திங்கள், 16 செப்டம்பர், 2019

சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி:

நாவலாசிரியர்:  . பாலமுருகன்

இந்நூல் 1980-ன் இறுதியிலும்... 90-ன் தொடக்கத்திலும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைவாரத்தில்  வாழ்ந்த சோளகர் என்னும் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட போராட்ட நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. 

அம் மக்களின் வாழ்வாதாரமான பூமி மற்றும் வனப் பகுதிகளிலிருந்து அவர்கள் எப்படியெல்லம் துரத்தப்பட்டார்கள்... வனத்திற்கும் அந்த மக்களுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு எப்படியெல்லாம் துண்டிக்கப்பட்டது என்பதை இந்நாவலின் வாயிலாக நம் உள்ளத்தை உருகி ஓலமிட வைக்கிறார் இதன் ஆசிரியரும் வழக்கறிஞருமான ச. பாலமுருகன்.

இவர் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேலாக சோளகர் இன மக்களுக்காக அவர் எடுத்து வாதாடிய வழக்குகள் மூலமாக ஆண்ட, அதிகார, ஆதிக்க வர்கத்தினரின் கோரப் பற்களுக்கிடையில் எப்படியெல்லாம் அவர்கள் சிக்கி சின்னாபின்னமானார்கள் என்பதை உண்மை நிறைந்த உணர்வுப் பூர்வமான எழுத்தாக்கியிருக்கிறார். 

இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துவிட்டு, வெளியில் சொல்லாமலிருந்தால் நான் மனுசனே கிடையாது.  இதைக் காலம் கடந்து இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு யாராவது சொல்லும்போது இதெல்லாம் சுத்தக் கட்டுக் தையென்பார்கள், உண்மையை உலகிற்கும் உரக்கச் சொல்வதில் தயக்கம் கூடாது என்கிறார் நாவலாசிரியர் ச.பாலமுருகன்.. 

அதிகார வர்க்கத்தின் தாடையைத் தன் பேனாவின் நுனியால் சிதைத்திருக்கும் அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

இந்நாவலில் முன்னுரையில் அவர் பார்த்த, கேட்ட, சந்தித்தவற்றில்  பத்துச் சதவீதத்தை மட்டுமே பதிவு செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார், இந்தப் பத்து சதவீதமே என்னை ஒரு வாரமாக தூங்கவிடாமல் இரவுத் தூக்கத்தை விழுக்கிக் கொண்டு விழித்துக் கொள்கிறது. நூறு சதவீதத்தையும் எழுதியிருந்தார் என்றால் என்நிலை எப்படியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. 

சில நேரங்களில் ஏன் இந்த நாவலை நான் வாசித்தோம் என்ற கேள்வியிடனான வருத்தம் என்னுள்எழுகிறது.

தான் சுமந்த அம்மக்களின் வாழ்க்கைக் கதைகள் பாறையை விடக் கனமானதாகவும், இருளை விடக் கருமையாகவும், நெருப்பை விட வெப்பமாகவும் இருந்ததாகச் சொல்கிறார் நாவலாசிரியர். 

அதிகார வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும் குரலற்றவர்களின் குரல்வளையை எப்படியெல்லாம் நெறிக்குமென்பதை இந்நாவலைப் படித்தபின் உணர்ந்தேன்... பயந்தேன்... படபடப்புக்கு உள்ளானேன். 

இந்நாவலின் கதை என்பதைவிட அம்மக்கள் வாழ்ந்த வாழ்க்கை என்னவென்றால்... 

பழங்குடி மக்கள், தொட்டி என்றழைக்கப்படும் சிற்றூர், அடர்ந்த வனம் இவைகளே இரண்டு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் உயிராய் இருக்கிறது.

முதல் பகுதியில் அம்  மக்களின் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள், கடவுள் நம்பிக்கையென அவர்களின் வாழ்க்கையை நம் கண் முன்னே காட்சிகளாய் விரித்துச் செல்கிறது, ஆழ்ந்து வாசிக்கையில் நம்மை வசீகரித்து அவர்களில் ஒருவனாய் அவர்களுடனேயே அமர வைக்கிறது.

இரண்டாவது பகுதியில் அதிகார வர்க்கத்தின் குறியீடாகத் திகழும் வனத்துறை மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளால் ரத்தமும், சதையுமாகக் சிதைந்து சிதறிக் கிடக்கும் அம்மக்களின் கதையைச் சொல்கிறது. இது கதையல்ல உண்மைச் சம்பவம் என்ற நினைவு அவர்களின் வலியைப் எனக்குள் செலுத்தி என்னை அதிரவைத்தது. இந்தப் பகுதியை கனத்த இதயத்துடன் வாசிக்க வேண்டியிருக்கிறது... அப்படித்தான் வாசிக்கவும் முடியும். 

