புதன், 26 செப்டம்பர், 2012

உறவுகள்

பெரும்பாலான பாலூட்டிகளைப் போல மனிதனும் ஒரு கூட்டமாகக் கூடி வாழும் இயல்பினன்.குடும்பம் என்ற அமைப்பு ஏற்பட பல நூற்றாண்டுகள் கடந்திருக்க வேண்டும். சங்க காலத்தில் தனிக் குடும்ப அமைப்புதான் தமிழகத்தில் பெரு வழக்கினில் இருந்தது. கூட்டுக் குடும்பம் என்ற கருத்தியல், சொத்துடமைச் சமுதாயம் வலுவடைந்த பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டும்.

‘கற்பு’ என்ற கற்பிதமும், கணவன் பிரிந்து வெளியே போனாலும், அவனுக்காக காத்திருத்தல் குடும்பப் பெண்ணின் இலக்கணம் என்ற வரையறை செய்திட சங்கப் பாடல்களும் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களும் முயன்றுள்ளன. குடும்ப அமைப்பினுக்குள் இணங்கி வராமல், பழைய தாய் வழிச் சமூக அமைப்பின் எச்சமாகத் தன்னிச்சையாக வாழ்ந்த பெண்களைப் ‘பரத்தை’ என்று குறிப்பிடும் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்களிடையே கூட்டுக் குடும்ப அமைப்பு வலுவாக நிலவியது. கணவன் இறந்துவிட்டால் விதவையான மனைவிக்குக் குடும்பச் சொத்தில் எந்தப் பங்கும் கிடையாது.

பெரிய கோடீஸ்வரர் இறந்தாலும், அவனுடைய மனைவிக்கு, தினசரி பொங்கிச் சாப்பிட கால்படி அரிசியும் வருடத்திற்கு இரண்டு சேலைகளும்தான் தரப்பட்டன. அதுதான் அந்தக் காலத்து நியாயம்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் புதிய சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும், அண்ணன் இறந்துவிட்டால், ‘ஏகக் குடும்பம்’ ஆக வாழ்ந்தோம் என்று தனது அண்ணியின் மீது வழக்குத் தொடுத்த சம்பவங்கள் பல நிகழ்ந்தன. தன்னுடைய அண்ணன் சொத்து வெளியே இருந்து மனைவியாக வந்து பிள்ளையும் பெற்றுக் கொண்ட பெண்ணுக்குப் போவது எந்த வகையில் நியாயம் என்று நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிய தம்பிகள், அன்று இருந்தனர்.

கிராமப்புறங்களில் யாராவது ஒருவர், வாரிசு இல்லாமல் இறந்து விட்டால் சுடுகாட்டில், கொள்ளிக் குடம் உடைத்து, கொள்ளி வைத்தவருக்குத்தான் சொத்து என்று பலரும் நம்பினர். குடும்பம் என்ற அமைப்பு வலுவடைவதற்குச் ‘சொத்து’ தான் ஆதாரமாக இருந்தது.

அறுபதுகளில் கூடக் கிராமப்புறங்களில் எல்லோரும் வயல் வேலைகளின் மூலம் தான் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர். அரசு அலுவலகங்கள், வியாபாரம், வட்டிக்கு விடுதல் என்பது மிகக் குறைவு.பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வீக நிலத்தின் மீது எல்லோருக்கும் பெரும் மரியாதை இருந்தது.
ஒரு குடும்பத்தில் நான்கைந்து அண்ணன் தம்பிகள் இருந்தனர் எனில், எல்லோரும் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டனர். பெரிய வீட்டில் ஒரே ‘உலை’ தான் பொங்கியது. ஒரு வேளைக்கு இரண்டு படி அரிசி சோறு ஆக்குவது சாதாரணம். சிலர் ஆடுமாடு மேய்த்தல், தென்னந்தோப்பு மூலம் வருமானம் ஈட்டினாலும், அதுவும் பொது வருவாய்க்குள் வந்து சேரும்.

