனி குடும்பமாய் மாறிவருகின்றனர். இதற்கு காரணம் அவசர யுகத்தில் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளமுடியாததே. ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாத காரணத்தினால் இடைவெளிகள் ஏற்படுகின்றன.

இந்த இடைவெளிகளே நாளடைவில் விரிசலுக்கு காரணமாகின்றன. ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரமே. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் விழ வாய்ப்பில்லை.ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரமே.

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் விழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

குடும்பம் என்றாலே ஏதாவது சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

நான் சுவாசித்த மண்ணும் மக்களும்.

இது என்னோட முதல் பதிவு .


இதை ஒரு சுவாரஸ்யமான பதிவாக கொடுக்க முயற்ச்சிக்கிறேன். இப்போது நான் உங்களை ஒரு அருமையான , அழகான கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ராமநாதபுரம்  மாவட்டம்தா, கிளியூர் தான்  என் பூர்வீகம். சாலை முழுதுமே , கருவேல மரங்களும், பனை மரங்களும் தான் இருக்கும்.

நகரத்திற்கும் கிராமத்திற்கும் இருக்கும் உறவை இணைக்கும் தொப்புள் கொடி போல் இருக்கும் சாலை, காலை, மாலையென இரு நேரம் மட்டுமே  நகர் பேருந்து நடைபயணம் செல்லும்.



காலை விடிந்ததும்  நான் கண்ணைக் கசக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வரும்போது, ஒவ்வொரு வீட்டுப்  பெண்களும் மாட்டு சாணத்தால் வாசல் தெளித்துக்கொண்டிருப்பார்கள், அதனால் தானோ? என்னவோ இவர்கள் வீட்டு பக்கம் நோய் நொடிகள் எட்டிப் பார்ப்பதில்லை.

உழவர்கள் ஏர் கலப்பை   சுமந்துகொண்டும், கயிறு திரிக்கவும், விவசாய வேலை பார்க்கவும் செல்லும் பெண்கள் கையில் ஒரு தூக்கு வாளியுடனும் தோளில் சுருமாட்டுத் துண்டுடனும் செல்வார்கள்.

சில பெண்கள் இடுப்பிலும், தலையிலும் தண்ணீர்க் குடம் கொண்டு செருப்பில்லக் கால்களுடன் நடந்து வரும்போது, கால் கொலுசு ஓசை இளையராஜாவின் இசையை விட இனிமையானது.

காலை உணவு கட்டாயம் வேண்டுமென்று இரவின் வறுமை உணர்த்தியதால் கடன் வாங்கிய நெல்லும், கேழ்வரகும் உரலுக்கும் உலக்கைக்கும் இடையில் மாட்டிகொண்டு தவியாய் தவிக்கும். உஸ் உஸ் என்னும் உரத்த குரலுடன்.

உலக்கைச் சத்தம் தினந்தோறும் ஏதாவது ஒரு வீட்டில் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.

உழுத புழுதி மண்ணை இருண்ட மேகத்துடன் மழை துளிகள் மெல்ல மெல்ல நனைக்கும் போது, என் கிராமத்து மண்ணின் மனம் இதுவரை எந்த ஒரு வாசனை திரவியத்திலும் இல்லை. மழைவருது என்று ஊருக்கே தகவல் கொடுக்கும் சிறு குழந்தைகள், அடேய் மழைவருது சாக்கை எடுத்துட்டு வா... இப்படி ஊரே பரபரப்பாகிவிடும். விரித்த நெல்லும் காயவிடாமல் பண்ணுதே இந்த மேகம் என்று புலம்பல் ஒருபக்கம், வந்த மழை காற்றோடு போயிருச்சே என்று புலம்பலும் ஒருபக்கம்,


உறவுகள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு நாளைக்கு ஒருவரின் வயல்களில் களைபறிக்கும் அழகைக் காணும்போது எறும்பும் இவர்களைப் பாத்துக் கத்துகொன்டதோ? என்று நினைக்கத் தோன்றும். அவ்வளவு ஒற்றுமையும் சுறு சுறுப்பும் அவர்களிடம் இருக்கும்.


வயல் வெளிகளில் எங்காவது ஒரு வேப்பமரம் இருக்கும், அந்த மரத்தின் நிழலில் மதியம் உணவு இடைவேளையில் எல்லோரும் ஒன்று கூடி கொண்டுவந்த கஞ்சிக்கு இரண்டு வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு புளி இதை எல்லாத்தையும் கொஞ்சம் நீர் விட்டு பிசைந்து கொள்வார்கள், இதுதான் இவர்களின் மிக சிறந்த உணவு. இந்த உணவின் ருசியை வேறு எந்த உணவகத்திலும் இதுவரை கிடைக்கவில்லை.கொஞ்சம் களைப்பை போக்கஒருவர்் தலையைஒருவர் ்அவிழ்த்து்களின் கள்ளமில்லாத உள்ளங்கள் காலத்தால் கடந்து செல்லும்.


விளைந்த நெல்லை அறுவடை செய்யும்போது கும்மி பாட்டும், குலவை சத்தமும், ஊர் எல்லையை தாண்டி வசிக்கும் உறவுகளின் காதில் ஒலிக்கும். தலையில் நெல் கட்டு சுமந்து ஓட்டமும், நடையுமாய் ஓடும் போது நெல்மணிகளின் ஓசையை யாராலும் எந்த ஒரு இசை கருவியாலும் இசைக்கமுடியாதவை,

மார்கழி பணியில் நெல்லுக்கு காவல்காக்க கயத்து கட்டிலுக்கு மேலே வைக்கோலை போர்த்தி கட்டிலுக்கு கீழே ஓலை பாய் விரித்து நெல் பொதியை தலையனையாக்கி தூங்கும் சுகமே சுகம் இந்த சுகம் எங்கும் இல்லை.

கோடை காலத்தில் கோவில் திருவிழாக்களும் பண்டிகைகளும் நிறைந்திருக்கும். வெயிலின் தாக்கத்தை போக்க வீட்டுக்கு முன் ஒரு வேப்ப மரம் இருக்கும். நெல் மூட்டைகளும், மிளகாய் மூட்டைகளும் வீட்டுக்குள்ளே தூங்கும் இவர்களோ முற்றத்தில் தூங்குவார்கள். உழைக்க மறுக்காத உறவுகள், உள்ளத்தால் கறைபடியாத என் உறவுகள், ஒரு நேரத்தில் இருந்தது

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...