இந்நாவலின் தொடக்கத்தில் சிவண்ணா அறுவடை செய்து வைத்திருக்கும் ராகியைத் தின்பதற்காக, ஒரு நாள் இரவில் கொம்பன் யானை மூங்கில் தட்டிகளை உடைத்துக்கொண்டு உள்ளே வருகிறது, பல நாட்கள் தூங்காமல் காவல் காத்த சிவண்ணா கொஞ்சம் அசந்து தூங்கியதால் யானை வந்ததை கவனிக்கவில்லை என்றாலும் அது மூங்கில் தட்டியை உடைக்கும் சப்தத்தில் எழுந்து நிலமையைப் புரிந்துகொண்டு தகரத்தை தட்டி ஓசை எழுப்புகிறான்.

அவ்வோசையில் தொட்டி மக்கள் எல்லோரும் விழித்துக்கொள்ள, ஊர் மக்கள் ஒன்றாய் இணைந்து வெடி வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் கொம்பனைக் காட்டுக்குள் விரட்டுகிறார்கள், பிறகு மீண்டும் யானை வந்தாலும் வருமென்று தொட்டி மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் காவல் இருக்கிறார்கள்.

குளிரைப் போக்க நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி பெண்கள் வட்டமாக கும்மியடித்தும், ஆண்கள் தப்பு அடித்தும், பீனாச்சி நாதம் வாசித்தும், அந்த இரவை மகிழ்வாகவும் சந்தோசமாக கடத்துகிறார்கள். 

அப்போது கொம்பன் யானையை வனத்தில் பார்ப்பது மிகவும் அரிது... அது சத்யத்துக்குக் கட்டுப்பட்டது  என்று சொல்லும் கொத்தல்லி, அதுக்கு உணவு ஏதுமில்லாமல் போனதால்தான் இங்கே வந்துவிட்டது... மூங்கில் குருத்துக்களைத்தான் அது விரும்பி உண்ணும். இப்பொழுது காடுகளில் கீழைய நாட்டவர்கள் மூங்கில்களை லாரி லாரியாக வெட்டிக்கொண்டு போகிறார்கள் என்றும் சொல்கிறார்.

காடுகள் அழிக்கப்படுவதையும், அதன் பாதிப்பையும் எதார்த்தமாக எந்த ஒரு பிரச்சார நெடியும்  இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர். 

இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல தொன்றுதொட்டே பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது மறுபிறவி எடுப்பதற்குச் சமமானது. அதிலும் இன்றைய படித்த பெண்கள் குழந்தைப் பேறுக்குப் பின் ஒரு வேலையும் பார்ப்பதில்லை... ஆனால் சோழகர் மக்கள் குழந்தை பெற்ற மறுநாளே காட்டு வேலைக்குப் போவதும், வீட்டு வேலை செய்வதும் சர்வ சாதாரணமான விஷயமாய் இருக்கிறது. இதிலிருந்து அவர்களின் உடல் வலிமையும் மன தைரியமும் நம் கண் முன்னே காட்சிப்படுத்தப்படுகிறது. 

சிக்குமாதா வேட்டையாடுவதில் வல்லவன், அவன் ஒருநாள் மானை வேட்டையாட காட்டில் விரட்டிச் செல்லும்போது கரடியால் தாக்கப்பட, ஒரு வேட்டையாடி தன் உயிர் போகப் போகிற பயத்தில் அந்தக் கரடியை எதிர்த்து வாள் வீச, அதில் கரடி கொல்லப்படுகிறது. அதைத் தூக்கி வரும் சிக்குமாதா தொட்டி மக்களிடம் தான் ஒரு மகாவீரன் என்பதாய்க் காட்டிக்கொள்கிறான், தொட்டி மக்களும் தகப்பன் கொத்தல்லியும் , சிக்குமாதாவின் செயலைப் பாராட்டிப் பெருமை அடைகிறார்கள். 

ஆனால் அவன் தாய் ஜொகம்மாள் மட்டும் அந்த வீரத்தையும் கரடியைக் கொன்றதையும் ரசிக்கவில்லை, சோளகர் மக்கள் காட்டில் எண்ணற்ற செல்வங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அபகரித்துக் கொள்வதில்லை, தங்களுக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள் என்பதை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர். 

