வெள்ளி, 19 ஜூன், 2020

உண்ட (மலையாளம்) - விமர்சனம்

உண்ட (மலையாளம்) - விமர்சனம்

நடிகர்கள் : மம்முட்டி, ஈஸ்வரி ராவ், சைன் டாம் சாக்கோ, இயக்குனர் ரஞ்சித், ஜேக்கப் கிரிகோரி மற்றும் பலர்

ஒளிப்பதிவு : சஜித் புருஷன்
இசை : பிரசாந்த் பிள்ளை
இயக்கம் : காலித் ரஹ்மான்

சத்தீஸ்கரில் நடக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளாவில் இருந்து மம்முட்டி தலைமையில் ஆயுத போலீசார் அனுப்பி வைக்கப்படுகின்றனர்...! மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றில் வாக்குச்சாவடிக்கு சென்று பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்...! இவர்களுக்கு உதவியாக அங்கேயே ஒரு ராணுவ அதிகாரியும் உடன் இருக்கிறார், திருவிழா பட்டாசு சத்தம் கேட்டால் கூட மாவோயிஸ்ட் தாக்குதல் என கருதி, தங்களிடம் இருந்த துப்பாக்கி குண்டுகளை எதிரிகளை தாக்குவதாக நினைத்து வீணடித்துவிடுகிரார்கள்.

குண்டுகளை அனுப்பி வையுங்கள் என உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது...! தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் குண்டுகள் தங்களிடம் இல்லை என்பதால் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்...! இதனால் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்வதோடு குழுவின் தலைவர் மம்முட்டியுடன் ஒரு சிலர் முரண்பட்டு நிற்கிறார்கள்.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட துப்பாக்கி குண்டுகள் கொண்ட பெட்டி, எதிர்பாராதவிதமாக காணாமல் போய்விடுகிறது. குண்டுகள் இனி கிடைக்காது என்கிற நிலையில் தேர்தல் நாளன்று மிகுந்த அச்சத்துடன் கைவசம் இருக்கும் அடிப்படை பாதுகாப்பு கவசம் மற்றும் லத்தியுடன் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

போலீஸ் படம் என்றாலே அரசியல்வாதி, ரௌடி என்கிற வழக்கமான பார்முலாவை, இதில் அறவே ஒதுக்கிவிட்டு, மொழி தெரியாத ஒரு வடக்கத்திய மாநிலத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் போலீசாரின் இயல்பான நிலையை, எதார்த்தம் மீறாமல் சித்தரித்திருக்கிறார்கள். அதற்காகவே முதலில் இயக்குனர் காலித் ரஹ்மானை பாராட்டி விடலாம்.

சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மம்முட்டி ஒருபக்கம் கம்பீரமும், அதேசமயம் ஒரு நடுத்தர வயது போலீஸ் அதிகாரிக்கே உண்டான இயல்பான சராசரி மனிதனின் குணாதிசயங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்....! தனது குழுவினருக்குள் சலசலப்பு வந்து விடாமல் தடுப்பதும் எந்த நேரம், எந்த திசையில் இருந்து மாவோயிஸ்டுகள் தாக்குவார்கள் என ஒருவித பயத்துடனேயே எதிரிகளை எதிர் நோக்கி காத்திருப்பதும், துப்பாக்கி குண்டுகள் இல்லை என்கிற தகவல் வரும்போது, கையறு நிலைக்குத் தள்ளப்படுவது என காட்சிக்கு காட்சி தனது நடிப்பை வழங்கியுளார் மம்முட்டி,  இத்தனை வருடங்களில் அவர் போலீசாக நடித்த படங்களில் இருந்து இந்த படம் நிச்சயம் மாறுபட்டது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

மம்முட்டியின் மனைவியாக வெறும் இரண்டே காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு போகிறார் ஈஸ்வரி ராவ். மம்முட்டியின் குழுவில் இணைந்துள்ள போலீஸ்காரர்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை பிரதிபலித்திருக்கிறார்கள். குறிப்பாக போலீசாருக்கு அவர்களது குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் அவர்களின் பணியின்போது எந்தவிதமான சங்கடங்களை கொடுக்கின்றன என்பதை போகிற போக்கில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்துகிறது.