இதுபோன்ற வசதியான குடும்பங்களில் நிலவிய உறவுமுறையானது, கூலி உழவர்களின் வீடுகளிலும் நிலவியது. குடும்பத்தில் தந்தை சொல்லுக்கு மறுப்பில்லை. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’, தந்தை சொல் கேளாத பிள்ளை குலத்திற்கு ஹீனம்’ போன்ற சொலவடைகள் தந்தையின் இருப்பை உறுதிப்படுத்தின.

தந்தை பேசும்பொழுது, பிள்ளைகள் அவருடைய முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசும் வழக்கமில்லை. பேரன் பேத்தி எடுத்த மகன் எனினும் - 50 வயது - தந்தையிடம் ஏதாவது சொல்ல வேண்டுமெனில், முகத்தைப் பார்த்துப் பேசுதல் என்பது மரியாதைக் குறைவாகக் கருதப்பட்டது.

என்னுடைய தந்தையார், பெரியப்பா, சித்தப்பா 4 பேர்) ஆகிய ஆறுபேரும் அவர்களுடைய அப்பாவிடம் பேசும்பொழுது, வேறு எங்கோ பார்த்துக்கொண்டு பேசுவார்கள். எங்க அப்பச்சியும் தனது மகன்களை விவரம் அறியாத சிறுவர்கள் என்பது போல அறிவுரை சொல்லுவார். சற்றுத் தள்ளி நின்று பார்க்கும் எனக்கு எல்லாமே வேடிக்கையாக இருக்கும்.

உடன்பிறந்தவர்களிடையே பேசும்பொழுது கூட, இருவரும் வேறுவேறு திசைகளில் பார்த்துக் கொண்டு பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அண்ணன் என்பவர் பெரியவர், மரியாதைக்குரியவர், குடும்பத்தலைவர் என்ற மதிப்பீடு நிலவியதால், மறுப்புச் சொல்வது தவறாகக் கருதப்பட்ட காலம் அது.

பொதுவாகக் குடும்பத்தில் மூத்தவர் சொல்வதற்கு ஏதாவது பதில் அல்லது வேறு கருத்து சொன்னால், அது ‘அதிகப்பிரசங்கித்தனம்’ என்று கருதப்பட்டது. ஒருவிதமான அடிமைத்தனம் குடும்ப உறவுகளில் நிலவியது. இத்தகைய போக்கினுக்கு எதிராகக் குரலெழுப்பும் பெண்கள், சரியான கருத்து அல்லது நியாயத்தைத் தங்கள் கணவர் மூலம் தெரிவிப்பது கண்டிக்கப்பட்டது. ‘ராத்திரி புருஷனுக்கு தலையணை மந்திரம் போட்டு விடுகிறாள்’ என்று மருமகளைத் திட்டும் கிழவிகள் எங்கள் ஊரில் ஏராளம்.மனைவி சொல்லும் நியாயமான கருத்தைத் தனது தாயிடம் அல்லது தந்தையிடம் அல்லது அண்ணனிடம் தெரிவித்து விட்டால் போச்சு. வீட்டில் குழப்பம்தான்.

‘அவள் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுவிட்டு நடக்கிறான். பொம்பளை பேச்சைக் கேட்கிறவன் உருப்படுவானா? பொண்டுகப் பய’ என்று வசவு கிளம்பும். நிலமான்யச் சமூக மதிப்பீடு நிலவிய சூழலில், மனைவி பேச்சைக் கேட்கும் கணவனைப் பயமுறுத்திட ஒரே ஆயுதம் ‘ஆண்மை’யைச் சந்தேகிக்கும் பேச்சுதான். அப்புறம் ‘ஆண்’ முன்னோர்-பெரியோர் - வகுத்த வழியில் செல்ல வேண்டியதுதான்.
கிராமத்தில் ஒவ்வொருவரும் இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என்று அடையாளப் படுத்தப்படுகின்றனர். குடும்பத்திற்கெனத் தனிப்பட்ட மரியாதை நிலவியது உண்மைதான். நான்கைந்து தலைமுறைகளாகச் சொத்தினைச் சேர்த்துக் கொண்டு, வளமாக வாழ்ந்து வரும் பரம்பரையினர், ஏதோ ஒருவகையில் போற்றப்பட்டனர். இத்தகைய குடும்பப் பின்புலத்திலிருந்து வந்த ஆண்/பெண் சமூக ஒழுங்குகளை மீறும்போது ‘அந்தக் குடும்பத்திலிருந்து வந்தவனா/ளா இப்படிச் செய்வது? அது எப்பேர்பட்ட குடும்பம்’ என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