இம்மக்கள் வேட்டையாடிய மாமிசத்தை, அவர்கள் மட்டுமே உண்பதில்லை, யார் வேட்டையாடிக் கொண்டு வந்தாலும்,தொட்டி மக்கள் எல்லாருக்கும் பங்கு வைத்துக் கொடுக்கிறார்கள், இந்தப் பங்கில் அவர்கள் வளர்க்கும் நாய்க்கும் சில துண்டுகள் உண்டு. இது அவற்றின் மீதான அவர்களின் அன்பைக் காட்டுகிறது, இதன் மூலம் அவர்களின் ஒற்றுமையான, அன்பான வாழ்க்கையை நமக்கு அறியத் தருகிறார் ஆசிரியர்.

மணிராசன் திருவிழா, கடவுள் நம்பிக்கையை , மூட நம்பிக்கை, பெண் வீரம், பெண் தன் துணையைத் தேர்வு செய்வதில் இருக்கும் சுதந்திரம், மறுமணம், இன ஒற்றுமையென சந்தோசமாக நகர்கிற அம்மக்களின் வாழ்க்கையில் இருள்  சூழக் காராணமாகிறது கரடி வேட்டை.

கரடி வேட்டையாடியதைக் காரணம் காட்டி ஆதிக்க வர்க்கமும், அதிகார வர்க்கமும் இவர்களின் அறியாமையைப் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, துரையன், மணியக்காரன் போன்றவர்களை வைத்து சூழ்ச்சி வலை பிண்ணி நிலங்களை அபகரிக்கின்றன, 

ஒரு கட்டத்தில் அம்மக்கள் தங்களின் சொந்த நிலத்திலேயே கொத்தடிமைகளாக நிற்கும்போது வாசிக்கும் நமக்கு மனது கனக்கிறது... கண்ணீர் வருகிறது. 

நாவலின் இரண்டாவது பகுதி 

வீரப்பன் என்ற ஒரு தனி நபரைத் தேடுகிறோம் என்ற பெயரில் இம்மக்களின் உழைப்பையும், உடைமைகளையும் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கிறார்கள் என்பதை ஆசிரியர் வலியோடு சொல்ல ஆரம்பிக்கிறார், 

அதில் முதல்கட்டமாய் இனி காடுகளுக்குள் நுழையக்கூடாது என இந்த மக்களுக்கு உத்தரவிடப்படுகிறது, காடு முழுவதும் நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துக் காட்டை மட்டுமே நம்பி வாழ்ந்த மக்களுக்கு அதிகார வர்க்கத்தோடு, மழையில்லா வானமும் கைகோர்த்து வஞ்சகம் செய்ய ,வாழ வழியின்றி அவர்கள் தவிக்கும் தவிப்பை வாசித்தபோது என் கண்களின் ஓரம் மெதுவாய் கண்ணீர் எட்டிப்பார்க்க என் விழியின் இமைக் கதவுகள் சாத்திக்கொண்டது.. மனசு வலி சுமந்தது. 

விசாரணை என்ற பெயரில் தொட்டியில் இருக்கும் ஆண்களையெல்லாம் முகாமுக்கு அழைத்துச்சென்று மகனை வைத்தே அப்பனை அடிக்கச் சொல்வதும், பின் அப்பனை வைத்தே மகனை அடிக்கசசொல்வதுமாய் மிகவும் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். 

மலம் போகும் அளவிற்கு அடிப்பதும், பின் மலத்தை எடுத்து தின்ன வைப்பதும், நகத்தை ஒவ்வொன்றாக பிடுங்குவதுமே காவல்துறையின் குறைந்தபட்ச தண்டனையாம்.

காவல்துறையின் அடக்குமுறைக்குப் பயந்து ஆண்கள் காட்டுக்குள் ஓடிவிட்டால் அந்த வீட்டுப் பெண்களை முகாமிற்கு அழைத்துச் செல்வதும் கொடுமைப் படுத்துவதும் தொடர்கிறது. 

ஒருமுறை நிறைமாதக் கர்ப்பிணியான மல்லியைக் காவல் நிலையத்தில் உடைகளைக் களைந்து நிறுத்துவதும், அந்த நேரத்தில் அவள் பிரசவ வலி வந்து துடிக்கவும் சிறையில் இருக்கும் ஆண்களை வைத்தே பிரசவம் பார்க்கிறார்கள். ரத்தமும் சதையுமாகக் கிடக்கும் குழந்தையின் தொப்புள்கொடியைத் துண்டிக்க ஒரு கத்தி கூட இல்லையா அல்லது கொடுக்க மனமில்லையா என்ற நிலையில் மல்லி தன் வாயால் கடித்து தொப்புள்கொடியைத் துண்டிக்கிறாள். இவ்வுலகை காணவந்த குழந்தையையும் தாயையும் காவல்துறை நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிடுகிறது. வாசிக்க முடியாத வலிகள் இவை... அனுபவித்தவர்களின் வலி எப்படியானதாய் இருந்திருக்கும்..?

