சனி, 22 ஆகஸ்ட், 2020

குஞ்சன் சக்சேனா இந்தி திரைப்பட விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு (Gunjan Saxena: The Kargil Girl ) ஒரு நல்ல ஹிந்தி  திரைப்படம்  பார்த்தேன்! அந்தத் திரைப்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.


படத்தின் கதை:

முன்னால் விமானப்படை விமானி குஞ்சன் சக்சேனா ( ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்தது ) எதிர்கொண்ட  நம்பமுடியாத நிஜ வாழ்க்கைக் கதை, போராட்டங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடு ஆகியவற்றை இந்த படம் விவரிக்கிறது. ஆண், பெண் பாலின பாகுபாடுகள் மலைகள் போலவே பழைமையானது. அப்பழமையை உடைத்தெறிய நினைத்தால்  அது அவ்வளவு எளிதல்ல... ஆளாலும் குஞ்சன் சக்சேனா விடாமுயற்சியால் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து வானில் சிறகை விரித்துப் பறப்பதுதான் கதையின் சுருக்கம்.

பெண் ராணுவ விமானிகள் இல்லாத துறையாக இருந்தபோது லக்னோவைச் சேர்ந்த குஞ்சன் சக்சேனா தொன்னூறுகளில் ஐ .ஏ எப் பைலட் ஆனார். முற்றிலும் பெண்கள் இல்லாத துறையில் முதல் பெண்மணியாக காலடியை பதித்தார்.

சுதந்திரம் அடைந்து அறுபத்தி ஆறு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது முதல் பெண் போர் விமானியை விமானப்படையில் நியமித்தது.. இதற்கு முன்னர் பெண்கள் போர் விமானியாக சேர்க்கப்படவில்லை. விமான லெப்டினன்ட்கள் குஞ்சன் சக்சேனா மற்றும் ஸ்ரீவித்யா ராஜன் ஆகியோர் மற்றவர்கள் பின்பற்ற வழி வகுத்துக்கொடுத்தனர்.. குஞ்சன் சக்சேனா 1999 ஆம் ஆண்டில், தனது 24-வது வயதில் கார்கில் போர்க்களத்தில் சீட்டா ஹெலிகாப்டர்களில் பறக்கும் இந்தியாவின் முதல் பெண் போர் விமானியாக ஆனார். அந்த உண்மைக் கதையை எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாமல் படமாக்கிருக்கிறார் இயக்குநர் ஷரன் சர்மா.

விமானியாக வேண்டுமென்ற கனவுகள் எங்கிருந்து முளைக்கிறது என்றால்... தனது சிறுவயதில் குஞ்சன் சக்சேனா அவரின் சகோதரனுடன் விமானத்தில் பயணம் செய்வாள்... சன்னல் ஓரத்தில் இருந்துகொண்டு அண்ணன் துங்கிக்கிக்கொண்டிருப்பான்.... குஞ்சன்  வானத்தை வேடிக்கை பார்க்க நினைத்து விண்டோ சட்டரை திறக்கும்போது அண்ணன் அதை அனுமதிக்கமாட்டான்... அந்த புறக்கணிப்பை பார்த்த விமானப் பணிப்பெண் அவளை விமானி அறைக்குள் அழைத்துசென்று விமானம் வானில் பறப்பதை காட்டுவாள் , அந்த சிறுமியை சுதந்திரமாக வேடிக்கை பார்க்க அனுமதிக்கும் அந்த அனுமதிப்பிலிருந்து அவளின் அனவுகள் சிறகை விரித்துப் பறக்கிறது..... விமானத்தை நான் ஓட்டமுடியுமா என்ற கேள்விக்கு அந்த விமானி.... இந்த சீட்டில் உட்கார வேண்டுமானால் முதலில் நீ  பைலட் ஆகவேண்டும் என்பார்.... விமானியின் அறையை வேடிக்கை பார்த்ததிலிருந்து அந்தச் சிறுமிக்கு தானும் விமானியாக வேண்டும் என்ற ஆசை வருகிறது...

