வெள்ளி, 11 ஜூலை, 2025

அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்

 இன்று அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவுநாள்!

அம்மாவின் நினைவுகள் எத்தனையோ இருந்தாலும், இன்றும் என் மனதை விட்டு நீங்காத சில நினைவுகள்:

“என் மகன் வந்துவிட்டான், என்னை எப்படியாவது காப்பாற்றிவிடுவான்… எனக்கென்ன கவலை!” என்று பக்கத்து வீட்டில் அம்மா சொல்லிக்கொண்டிருந்தது!

மதுரை அப்போலோ மருத்துவமனையில், மருத்துவரிடம் நானும், அக்காவும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதை அம்மா வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்து, “ஒன்னும் இல்லம்மா, டாக்டர் வீட்டுக்குப் போயிட்டு அடுத்த வாரம் வாங்கனும் சொல்றார்… ஒரு வாரத்திற்கு மாத்திரை எழுதிக் கொடுத்திருக்கிறார், நான் போய் மாத்திரை வாங்கிட்டு வர்றேன்”  என்றேன்.




அம்மா.. “ஏன் தம்பி காசுக்குப் புடிச்ச கேடு!

சும்மா சொல்லு… டாக்டர் பார்க்க முடியாது, வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்களா?” என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கி நின்றோம். 

“அதுக்கு ஏன் தயங்குற?” 

“இல்லமா… அது வந்து, என்று சொல்லும்போதே அணைக்கட்டிலிருந்து திறந்து விட்ட நீரைப் போல கண்ணீர் கொட்டி நின்றுகொண்டிருந்த என்னையும் அக்காவையும் பார்த்து அம்மா சொன்ன வார்த்தை, நான் உங்களைப் பெத்தவ, உங்க முகத்தைப் பார்த்தா எனக்குத் தெரியாதா? 

சரி வா… போவோம்… ஏன் தயங்குற?” என்று சொல்லி விட்டு நேர போய் காருக்குள் உட்கார்ந்து கொண்டார். 

“மீண்டும் சென்னை அடையார் மருத்துவமனைக்கு கொண்டு போய் பார்ப்போம், என்று சென்னைக்குப் போனோம், சென்னையில் அடையார் மருத்துவமனை வாசலில் நோயாளிகளின் வருகையையும், அவர்களின் தோற்றங்களையும் பார்த்ததும் தனக்கு எப்படிப்பட்ட நோய் வந்திருக்கிறது!” என்று அம்மா கலங்கி நின்றது!

மருத்துவர் அம்மாவை பரிசோதித்துப் பார்த்ததும்… “அம்மா, உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, 

கொஞ்சம் வெளியே இருங்க, உங்க மகனிடம் மாத்திரை எழுதிக் கொடுக்கிறேன் என்று சொன்னார். அதைக்கேட்ட அம்மா,

“சரி டாக்டர்” என்னைப் பார்த்து.. “ஏண்டா உங்காந்துக்கிட்டு இருக்க? அதான் டாக்டர் நான் பிழைக்க மாட்டேனும்னு சொல்லிட்டார்ல… வா, போகலாம்,” என்றார்! 

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அப்படியே அம்மாவை கட்டி அணைத்துக் கண்ணீரை மட்டும் வெளிறினேன், அக்கா ஓ… என்று கத்தி அழ ஆரம்பித்து விட்டார், கடைசியில் என் அம்மா தான் எங்களை சமாதானப் படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கார் சென்னையிலிருந்து காரைக்குடியை நோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தது. அம்மா வழிநெடுக சன்னல்வழியாக சென்னையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பின் இருக்கையில் இருந்த என் அக்கா… “அம்மா, செத்தக் கண்ணை மூடித் தூங்கு!” என்றாள். 

அம்மா சொன்ன பதில்

“நான் தூங்கத்தானே போறேன்… செத்த வேடிக்கையாவது பார்த்துட்டுப் போறேன்! இனிமேல் சென்னையை எப்ப பார்க்கப் போறேன்?” என்றார். 

சென்னையை மட்டுமில்லை காரைக்குடி வரும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தார்!

அந்தக் கண்ணில் நெருப்பு பற்றி எரிவதைக் கண்டேன்.

அந்த தருணங்கள் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.

அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்

 இன்று அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவுநாள்! அம்மாவின் நினைவுகள் எத்தனையோ இருந்தாலும், இன்றும் என் மனதை விட்டு நீங்காத சில நினைவுகள்: “என் மகன் ...