குடும்ப உறவுகளில் முதன்மையானது ‘பங்காளி’ உறவுதான். கோவில் திருவிழா, குலதெய்வம் சாமி கும்பிடுதல், மரணம் போன்ற நிகழ்வுகளில் பங்காளிகள் முக்கியமானவர்களாக நடத்தப் பெற்றனர். ஒரே தந்தையின் கீழ் வந்த வாரிசுகள் எல்லாக் குடும்பங்களிலும் கௌரவிக்கப்பட்டனர். நல்லது, கெட்டது - இரண்டுமே பங்காளிகள் இல்லாமல் நடக்காது.

நிலத்தை மூலமாகக் கொண்டு வாழ்ந்த நிலமான்ய அமைப்பில் அவ்வப்போது ஏற்படும் சண்டை, சச்சரவுகளில் பங்காளிகள் ஒரே அணியில் திரண்டு நின்றனர். ஒருவிதமான சமூகப் பாதுகாப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பங்காளிக்காக, தனது உயிரைக் கூடச் சண்டையில் இழந்தவர்கள் உண்டு, குலதெய்வம் கும்பிடும்போது-துடியான தெய்வங்களான மாடன், இசக்கி - பங்காளிகள் ஒன்று சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.

பங்காளிகளுக்கிடையில் ஏற்பட்ட சண்டையினால் மூன்று தலைமுறையாகப் பேச்சு வார்த்தை இல்லாத குடும்பங்கள் எங்கள் ஊரில் இருந்தன. ஐந்து வயதுச் சிறுவனிடம்கூட ‘பங்காளி எதிரி’ எனக் கற்பிக்கப்பட்டு, அந்த வீட்டுப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவது தண்டனைக்குரியதாகக் கருதப்பட்டது. ‘பரம்பரை பகை’ என்று ஏதோ ஒன்றை ரோஷமாகப் பிடித்து வீராப்புடன் திரிந்தவர்கள் அன்று பலர் இருந்தனர். வெளியூர்களில் இருந்து வீட்டிற்க்கு மருமகளாக வந்த இளம் பெண்களுக்குப் பிரச்சினை எதுவும் புரியாவிட்டாலும், விரோதம் கொள்வார்கள்.

பெரியவர்கள் ‘மண்டை’யைப் போட்ட பிறகு ராசியான பங்காளிகளும் எங்கள் ஊரில் உண்டு. யாரோ ஒரு பெரியவர் முன்னிலையில் சமரசம் பேசி, வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்வதுடன், இரு வீட்டிலிருந்து வரும் தண்ணீரையும் மாற்றிக் குடிப்பதுடன் எல்லாம் ராசியாகிவிடும். ஏற்கனவே ஒளிவு மறைவாகப் பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

எழுபதுகளின் தொடக்கத்தில்கூட ஒரு வீட்டில் பெண் எடுக்கப் போனால், அப்பெண்ணுடன் பிறந்த அண்ணன் தம்பி உண்டா என்று கட்டாயம் விசாரிப்பார்கள். ஆண்வாரிசு இல்லாத வீட்டில் பெண்ணைக் கட்டத் தயங்குவார்கள். "எதிர்காலத்தில் ஏதாவது நல்லது கெட்டதுன்னா ‘மச்சினன்’ வேணும்ல" என்பார்கள். ‘மலைக்குப் போனாலும் மச்சினன் தயவு வேண்டும்’ என்ற பழமொழியை வரிக்கு வரி உண்மை என்று நம்பினர். யதார்த்ததில் உடன்பிறந்த சகோதரிக்காக, மச்சினன் கிராமத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது பக்கபலமாக நின்றனர்.

