வியாழன், 20 பிப்ரவரி, 2014

உன்னிலேயேதான் இருக்கின்றேன்

பிரிந்துபோய்விட்ட உன்னை புகைப்படத்தில் பார்த்தவிட்டபொழுது நதி ததும்பிய கண்களால் மூழ்கிப்போனேன் எவ்வளவு காதலாய் என்னிடமிருந்த உன்னை அறிமுகம் செய்த காலமே பறித்துக்கொண்ட போனதில் செத்துத்தான் போனேன்.எத்தனை அந்நோன்ய நாட்கள் எத்தனை விரகம் தீர்ந்த இரவுகள் இப்போது என்னிடம் இதுபோன்ற எவையுமே என்னிடமில்லை!நோயில் துடித்து துவண்ட கணங்களையெல்லாம் உன் மென் விரல்களால் கோதி சரி செய்தாய் எப்பொழுதும் உன்னிலிருந்து விகசிக்கும் மலர்களிலிருந்து தேன் துளிகளை என் பசித்த பொழுதுகளில் தெளிக்கத் தவறியதே இல்லை.

என் வலியெல்லாம் உன் வலியாக்கிய உன் விசாலமான அகத்தை இப்போது எங்கு தேடியும் எதுவுமில்லை என்னை நீயாகவே மாற்றிக்கொண்ட உன் ப்ரியத்தின் முன் நான் வெற்றிடத்தின் சூன்யமாகத்தான் இருக்கிறேன் திரும்பவும் அழைக்க முடியாத தூரத்திலிருக்கும் உன்னிடம் திரும்பவும் என் அன்பைக் கோரும் பாக்யத்தை இழந்துவிட்டேன்.நீ வாங்கித் தந்த உடுப்புகளும் உன் நாணயங்களும் என்னிடமிருந்து உன்னை என்னிடம் வைத்திருக்கின்றன அந்த ஆடைகளை உடுத்துகிற தருணங்களிலெல்லாம் நான் தொட்டுக் கிள்ளிய அந்த பிள்ளை முகம் இமைகளிடையே மிதந்து மறைகின்றது என்னைப் பிரிந்து தவிக்கின்ற உன்னில் அழுவதற்கென்று கண்ணீரில்லை என்பதை அறிகிறபோது கருணையற்ற விதியையும் காலத்தையும் என்னையும் சேர்த்து புதைத்துவிடத்தான் தோன்றுகின்றது.

இப்பிறப்பினிடையில் தூய அன்பற்ற இருந்த என்னிடம் எங்கிருந்தோ வந்த உன் கடலளவு காதலில் பிறப்பின் பயனை அடைந்துவிட்டதாகவே திருப்தியுறுகிறேன் உனக்கும் எனக்குமான இடைவெளியில் நீளமாகிவிட்டபோதும் நானென்வோ உன்னருகில்தான் இருக்கின்றேன் உன்னிலேயேதான் இருக்கின்றேன்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மன அமைதி

முதலில் மனம் என்பது யாது, அதன் அமைதி குலையக் காரணம் என்ன என்பதைச் சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு தேவை இருக்கவே செய்கிறது. 
அத்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள, நிறைவு செய்து கொள்ள ஆசை எழுகிறது. அதற்கு முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது. முயற்சியால் வெற்றியடைகிறான். 
அதன் பயனை அனுபவிக்கிறான். அது இன்பமோ துன்பமோ,கொடுக்கிறது. அந்தச் செயலை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறான். இது மனதில் பதிவு செய்யப்படுகிறது. இப்படி உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அநுபோகம், அநுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற 10 படித்தளங்களில் விரிந்து செயல்படும் உயிரின் படர்க்கை நிலையே மனமாகும்.ஆகவே, இந்த மனதை முதலில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.இயற்கையமைப்புக்கு ஒத்து மனம் செயல்படும்படி பழக்க வேண்டும்.
இயற்கைக்கு முரண்பட்ட செயலைத் தவிர்க்க வேண்டும். விளைவை நன்றாகக் கணித்துக் கொண்ட பிறகே செயல்படத் துவங்க வேண்டும். நம்மிடம் பெரும்பாலும் பொருள் வயப்பட்ட உணர்வே தலை தூக்கி நிற்கிறது. புலன் வயப்பட்டு, ஆசாபாசங்களுக்கு அடிமையாகி மயக்கத்தில் செயலாற்றுகிறோம். அதனால், துன்பம் விளைந்து அமைதி குறைகிறது.

பலகோடி அணுக்கள் சேர்ந்த கூட்டியக்கமான உடல்,இந்த உடலில் இயங்கும் உயிர், உயரின் படர்க்கையாற்றலான மனம், இவற்றின் இயக்கத்தை உணரும் அறிவு இவை யாவுக்கும் மூலாதாரமான பரம்பொருள், இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.உடலில் ஆறாவது அறிவாக இருக்கும் மனம், பரம்பொருளை உணர்ந்து முழுமையடையும் பொருட்டே எழுச்சி பெற்றுள்ளதாகும். இந்த மனத்தைப் பண்படுத்த எழுந்தனவே அறமும் மதமுமாகும். பிற உயிர்படும் துன்பத்தை ஒத்து உணர்ந்து அதைப் போக்க வேண்டுமென்று எழுந்த கருணை உணர்வே அறமாகியது. தன்னலம் கருதி மயக்க நிலையில் புலன்வயப்பட்டு, காமம், கோபம், பேராசை, கடும் பற்று, அகந்தை,வஞ்சம், என்ற ஆறு குணங்களாக மாறிச் செயல்படுவதால் தான் துன்பம் எழுகிறது.
இத்துன்பத்திலிருந்து மீள வேண்டுமானால் மனவிரிவு வேண்டும். நீங்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறீர்களா? சில நெறிமுறைகளை நீங்கள் பின் பற்றுவீர்களானால், உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். பயற்சி செய்து பாருங்கள்.

