வெள்ளி, 22 நவம்பர், 2024

கந்தர்வன் சிறு கதைகள்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத எழுத்தாளர் தான் கந்தர்வன். அவரின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அத்தனையும் தொழிலாளர்களின் இன்னல்கள், வேதனைகள், எளிய மனிதர்களின் வலிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறவுகள் ஆகியவற்றைத் தன்னுடைய படைப்புகளின் வழி சமுதாயத்திற்கு எடுத்துரைத்தன. 

அவரது சிறுகதைகளில் ஒன்றான ‘தண்ணீர்’ என்ற சிறுகதை, ஒரு குடம் தண்ணீருக்காக பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் நல்ல கதை. இந்தக் கதையை எங்களது கேலக்ஸி மாதந்தோறும் நடத்தும் ‘கதைப்போமா’ என்ற நிகழ்வில் நான் பேசியிருக்கிறேன். அந்த நிகழ்வில் ‘பத்தினியின் ஓலம்’ என்ற கதையைப் பற்றிதான் பேசுவதாக இருந்தேன். ஆனால், நான் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன் என்பதால், அந்தக் கதையை என்னால் மேடையில் நின்று உணர்ச்சி வசப்படாமல் பேச முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தவுடன், கடைசி நேரத்தில் கதையை மாற்றிவிட்டேன்.

‘பத்தினியின் ஓலம்’ என்ற சிறுகதையின் தொடக்கமே “அவனும், அவளுமாகவே” என்ற பாத்திரப் படைப்புடன் தொடங்குகிறது. மதுரையிலிருந்து கும்பகோணம் போகும் அரசுப் பேருந்து ஒன்றில் ஓர் இளம் பெண்ணை அழைத்துச் செல்லும் ஒற்றைச் சம்பவத்தின் மூலமும்,  “நான் பத்தினிடா” என்ற ஒற்றை வார்த்தையின்  மூலமும்,  ஒட்டுமொத்த சமூகத்தின் அவலங்களைப் புரட்டிப் போட்டு விடுகிறார்.

கதையின் தொடக்கமே மதுரைப் பேருந்து நிலையத்தில் ஒரு இருட்டான பகுதியில், இரண்டு பேருந்துகளுக்கு இடையில் ஒரு ஆட்டோ வந்து நிற்பதில் ஆரம்பிக்கிறது. அந்த ஆட்டோவிலிருந்து ஒரு பெண்ணை கைத்தங்கலாக கூட்டிக் கொண்டுபோய் பேருந்து இருக்கையில் உட்காரவைக்கிறார்கள். போகும்போதே கட்டிய சேலை கை நழுவிப் போகிறது, அந்தச் சேலையை கைத்தாங்களாக கூட்டிக் கொண்டு வரும் பெண் சரிசெய்து பேருந்தின் இருக்கையில் உட்காரவைக்கிறாள்.

அந்தப் பெண் பயணத்தின் போது, “நான் உத்தமிடா, பத்தினிடா, நான் அவனோட பேசக்கூட இல்லடா, அந்த வெட்டோடை காளி உங்களக் கேப்பாடா!” என்று கூக்குரலிடுகிறாள். “ஏண்டா ரூமுக்குள்ள தள்ளி என்ன அடிக்கிறீங்க? அந்தக் காளி உங்கள கேப்பாடா!” என்றும் சத்தமிடுகிறாள்.