அன்றைய காலகட்டத்தில் சின்னப் பிரச்சினைக்குக் கூட அடிதடி, தகராறு என மோதிக் கொண்ட கிராமத்து வாழ்க்கை முறையில், மைத்துனர்களின் ‘தயவு’ மிகவும் தேவைப்பட்டது.

அறுபதுகளின் இறுதியில்கூட வீட்டிற்கு ஏழெட்டுக் குழந்தைகள் என்பது சர்வசாதாரணம். கிராமப்புறத்தில் நிலவிய குழந்தை வளர்ப்பு பற்றிய மூட நம்பிக்கை காரணமாகவும், போதிய மருத்துவ வசதி இன்மையினாலும், குழந்தைகள் மரணமடைந்தன. ‘எனக்கு எட்டுக் குழந்தை பிறந்ததில் ரெண்டு தவறிப் போச்சு’ என்று பேச்சுவாக்கில் சொல்லும் பெண்கள் எங்கள் ஊரில் ஏராளம். என்னுடைய உறவினர் ஒருவருக்கு மொத்தம் பத்து குழந்தைகள் பிறந்து, கடைசியில் இரு குழந்தைகள்தான் தங்கின. ஏன் இன்னும் சொல்லபோனால் என் அம்மாவோடு பிறந்தவர்கள் மொத்தம் பத்துபேர். அதில் அம்மா (பூமயில்) சித்தி (பாப்பா) மாமா (ராமசந்தரன்) என மூன்று பேர்மட்டும் தங்கின.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை இறந்துவிட்டால், வீட்டுக்குப் பக்கத்திலே புதைத்தனர். தாயின் அழுகை பலமாகக் கேட்கும். ‘குழிப்பிள்ளை வயிற்றிலே’ என்று சமாதானம் சொல்வார்கள். வயிற்றுப் போக்கினால் மாண்ட கைக் குழந்தைகள் ஏராளம். வறுமை, சுகாதாரமின்மை, மூட நம்பிக்கை நிலவிய சூழலில், தப்பிப் பிழைத்த குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்ப எந்தக் குழந்தைக்கு என்ன நடக்குமோ என்ற பயம் காரணமாகவே பெண்கள் வருடத்துக்கு ஒரு பிள்ளை பெற்றுக் கொண்டனர். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக மாறும்போது குடும்ப உறுப்பினர்களாக மாறி எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஏராளம்.

மகளுக்குத் திருமணமாகி கர்ப்பமாக இருக்கும்போது, தாயும் கர்ப்பமாக இருப்பதை யாரும் வித்தியாசமாகக் கருதிடாத காலம் இருந்தது. ஏனெனில் அப்பொழுது தாய்க்கு வயது முப்பத்தாறு; மகளுக்குப் பதினாறு. பெண் பெரியவளானவுடன் ஓரிரு ஆண்டிற்குள் திருமணம் நடைபெறுவது சாதாரண விஷயம். அவசரமான சூழலில், தனது தம்பியான கைக் குழந்தைக்குப் பால் கொடுத்த அக்காக்கள் அன்று இருந்தனர்.

குடும்ப உறவுகளில் ‘அக்கா-தம்பி’ உறவு மிகவும் முக்கியமானது. பெண் தனது மகளைத் தன்னுடைய தம்பிக்குத் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டினாள். வெளியே எவனுக்கோ தன்னுடைய அருமை மகளைத் திருமணம் செய்து கொடுப்பதை விடத், தனது தம்பிக்குக் கொடுத்தால், நன்கு பார்த்துக் கொள்வான் என்று நம்பினர்.