1. தீயவர்களோடு உறவு கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் உங்கள் மனமும் தீமை உடையதாகிவிடும். தீயோரைக் காண்பதும் தீது தீயோர் சொற்கேட்பதும் தீது தீயோடருடன் இணங்கி இருப்பதும் தீது. நல்லோரைக் காண்பதும் நன்று நல்லோர் சொற் கேட்பதும் நன்று நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று நல்லோருன் இணங்கி இருப்பதும் நன்று.
2. சண்டை, ச்ச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். சளசளவெனப் பேசுவதைத் தவிருங்கள். அது உங்கள் சக்தியை வீணாக்கும். வீணான விவாதத்தில் உங்கள் நேரத்தைப் பாழ்படுத்தாதீர்கள். வீண் சர்ச்சை பகையை வளர்கும்.
3. உங்கள் தேவைகளைப் பெரிதும் குறைத்துக் கொள்ளுங்கள். அதீதமான ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசைப்படப்பட ஆய்வறும் துன்பம் ஆசை விட விட ஆனந்தமாமே!
4. ஒரு போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குத் தடை. உங்கள் மனத்திற்குச் சரி என்று பட்டதை உறுதியாகப் பின் பற்றுங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நேர்மையுடனும், மனச் சாட்சியுடனும் செயலாற்றுவீர்களேயானால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன் நீங்களே உங்களுக்கு உற்றபகை என்ற கீதை வாக்கியத்தை ஒரு போதும் மறவாதீர்கள்.
5. மற்றவர்களது கண்டனத்திற்கோ, விமர்சனத் திற்கோ ஒரு போதும் செவி சாய்க்க வேண்டாம். “உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூடமுடியுமா?” உலகத்தார் எப்போதும் குறைசொல்க் கொண்டே தான் இருப்பார்கள்.
6. பெயருக்கும், புகழுக்கும் ஒரு போதும் ஆசைப்படாதீர்கள். உங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தால் ஆண்டவன் உரிய பலனைத் தருவான். ஏனெனில் பலனை எதிர்பார்த்துக் கடமையைச் செய்யும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை என்றால் ஏமாற்றத் தால் நாம் மனம் தளர்ந்து போவோம்.
7. எப்போதும் மகிழ்ச்சியாகவும், மனநிறை வுடனும் இருங்கள். கவலைப்படுவதை விட்டொழியுங்கள்.
8. நடப்பதெல்லாம் நன்மைக்கே. இறைவனது சங்கல்பமே என்று கொள்ளுங்கள். ஒரு போதும் துயரம் உங்களை வாட்டாது.
9. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. பிறரைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பதைத் தவிருங்கள். உங்கள் குடும்பத்தாரோடு அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ளுங்கள்.
10. மனதாறப் பிறரைப் பாராட்டுங்கள். தூற்றுவதால் பகையும், மனக்கசப்பும் நேரிடும். மாறாக போற்றுவதால் உறவும் வளருமன்றோ!
11. சமமானவர்களுடன் “மைத்ரி” (சிநேக பாவத்துடன்), தாழ்ந்தவர்களிடம் கருணை, உயர்ந்தவர்களிடம் மரியாதை, தீயவர்களிடம் அலக்ஷயம் (உபேஷை) ஆகியவை சித்தப் பிரசாதத்தைத் தரும். மன அமைதியைத் தரும் என்கிறார் பதஞ்சலி முனிவர். இந்த குணங்களைக் கொள்ளுங்கள்.
12. மனம் போன போக்கெல்லாம் போக விடாமல், அலைபாயும் மனதைக் கடிவாளம் போட்டு நிறுத்தப்பழகுங்கள். ஒரு போதும் மனம் தளர வேண்டாம். தவநெறியை மேற்கொண்டு மாபெரும் சக்தியைப் பெறுங்கள். மனம் தான் நம்மைத் தளைக்குள் சிக்க வைக்கிறது. அந்த மனதைக் கட்டி ஆளும் போது, அதுவே நமக்கு விடுதலையைத் தேடித் தந்து ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது. சக்ரவர்த்தி ஏனைய அரசர்களை எல்லாம் எப்படி வெற்றி கொண்டு. தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறாறோ, அது போல உங்கள் புலன்களை அடக்கி ஆண்டு, மனதை நிலை நிறுத்தி, அமைதியால் திளைக்கச் சதா சர்வ காலமும் தியானம் செய்யுங்கள்.
13. தீய எண்ணங்களை மனதில் புக விடாமல் அணை போடுங்கள். மனதை ஒரு முகப்படுத்தி இறை தியானத்தில் ஈடுபட்டு, சச்சிதானந்த ஸ்வரூபத்தில் திளைத்து, பேரானந்தத்தில் நிலைத்திருப்பீர்களாக!
"வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...