இந்த போலீஸ் குழுவினருடன் ஏற்கனவே அங்கே தங்கியிருக்கும் ராணுவ அதிகாரியாக நடித்து இருப்பவர் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் பதற்றமில்லாமல் ஒவ்வொரு விசயத்தையும் அணுகும் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ராணுவத்திற்கும், மாநில காவல்துறைக்கும் இருக்கும் வித்தியாசத்தை, மன ஓட்டத்தை மிக அருமையான நடிப்பில் வெளிக்காட்டியது சிறப்பு. 
மற்ற போலீஸ் அதிகாரிகளாக வரும் இயக்குனர் ரஞ்சித், ஷைன் டாம் சாக்கோ, ஜேக்கப் கிரிகோரி ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுஜித் புருஷனின் பங்களிப்பு இந்தப் படத்தில் ரொம்பவே அலாதியானது. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள ஒரு வட இந்திய கிராமத்திற்குள் நாமே வலிய சென்று சிக்கிக் கொண்டது போன்ற உணர்வை படம் முழுவதும் தனது ஒளிப்பதிவில் காட்டி இருக்கிறார் மனிதர்.. பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசையும் படம் முழுக்க ஒரு பய உணர்வை குறிப்பாக, இப்போது மாவோயிஸ்ட் தாக்குதல் நிகழும் என்கிற எதிர்பார்ப்பை நமக்குள்ளும் விதைக்கும் விதமாக கேமராவுடன் இணைந்து பயணிக்கிறது..


நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் தேர்தல் இந்தியாவில் பல பாகங்களில் எவ்வளவு சவாலாக இருக்கிறது...! எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போலீஸ், ராணுவம் , இதில் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறார்கள்.... அரசாங்கத்தின் மெத்தனம் போன்ற அனைத்தும் போகிற போக்கில் நம்மால் உணரமுடியும்.

உண்மையில் எளிய மக்களின் பெயரில்அவர்களை முன்வைத்து அரசாங்கமும்சில தனிப்பட்ட குழுக்களும் செய்யும் அதிகாரச் சண்டையில் அவ்வெளிய மக்களின் வாழ்வு எந்த அளவுக்குப் பதிப்புள்ளகியிருக்கிறது என்பதை உணர முடிகிறது...! அந்தக் காட்டில் இருக்கும் ஒரு எளிய மனிதரைப் பார்த்து உங்கள் வீடு எங்கிருக்கிறது? என்ற மம்முட்டியின் கேள்விக்கு....இதோ அந்தப் பகுதியில் கொஞ்சக் காலம் இருந்தோம்...அதோ தெரியுதே ஒரு மரம் அன்க்கே கொஞ்சகாலம்...பின் அங்கிருந்து இந்திய இராணுவம் விரட்டிவிட்டது......இப்ப நீங்கள் தங்கியிருக்கும் கட்டிடம் கூடஎனது வீடுதான்...அரசாங்கம்பள்ளிக் கூடம் நடத்தக் கேட்டது கொடுத்துவிட்டேன், படிப்பு முக்கியம் என் பிள்ளை நல்லாப் படித்து இந்தக் காட்டை விட்டு வெளியேறனும் அதான் என் ஆசை, அதான் மொத்தமா கொடுத்துவிட்டு அதோ அங்கே குடிசை போட்டிருக்கிறேன் என்ற எதார்த்த பதில் மிகுந்த மன வலியைத் தந்தது.

அந்த அணியில் ஒரு சக போலீஸ்காரர் ஒருவர் பழங்குடியின வகுப்பிலிருந்து வந்திருப்பார். அவரை மற்றவர்கள் தொடர்ந்து கேலி செய்து அவரையே மாவோயிஸ்டாகச் சந்தேகிப்பார் மற்றொருவர். இது நமது பொதுப்புத்தி மனநிலையைக் காட்டுகிறது.

படத்தின் தலைப்பு தோட்டா. யாரோ சுட, தோட்டா மட்டும் வெடித்து வெளியேறுகிறது. தோட்டா வெறும் கருவி மட்டுமே. அது போல போலீஸ், மக்கள் ஆகியோர் அதிகார வர்க்கத்தின் தோட்டாக்களாகவே பயன்படுத்தப்படுகின்றனர்.

 

இந்தப் படத்தின் கடைசிக் காட்சியில், யாருமற்ற ஓர் இடத்தில் தொலைந்து போன அந்தத் தோட்டக்கள் அடங்கிய பெட்டியில் ஒரு குரங்கு குதித்து விளையாடிக் கொண்டிருக்கும். நமது தேசமும் அப்படித்தான் இருக்கிறது.

முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் போரடித்தாலும் கடைசி 40 நிமிடங்கள் மிக விறுவிறுப்பாக இருந்தது.


யார் மாவோயிஸ்டுகள், யார் சமூக விரோதிகள் என்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இத்திரைப்படம்.


ஒரு திரைப்படம் பொழுதுபோக்கை மீறி சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை அழுத்தமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தவேண்டும் என்ற இயக்குனரின் பார்வை பாராட்டப்படவேண்டியது. இது ஒரு நல்ல திரைப்படம்!


மிக்க நன்றி 


பல்கரசு  

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...