அந்தப் பெண்ணின் இந்த நிலை, மற்ற பயணிகளுக்கு எரிச்சலை உண்டாக்குகின்றது. அவளை அந்த ஆண் தாறுமாறாக அடிக்கும் நிலையிலும், அவள், “நீ என் கூடப்பிறந்த தம்பிடா, அடிக்காதடா!” என்று கூறுகிறாள். பிறகு வலுக்கட்டாயமாக ஒரு மாத்திரையைப் போட்டு தூங்க வைக்கிறார்கள், தூங்கி எந்திரிச்சு "பஸ் இப்ப எந்த இடத்தில் போகிறது? திருப்பத்தூர் வந்திருச்சா? இங்கே தானே நம்ம ராமலட்சுமியை கட்டிக் கொடுத்திருக்காங்க?" என்று கேட்டு சகஜ நிலைக்கு திரும்புகிறாள், அதன் பிறகு அதே வாய்தான்,  “நான் பத்தினிடா, இந்தா இவனைப் போலதானே சட்டை போட்டிருந்தான், அவனுக்கிட்ட நான் பேசக்கூட இல்லையா, நான் பத்தினிடா” என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு, அவளின் பிதற்றலை முழுவதும் சுமந்தபடியே அந்தப் பயணம் நீள்கிறது.

பேருந்தில் இருக்கும் மற்ற பயணிகளில் “ஏப்பா பைத்தியத்தை இப்படி பஸ்ல கூட்டிட்டு வரலாமா? பேசாமல் டாக்ஸியில் கூட்டிட்டுப் போகவேண்டியது தானே? எங்களால் நிம்மதியாக தூங்க முடியலை" என்று முறையிட, ஓட்டுநர் நடத்துனரின் கட்டாயத்தில் பேருந்து புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில், அவர்களை வலுக்கட்டாயமாக இறக்கி விடுகின்றார். பிறகு அவர்கள் எப்படி ஊர் சென்றார்கள் என்பதை கதையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள். 

எழுத்தாளர் கந்தர்வன், எந்த நிகழ்வினையும் விளக்கவில்லை. அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்ற  காரணத்தையோ, அதன் நியாய தர்மங்களையோ எந்த இடத்திலும் விளக்க முற்படாமல், வெறும் சம்பவத்தை மட்டுமே நமக்கு சொல்கிறார், அப்பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மட்டுமின்றி கதையை வாசிக்கும் வாசகர்களின் மனதில் தோன்றும் ஊகங்களிலேயே இக்கதை நகர்கிறது.

ஆண்களுக்கான சமுதாயச் சூழலில், பெண்களுக்கான பொதுவெளி என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே உள்ளது. அவர்களை எண்ணற்ற கண்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஒரு பெண்ணை கரங்களால் தீண்டப்படாவிடினும், கண்களால், பார்வைகளால் அவள் தொடப்பட்டுக்கொண்டே இருக்கிறாள்.

மனிதர்கள் அவளைக் கைவிட்ட போதிலும், அவள் வெட்டோடை காளியை, தெய்வத்தை துணைக்கழைக்கிறாள். உயிருடனும், உணர்வுடனும், பகுத்தறிவுடன் உலவித் திரிகின்ற மனிதர்களின் சாட்சி ஏன் பலனற்று இருக்கிறது? “நான் எந்த நிலையிலும் எந்தத் தவறையும் செய்யவில்லை” என நிரூபணம் செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணமே அவளின் உள்ளத்தில் கிடக்கிறது. இதுபோன்ற பெண்களை ஒவ்வொருவரும் ஏதாவதொரு பயணத்தில், பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில் பார்த்து ‘பயித்தியம்’ என்று கூறியிருப்போம்.

இப்போது மனப்பிறழ்வு யாருக்கு? என்ற கேள்வி, இக்கதையை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் புலப்படும் என நம்புகிறேன். அதே நம்பிக்கையுடன் தான் இக்கதையை எந்த இடத்திலும் விளக்கிச் சொல்லாமல், பேருந்து கம்பிகளில் தொங்கும் கைப்பிடியைப் போல் தொங்கவிட்டுள்ளார் கந்தர்வன். அதில் கைப்பிடித்து பயணிக்கும் இச்சமூகம் தலைகுனிந்து நிற்கிறது.

கந்தர்வன் சிறு கதைகள்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத எழுத்தாளர் தான் கந்தர்வன். அவரின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அத்தனையும் தொழிலாளர்...