சின்ன வயதிலிருந்து தூக்கி வளர்த்த பெண்ணை, ஒரு காலகட்டத்தில் பிரியத்துடன் மணம் முடிக்க ‘தம்பி’கள் விரும்பினர்.அந்தப் பெண்களுக்கும் முன்னப்பின்னத் தெரியாதவனைக் கட்டிக் கொள்வதைவிட தன்மீது ஆசைப்படும் மாமனைக் கல்யாணம் செய்து கொள்வதில் ஈடுபாடு காட்டினர். இத்தகைய திருமணங்களில் கடைசி வரை ஆண், ‘அவள் சின்னப் பெண்’ என்று அன்புடனும், பெண், ‘அவன் மாமா மரியாதைக்குரியவர்’ என்ற பாசத்துடனும் பழகினர்.

தாயின் சகோதரன், தந்தையின் சகோதரி ஆகிய இருவரும் குழந்தையைப் பொறுத்தவரை முக்கியமானவர்கள். ஐந்தாறு வயதுப் பையனிடம் கூட ‘உன் மாமாவிடம் பெண்ணைக் கேள்’ என்றும் ஐந்தாறு வயதுச் சிறுமியிடம் ‘மாமா மகனைத் தான் கட்டிக்கிடுவேன்’ என்றும் பெரியோர்கள் சொல்வது சாதாரணமாக நிகழும். மிகச் சிறிய வயதிலே குழந்தைகளிடையே ‘திருமணம்’ என்ற கருத்தியலை விதைப்பதன் மூலம், ஆண்-பெண் உறவுக்கான ‘அடித்தளம்’ நிறுவப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அத்தை/ மாமா வீட்டில் வளரும் எதிர் பாலினரின் மீது நாட்டம் ஏற்படுவது இயற்கையாக நிகழும். ‘இந்தப் பையனுக்கும் இந்தப் பெண்ணுக்குமிடையில் திருமணம் நடைபெறவிருக்கிறது’ என்பது கிராமத்தில் - உறவினர்களிடம் - எல்லோருக்கும் தெரியும். எனவே வேறுயாரும் பெண்/ மாப்பிள்ளை கேட்டு அந்த வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள்.

ஒரு பையன்/ பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் பேசி முடிக்க வேண்டுமெனில், தாய்மாமன் எனப்படும் தாயின் சகோதரனிடம் சொல்லி அனுமதி பெற வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் ‘தாய் மாமன்’உறவு என்பது மிகவும் முக்கியமானது. திருமண நிச்சயம் முதலாகத் திருமண நாளில் முதல் மாலை அணிவிப்பதுவரை தாய்மாமன் தான் முன்னிலை வகிக்க வேண்டும்.

திருமணம் நடக்கவிருக்கும் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தாய்மாமன்கள் எல்லோருக்கும் முன்னர் மேடையில் அமர்ந்து, "என் சகோதரி பொண்ணுக்கு உங்க பையனைத் தருகிறீர்களா" என ஒருவர் கேட்டவுடன், இன்னொருவர் "என் சகோதரி பையனுக்கு உங்க பெண்ணைத் தருகிறீர்களா" என்று கேட்பார்கள்.
இருவரும் ‘பூரண சம்மதம்’ எனப் பரஸ்பரம் தெரிவித்தவுடன்தான் நிச்சயதார்த்த சடங்குகளான ‘தட்டுகளை மாற்றிக் கொள்ளுதல் நடைபெறும்.