குஞ்சு.. தனது அண்ணனுடன் சேர்ந்து டைனிங்டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும்போது நான் ஒரு பைலட் ஆகவேண்டும் என்பாள்... பெண்ணெல்லாம் பைலட் ஆகமுடியாது... இந்தா இதைப்பிடி... வெஜ் வேணுமா... நான்வெஜ் வேனுமானுன் கேள்... என்று  அவள் கையில் பாத்திரத்தை கொடுப்பான்.....  பெண் எப்படி அடிமையாகிறாள் என்பதையும்  காலம் காலமாக நடக்கும் பாலின பாகுபாடுகளையும்  இரண்டே வரியில் மிக எளிமையாக உணர்த்தியிருப்பார் இயக்குநர்.

குஞ்சனாவின் தந்தை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி... தனது மகனையும், மகளையும் சமமாக வளர்த்தவர்... அவர் ஒரு சிறந்த தந்தையாக இருப்பதால்தான் குஞ்சுவால் தன் கனவுகளை எட்டிப்பிடிக்க முடிந்தது... ஒரு தந்தையாக தன் மகளின் கனவுகளுக்கு துணையாக மட்டுமே நின்றார்.... ஒரு பெண்ணால் என்ன செய்யமுடியும், எப்படி இருக்கவேண்டும், என்னவெல்லா செய்யக்கூடாது அல்லது செய்யமுடியாதென்று எந்தப் பாடமும் நடத்தவில்லை... அவள் சிறுவயதிலிருந்தே ஒரு விமானத்தைத் தான் இயக்க வேண்டும் என்று விரும்பினாள்... அதை அவள்  செய்தும் முடித்தாள். ஒரு தந்தையாக அவர் அறிவுரையாகவோ...   கட்டளையாகவோ... அல்லது அவளின் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையோ ஒருபோதும்  சொல்லவில்லை என்றாலும்  அவளின் கனவுகளின் பின்னே, அதைச் சிதைக்காமல் தொடர்கிறார்...  அவளும் தன் கனவுகளை நனவாக்கி வானில் பறக்கிறாள்.

இந்தப் படத்தில்  பாலின இயக்கவியலை நேர்மையாகவும் சமநிலையுடனும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஷரன் சர்மா. தன்னை ஒரு ஆண் புறக்கணிப்பதும், அதே சமயத்தில் ஒரு கட்டத்தில் மற்றொருவர்  தன்னைச்  சமமாக நடத்துவதுமாக குஞ்சன் எதிர்கொள்ளும் ஆண் பெண் பேதத்தை எந்த ஒரு சமரசமும் இன்றி இயக்குநர் மிகத் தெளிவாக நம் முன்னே கதையாய்  விரிக்கிறார். படத்தைப் பார்க்கும்  ஒவ்வொருவருக்கும் இது குறித்த விமர்சனங்களையும் விவாதங்களையும் கண்டிப்பாக  முன்னெடுக்க வைக்கும் என்பதே உண்மை. இதைத்தான் இயக்குனரும் விரும்புகிறார் என்பது அவரது கதை நகர்தலில் தெரிகிறது.

கதாபாத்திரங்கள் மீதான இயக்குநரின் பார்வை மிகவும் யதார்த்தமாய்.. மனிதாபிமானமிக்கதாய் இருக்கிறது. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் தேசபக்தி, போர் மற்றும்  ஆணாதிக்கத்தை மறுவரையறை செய்ய வைக்கும் படமாக இது இருக்கும்... அதுவே இதன் உண்மையான வெற்றியாகவும் இருக்கும்.

இப்படம் 1999-ல் நடைபெற்ற  கார்கில் போரை பற்றியதாக இருந்தாலும் போரைப் பற்றிய எந்தவொரு பெருமையோ ஆர்ப்பரிப்போ ஏதும் இல்லாமல் இயல்பாக இருப்பதுடன் , தேசபக்திப் பெருமைகளை பெண்களின் உரிமைகளுடன் இணைக்கவுமில்லை படம் தேசபக்தி மற்றும் போரின் கருத்துக்களை மிக  யதார்த்தமாகக் கடந்து பயணிப்பது  ஒரு நிம்மதியைத் தந்தது... எந்த ஒரு இடத்திலும்  சக்சேனா ஒரு தேசியவாத நபரின் முன்மாதிரியாக சித்தரிக்கப்படுவதில்லை, ஆனால் காலப்போக்கில் ஆழ்ந்த தேசபக்தி உடையவராக மாறுகிறார்.

இப்படத்தில்  தேசியவாதத்திற்கும் தேசபக்திக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து, அதை மிகச்  சிறப்பாகக் கையாண்டிருக்கும் இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள்.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...