ஞாயிறு, 13 மே, 2018

கனலி கவிதைத்தொகுப்பு விமர்சனம்

கனலி.
எழுத்தாளர்-திருமதி.ஷோபியா துரைராஜ்.
வெளியீடு- பூவரசி பதிப்பகம்.
மொத்த பக்கம்-80.
மே -2017.


கனலியின் அட்டைப் படமே கவிதை பேசுகிறது...
மரணமும், உயிர்த்தெழுதலும் 
தொடர்ச்சியாய் ....

வாழ்வின் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு உண்ணாமல், உறங்காமல், சந்தோசத்தை மட்டுமே பரிசாகக் கொடுக்கும்  தாய் தந்தையை(தத்தைய) பிரிந்து தவிக்கும்  ஒரு மகளாகத் தொடங்குகிறது இந்த
கவிதைத் தொகுப்பு..

முதல் கவிதை காதலின் இரு வேறு முகங்களை மழையோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் மழையில் நனைதல் ஒரு சுகம்தான்....
அந்த மழையோ தென்றலாக இருக்கும்வரை....
அந்த மழை அதன் இன்னொரு கோர முகத்தைக் காட்டி பெரும் வெள்ளத்தில் சிதைக்கத் தொடங்கும் போதுஅந்த மழையை வெறுக்கத் தொடங்கும்  மனநிலையைக் காதலோடு ஒப்பிட்டுக்காட்டுகிறார். அதில் என்னைக் கவர்ந்த இரு வரியை மட்டும் தந்துள்ளேன்.

என் தாகம் தணிக்க யாசித்துப் பெற்ற உன்னை
தியாகம் செய்ய எத்தனிக்கின்றேன்.

காதல் என்பது வழியில் தென்படும் பூக்களையெல்லாம் முட்டிச் செல்லும் வண்டு அல்ல. ஒற்றைப் பூவை மட்டுமே தாங்கிப் பிடிக்கும் தண்டு. இணைத்த கைகளை இறுகப் பிடித்து,  இணை பிரிய மறுக்கிறது இந்தக் கவிதை.

இதழ்களை வேண்டுமானால்
பிரித்துக் கொள்
இணைந்த கைகள்
அப்படியே 
இளைப்பாறட்டும்.

காதலின் கட்டமைப்பு தானே இந்த உலகம்!. மதங்களின் மதில் சுவர்களோ, சாதிகளின் சதுப்பு நிலங்களே, இனங்களில் தினவுகளோ,  மொழிகளின் வாள்வீச்சுக்களோ, இந்தக் காதலை வெட்டியெறிய முடியவில்லை. மிகப் பெரிய சக்தி இந்தக் காதல்.

உலகில் மொழிகள்தோன்றுமுன் காதல் தோன்றிவிட்டது. பண்டைய இலக்கியங்களில் காதல் ஏக்கங்களாலும், தீண்டல்களாலும், வீரத்தின் சாரல்களாலும் நனைந்து கிடந்தது. அறத்தையும், மறத்தையும், உயிரெனக் கொண்டிருந்த மனிதனின் வாழ்க்கை காதல் எனும் சரட்டினால் கட்டிப் பிணைக்கப்பட்டிருந்தது ! அதைத் தான் அகம் பாடுகிறது.

வெகு சுலபமாய் உன்னை 
என்னுள் வீழ்த்திட முடியும்
அழச் செய்வேன்
கிறங்கடிப்பேன்
அடிபணிவேன்
பணிந்திடவும் செய்வேன்.

காதல் உள்ளம் வழியே கசிந்து உயிர்த்தெழும் உண்மை உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் அளித்து, உணர்வுகளின் சீற்றத்தால், புயலாய் வெளிப்படும் கனலியின் சில கவிதைகள். கவிதை வெளிப்படும் தருணம்  அதன் கருவும், கட்டமைப்பும், இயல்பாய்மலர்கிறது, சில  இடங்களில் கனலியின் காதல் கவிதை வரிகள்  காதல், காமம், தவிப்பு, பிரிவு என அத்தனை வலிகளையும் மொத்தமாய்க் கொட்டித் தீர்க்கிறத்து.

உறவுகளின் புறக்கணிப்பின் வலிகளைக் கவிதையாய் நிரப்பியிருக்கிறது சில பக்கங்கள்.

எல்லாம்முடிந்த பின்னும்
மிஞ்சியிருக்கும்
சிறு பிரியம்
தூக்குகயிற்றின்
முடிச்சில் நெரிபடும்
குரல்வளையின்
வலியை ஒத்தது...

எந்த ஒரு கவலையையும் மனதுக்குள்அடக்கி வைக்காதே! அழுது தீர்த்துவிடு.... அழுகையே உன் வலிகளுக்கானமருந்து என்ற லேசானக்  கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை. உண்மைதான் அழுகைக்குப் பின் மனசு இலகுவாகிவிடும்.

உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களைப் பேசியும் பயன் இல்லையெனில்,மௌனமாக கடந்துவிடு. அந்த மெளனமே சிறந்த புரிதலாய்மாறிவிடும், அந்தப் புரிதலில் மீண்டும் உயிர்பெறலாம். என்ற சில வரிகள் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களைக் கலைகிறது.

 பயணம் பற்றிய ஒரு கவிதை, உறவுகளைப் பிரிந்து வாழும் என் அன்புச் சொந்தங்களுக்கானது. நரகத்திற்கும், சொர்க்கத்திரற்குமான பயணம்.  வெளிநாட்டு வாழ்க்கையையும், அதில் இருக்கும் வலியையும் தோலுறித்துக் காட்டுகிறது  சில வரிகள். கவிதையை முழுவதும் எழுதாமல் அதில் இருக்கும் சில வரிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

பத்தடி அறையில்,அரை அடி அலைபேசிக்குள்
என் நகர நாட்கள்.
பாசம், காதல், கண்ணீர்,ஊடல் என 
எல்லாமே இங்கே குரல் வழி மட்டும்.

பாசத்தைப் பெட்டிக்குள்அடைத்துக் கொண்டு
நான்கு மணி நேர பயணம்....


முன்னுரையை முழுசாக வாசித்தபின் இனி எதை வாசிப்பது? என்ற தேடல் எனக்குள் இருந்தது. முதல் தொகுப்பு என்பதால் முன்னுரையும், வாழ்த்துரையும் பாசத்தால் கரைபுரண்டு கவிதை தொகுப்பை மொத்தமாய் மூழ்கடித்து விட்டது.
எல்லாக் கவிதைகளும் தலைப்பு இல்லாமல் தனித்தே நிற்கிறது! ஒவ்வொரு கவிதையின் தலைப்பிற்கு எங்குச் செல்வேன்? உன் பெற்றோரைத்தான் திட்டித் தீர்க்கிறேன்...எனத் தன்னைத் தாணே திட்டித் தீர்த்துக்கொண்டது இந்தக் கனலி.

எழுத்தாளர் திருமதி.ஷோபியா துரைராஜ் மேலும் மேலும் நல்ல படைப்புகளைப் படைக்க   மனதார வாழ்த்துகிறேன்.

1 கருத்து:

Jazeela சொன்னது…

👌 அருமை.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...