விசாரணை என்ற பெயரில் சோளகர் பெண்களை நிர்வாணமாக வானத்தை பார்த்துப் படுக்க வைத்து, காவலர்கள் தங்களின் காக்கி உடை கறைபடாதவாறு அவர்கள் மீது பூமியை பார்த்து படுத்து தன் வக்கிரம் தீர்த்துக் கொள்கிறார்கள், ஒரு பெண்ணை ஏழெட்டுப் பேர் மேய்கிறார்கள்... அவர்களின் வேதனைக் குரல் இவர்களுக்கு சந்தோஷ இசையாகிறது.

ஆடைகளற்று ஆண், பெண் எல்லோரையும் அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்தியும் மகிழும் காவல்துறை, மாதி என்னும் பெண் உதிரப் போக்கில் துவண்டு கிடக்கையில் கூட தங்கள் வக்கிர தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். மேலும் விசாரணை என்ற பெயரில் மார்பக்கதிலும், பிறப்புறுப்பிலும் மின்சாரம் பாய்ச்சி குளிர் காய்கிறது வன்மம் நிறைந்த காவல்துறையின் அதிகாரம். 

புட்டனை காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொன்று அவர்களே தீ வைத்து எரித்ததும், சிவண்ணா காவல்துறையின் அடி தாங்காமல் இரவில் தப்பித்து காட்டுக்குள் ஓடி ஒளியும் நிலையில் வீரப்பனிடம் மாட்டிக்கொண்டு அவனின் கூட்டாளியானதும் அதிகாரத்தின் அம்புகள் இன்னும் ஆக்ரோசமாக பாயத் தொடங்கியது.

வீரப்பனுக்கு மழைவாழ் மக்களிடமிருந்து உணவு, பிற உதவிகள் கிடைப்பதாக காவல்துறை தீர்க்கமாக நம்புகிறது, அதனால் அவர்களை எந்த  அளவிற்கு அச்சப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அச்சப்படுத்த வேண்டும்மென்று அதிகாரத்தின் அடுக்குகளில் இருந்து வரும் உத்தரவு கண்டிப்பாய்ச் சொல்கிறது. 

காக்கிச்சட்டையென்பது வேடனுக்கும், மானுக்குமிடையில் சீறிப்பாயும் அம்புதான் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. 

மாதியையும் சித்தியையும் தொட்டியில் கொண்டுவந்து விட்ட சுபாஷ் என்ற காவலரின் கருணைப் பார்வையில் எங்கோ ஓர் இடத்தில் மனித நேயம் இருக்கத்தான் செய்கிறது எனத் தோன்றுகிறது, அப்போதுதான் அத்தொட்டி கொஞ்சம் கொஞ்சமாக அம்மக்களின் வாரிசுகளையும் வனங்களையும் காக்கும்மென்ற நம்பிக்கை பிறக்கிறது. 

பரமக்குடி, தூத்துக்குடி,நெய்வேலியென அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது, இதையெல்லாம் கண்டித்து எழுத வேண்டிய பத்திரிக்கைகளும், மீடியாவும் பொருளீட்டுவதையே குறிக்கோளாய் கொண்டு ரம்யா பாண்டியன் போன்றோரின் இடுப்பு மடிப்பில் வீழ்ந்து கிடக்கிறது... சினிமாவும் கிரிக்கெட்டும் மட்டுமே செய்திகளாய்ச் சிரிக்கின்றன இவர்களின் எழுத்தில். 

ச. பாலமுருகன் போன்ற தமிழ் இலக்கியவாதிகளால் மட்டுமே தங்கள் எழுத்தால் அதிகார வர்க்கத்தின் கைகளைக் கட்டமுடியும். இதுபோன்று எங்கெல்லாம் மனித உரிமை மீறல்கள் நடக்கிறதே அதையெல்லாம் வாழ்வியல் உணர்வுள்ள எழுத்தாளர்கள் பதிவு செய்யவேண்டும் என்பதை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

இந்நாவல் புனைவேதுமில்லாமல் ஒரு ஆவணத்தன்மையோடுதான் இருக்கிறது.

சோளகர் மக்களின் சோகங்களை அல்ல ஓலங்களையே இது பதிவு செய்திருக்கிறது.

வாசித்த மனசுக்குள் சுனாமியாய் இன்னும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது சோளகர் தொட்டி.

வாழ்த்துக்கள் ச.பாலமுருகன்... இன்னும் பதியுங்கள்... பதியப்படாமல் விட்ட, மறக்கடிக்கப்பட முயல்கிற வாழ்க்கைக் கதைகளை.. வாசிக்கக் காத்திருக்கிறோம்...

 

இப்படிக்கு 

மு. பால்கரசு


 

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...