சனி, 29 செப்டம்பர், 2012

முதியோர்கள்



மானுடத்தின் வளர்ச்சிக்கும், வசதியான வாழ்க்கைக்கும் அறிவியல் உலகம் அளித்த வரங்கள் ஏராளம். மனிதன் தன்நிலையில் இருந்து சற்றுத் தாழ்ந்தாலும் சக மனிதனே ஒதுக்கும் போக்கு மனித சமூகத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்!

சாலையோரங்களிலும், தெருக்களிலும், கோயில் பகுதிகளிலும் மனநிலை பாதித்த, முதுமை சுமந்த மனிதர்கள் பலர் நிற்கிறார்கள்.

 இருப்பினும்,கருணை உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.

இதற்கு மிக முக்கிய காரணம் சிதைந்து போன கூட்டு குடும்ப வாழ்க்கை முறையே என்பது என் கருத்தாகும்.இன்றைய இயந்திரத்தனமான வாழ்கையில் நாம் முதியவர்களை புறக்கணிக்கிறோம்,அவர்களை அரவணைக்கவும்,ஆதரிக்கவும்,அன்பு செலுத்தவும் மறுக்கிறோம்.அவர்களின் வார்த்தைகளை காது கொடுத்து கூட கேட்பது இல்லை மேலும் அவர்களின் அனுபவங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முன்வருவதில்லை மாறாக வார்த்தைகளை எள்ளி நகையாடுகின்றோம்.

பெற்று,வளர்த்து,படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோர்களை வயதானவுடன் அரவணைக்கவும்,அன்பு செலுத்தவும் மறுப்பது மகா பாவம்,முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கேற்ப இன்று நம் பெற்றோர்களுக்கு என்ன செய்கின்றோமோ அது தான் நாளை நமக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

சில சமயங்களில் சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் வயதானவர்களை பார்க்கும்போது அவர்களை இந்த நிலைக்கு ஆளாகிய பிள்ளைகளை செருப்பால் அடிக்க தோன்றும்.அந்த நிலையில் அந்த பெற்றோரின் மனநிலையை நினைத்து பாருங்கள்.பெற்றவர்கள் வாழ்த்தினால் பிள்ளைகள் வாழ்வார்கள்,அவர்கள் சாபமிட்டாள் அந்த பிள்ளையின் வாழ்வும் சாபக்கேடாகதான் போய் முடியும்.

கூட்டு குடும்பத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதலில் பல பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்படும்,ஆனால் தனி குடும்பங்களில் பேசிப் பேசி பிரச்சனைகள் தான் வளருகின்றன.ஏனென்றால் பெரியவர்களே கிடையாது,பிரச்சனைகளை தீர்க்கின்ற அனுபவமும் கிடையாது,எல்லோரும் நிரம்ப கல்வி கற்றிருப்பதால் யார் பெரியவன் என்கிற ஆணவமும்,அதனால் வருகின்ற கோவமும் பிரச்சனைகளை வளர்த்து விடுகின்றன.
முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு நீதி போதனை கதைகளை சொல்லி கொடுத்து,அவர்களுக்கு அறத்தையும்,தர்மத்தையும் போதித்தனர்.
இப்போது எல்லாம் மறைந்து போய் விட்டது,அறத்தையும் தர்மத்தையும் தெரிந்து என்ன ஆகபோகிறது.இப்போதுள்ள குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் ஒன்றே போதும் என்பது இன்றைய மக்களின் மனநிலை.

இது ஒரு சாதாரண பிரச்சனை அல்ல,இது சமுதாயத்தில் புரையோடி இருக்கும் புற்று நோய்.

இப்படிதான் ஒரு ஒரு சமுதாயம் வளருமானால் அது மனிதாபிமானம் அற்ற சமுதாயமாகவே இருக்கும்.

சிலர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்,சிலர் வாழ்க்கையை தேடிக்கொண்டு இருப்பார்கள்,இன்னும் சிலர் வாழ்ந்து தொலைத்த வாழ்க்கையை தேடிக்கொண்டு இருப்பார்கள்,அவர்களில் இவர்கள் மூன்றாவது வகை.

என்ன தான் முதியவர்களை பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும்,அரசு நிவாரண உதவிகள் வழங்கினாலும் முதியோர்கள் கேட்பது அன்பும்,அரவணைப்புமே அன்றி வேறு எதுவும் இல்லை.


. 

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...