சகோதரிக்கு மகன்/மகள் பிறந்தவுடன் சீர் கொண்டு வருதல் தொடங்கி, அவளுடைய வீட்டில் நடைபெறும் மங்கலகரமான நிகழ்வுகளிலும், மரண நிகழ்வுகளிலும் தாய்மாமன்தான் முன்னிலை வகித்துச் செயற்படுகின்றார்
திருமண நாளில் கிடாயைப் பிடித்துக் கொண்டு, சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தட்டுகளில் பல்வேறு பொருட்களை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு மணப்பந்தலுக்குள் தாய்மாமன் நுழைவது அற்புதமான காட்சி.

மாமன் வீட்டினரை மீறிச் சென்று வேறு இடத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள முயன்றால் ‘தகராறு’ ஏற்படும். சில இடங்களில் வெட்டு, குத்துகூட நிகழ்ந்திருக்கிறது.

ஆண் எப்பொழுதும் ‘பொருள்’ தேடுவதில் அளவற்ற ஆசையுடன் காலங்காலமாக அலைந்து கொண்டிருக்கிறான். தமிழகத்திலுள்ள சொத்துகளின் பத்திரங்கள் பெரும்பாலும் 85% ஆண்கள் பெயரில்தான் உள்ளன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெயருக்குச் சில பெண்கள்தான் ‘பதிவு’ விஷயமாக வருகின்றனர். சொத்து பற்றிய ஆர்வமின்மை காரணமாகத்தான் பெண்கள் இயல்பாகவே சகோதர சகோதரிகளிடம் ப்ரியத்துடன் பழகுகின்றனர்.

தங்கள் வீட்டிலுள்ள சின்னச்சின்ன பொருட்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்கின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் அம்மாவின் சகோதர சகோதரிகளுடன் நெருக்கமாகப் பழகுகின்றன. சித்தி, பெரியம்மா, மாமா, ஆச்சி, தாத்தா எனக் குழந்தையின் உலகம் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி அன்புமயப்பட்டதாக உள்ளது; உரிமையுடன் ஆச்சி வீட்டில் விளையாடுகின்றன.

தமிழ்க் குடும்ப அமைப்பானது, பெரும்பாலும் தாய் வழியாகவே இன்றும்கூட இயங்குகின்றது. பெண்ணுக்கு இயற்கையாக நடைபெறும் மாதவிலக்குத் தொடங்கி, கல்யாணம், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு என எல்லாவற்றிலும் அம்மாவைப் பெற்ற அம்மாவுடன் நெருக்கமான உறவு உள்ளது. அப்பா வழிப் பாட்டியைவிட அம்மா வழிப் பாட்டியிடம் பெண் குழந்தைகளுக்கு இயல்பிலே நெருக்கமும் ப்ரியமும் ஏற்படுகின்றது.

தந்தை -மகன் உறவு, சகோதரர்களுக்கிடையிலான உறவு சுமூகமானதாக இல்லை. ‘அஞ்சு வயதில் அண்ணன் தம்பி, பத்து வயசில் பங்காளி’ என்பது வெறும் வார்த்தை அல்ல. போன தலைமுறையில், ‘என் சுய சம்பாத்தியம் சொத்து, உனக்கு எதுவும் இல்லை’ என்று கூறி ‘விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிய தந்தைமார் அநேகம் பேருண்டு. இதனால் தந்தை இறக்கும்வரையில் பேசாமலிருந்த மகன்கள் கிராமப்புறங்களில் இருந்தனர். தந்தை மகன் உறவு என்பது கிராமப்புறங்களில் அதிகாரத்தின் வெளிப்பாடாக இருந்தது.

தெருவினில் தந்தை நடந்து வருவதைப் பார்த்தால், உடனே வேறு தெருவில் நடந்து போகும் திருமணமான மகன்கள் எங்கள் ஊரில் இருந்தனர். தந்தை என்பவர் கண்டிப்பும் கறாரும் மிக்கவர் என்ற பிம்பம் கிராமப்புறத்தில் நிலவியது. எனவே மகனின் உலகம் வெளியே தனித்து விளங்கியது.

சொத்து விஷயத்தில் அண்ணன் தம்பிகளுக்கிடையில் எப்பொழுதும் முணுமுணுப்புகள் நிலவின. மூத்த சகோதரனுக்குச் சொத்தினைப் பாகம் பிரிக்கும் போது, கூடுதலாக நிலம் தரும் வழக்கமிருந்தது. அது ‘மூப்புக் காணி’ எனப்பட்டது.

திடீரென தந்தை இறந்துவிட்டால், சொத்துகளைப் பிரிக்கும்போது, ‘கூடுதல் குறைவு’ காரணமாக, சகோதரர்களிடையே ‘வெறுப்புணர்ச்சி’ தோன்றி விடும். அப்புறம் மௌனமாக பங்காளிச் சண்டை தொடங்கிவிடும். ‘மகாபாரதம்’ சொல்லும் பங்காளிச் சண்டை வெவ்வேறு வடிவங்களில் இன்றுகூட கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மகாபாரதம் இன்றைய காலகட்டத்திலும் வாசிப்பதற்கேற்ற வகையில் சுவராசியமாக இருப்பது, தொடரும் பங்காளிச் சண்டையின் இன்னொரு அடையாள வெளிப்பாடுதான்.

கூட்டுக் குடும்பம் என்பது இன்று அருகி விட்டது. வசதிக் குறைவான குடும்பங்களில் வேறு வழியில்லாமல், பெரிய குடும்பமாகச் சேர்ந்து வாழலாம். மற்றபடி வயதான தந்தை, தாயைக்கூட வைத்துச் சேர்ந்து வாழ்வது சிரமமான காரியமாகி விட்டது. நகர்ப்புறத்தில் புறாக்கூடு போன்ற ‘அடுக்ககங்களில்’ அவரவர்க்கான இருப்பிடம் உறுதியாகிவிட்டது. குடும்பத்தில் ஒரு மகன், ஒருமகள் அல்லது இரு மகன்கள் அல்லது இரு மகள்கள்தான் உள்ளனர்.

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற சொற்கள் பழைய பொருண்மையில் இன்று வழக்கினில்லை. வயல், தோப்பு, துரவு என்ற விரிந்திடும் நிலப்பரப்பினில் குடும்ப உறவுகள் வெவ்வேறு வழிகளில் தமிழர் வாழ்க்கையினுள் ஆழமாக ஊடுருவியிருந்தன.

அற்ப விஷயத்துக்காக அடித்துக் கொள்வதும், சின்ன விஷயத்திற்காகச் சேர்ந்து கொண்டாடப்படுவதுமென வாழ்வின் பரப்புகள் விரிந்தபோது, ‘குடும்ப உறவுகள்’ என்ற சொற்களுக்கு அர்த்தமிருந்தன. நல்லதோ கெட்டதோ, எதுக்கும் பத்து பேர் ‘பங்காளி’ என்ற பெயரிலோ, ‘மாமன் மச்சான்’ என்ற பெயரிலோ கூடித் திரிந்த எழுபதுகள் காற்றில் கரைந்து போய் விட்டன; வெறும் பதிவுகளாகி விட்டன. குடும்ப உறவுகளை வேறு வடிவங்களில் நிலை நிறுத்திட, மனித இருப்பு தொடர்ந்து முயன்று கொண்டேயிருக்கின்றது.

கூட்டுக்குடும்பங்களால் வாழ்ந்தவர்கள் பலரும் இன்றைக்கு கருத்து வேறுபாடுகளினால் தனித் தனி குடும்பமாய் மாறிவருகின்றனர். இதற்கு காரணம் அவசர யுகத்தில் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளமுடியாததே. ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாத காரணத்தினால் இடைவெளிகள் ஏற்படுகின்றன.

இந்த இடைவெளிகளே நாளடைவில் விரிசலுக்கு காரணமாகின்றன. ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரமே. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் விழ வாய்ப்பில்லை.ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரமே.

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் விழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

குடும்பம் என்றாலே ஏதாவது சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான்.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...