படத்தின் திரைக்கதை அதிகாலையில் குடும்ப உறவினர்களின் பயணத்தில் தொடங்கி பல்வேறு கோணங்களில் விரிகிறது....!
பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாமா மகளைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட போது, இல்லை அவள் மேலும் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டு வெளிநாடு சென்று விடும் பாண்டி (சூரி), மூன்று ஆண்டுகள் கழித்து திரும்பி வந்து பார்க்கும்போது அங்கு நிலைமை வேறாக இருக்கிறது. முறைப் பெண் மீனா (அன்னா பென்) கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது வேறு சாதிப் பையனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். மூன்று வருடம் கழித்து ஊருக்கு வந்திருக்கும் பாண்டியைக் கட்டிக் கொள்ளமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.
அந்தக் காதல் விசயம் அவள் குடும்பத்தினர்களுக்கு தெரிந்த நிலையில், இந்த ஆண் ஆதிக்க முரட்டுப் பய குடும்பத்தில் போய் சிறகு உடைந்து கிடப்பதை விட எங்காவது சுதந்திரமாக பறக்கட்டும் என்று நினைக்கிறாள் அவளது தாய்.
வீடு திரும்பிய பாண்டிக்குத் தொண்டை கட்டியிருப்பதால் அவனின் தங்கை தொண்டையில் சுண்ணாம்பு போடும் போது, 'இவள் நம்ம குடும்பத்திற்கு வேண்டாம்ண்ணே...' என்று அக்கா சொல்லும் போது பாண்டி எப்படிப்பட்டவன் என அவனது முரட்டுத்தனமான நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.
பாண்டி குடும்பத்திற்குப் பயந்து மீனாவிற்கு பேய் பிடித்திருப்பதாக, அந்தக் குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளனர் மீனாவின் குடும்பத்தார். அவர்களும் அப்படியே நம்புகின்றனர்.
எழுபது எண்பது காலகட்டத்தில் மகளின் தவறுகள் வெளியில் தெரியாமலிருக்க, மகளைக் காப்பாற்ற தாய் எடுக்கும் ஒரே ஆயுதம் காத்துக் கருப்பு பேயாகத்தான் இருக்கும். அப்படியே மீனாவின் அம்மாவும் தன் மகளைக் காப்பாற்ற நினைக்கிறாள்.
பேய் பிடித்த மீனாவைப் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில், குடும்பத்தினர் இடையிலான உரையாடல் மற்றும் செயல்பாடுகளின் வழியாக, உண்மையில் யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது? அது எப்படிப்பட்ட பேய்? அதற்கான சிகிச்சை என்ன? என்பதை நுட்பமான காட்சிகளின் வழியாக உணர்த்திச் செல்கிறது திரைக்கதை.
படத்தின் முதல் காட்சியில் சாமியாருக்குப் பலி கொடுக்க வேண்டி கல்லில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சேவல், அதிலிருந்து விடுபட தொடர்ந்து போராடித் தோற்கும் காட்சியை கதாநாயகி மீனா இறுகிய முகத்துடன் கவனிப்பதன் ஊடாக பார்வையாளர்கள் மத்தியில் அவள் அந்த வீட்டிற்குள் இருக்கும் நிலையையும், ஒட்டு மொத்த சமூகத்தில் பெண்களின் நிலையையும் பிரதிபலிக்கிறது.
கிராமத்தில் வாழ்ந்து, இப்படியான வாழ்க்கையை அனுபவித்தவர்களால் மட்டுமே இத்திரைப்படத்திலிருக்கும் அத்தனை விசயங்களையும் உள்வாங்கிக்கொள்ள முடியும், அதுவும் குறிப்பாக மதுரை வட்டார மொழி வழக்கில் இருக்கும் நகைச்சுவையான உரையாடல்கள், சேவல், ஆட்டோ,மாடு என அத்தனையும் இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
பயணங்களுக்கு நடுவில் வரும் உரையாடல்கள், மாப்ள இங்க பாருடா... படும் காடா இருந்த இடங்கலெல்லாம் இப்ப பெரிய பெரிய வீடா முளைச்சிருக்கு... ! இன்னைக்கு இந்தப் பக்கம் ஒரு செண்ட் இடம் வாங்க முடியாது. அப்பவே இந்தப் பக்கம் ஒரு இடம் வாங்கித் தரச் சொன்னதற்கு எங்க அண்ணன் இங்கிட்டெல்லாம் வேணாம்னு சொல்லிட்டான். நான் எப்படியாவது ஒரு இடம் வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டே டாஸ்மாக்கைத் எங்கே இருக்கிறது என்று தேடி அலைவது இன்றைய நிலையில் தமிழகத்தில் போதை என்பது வாழ்வியலோடு ஒன்றாகிப் போனதையே காட்டுகிறது.
குடிக்கும் போது அவள் இனிமேல் மாற மாட்டாடா... அவள் சுகம் கண்டுக்கிட்டா, அவன் கை வச்சுட்டான் என்று பழி சுமத்துவதும், இதை வேறு யார்க்கிட்டயும் சொல்லிடாதே என்று சொல்வதும் இயல்பான கிராமத்து பேச்சைக் கண் முன் நிறுத்தியது.
உடல் உபாதைகளைக் கழிக்கும் காட்சியில் பாண்டி நடு ரோட்டில் உட்கார்ந்து கொண்டும், சிலர் நின்று கொண்டும், ஒரு செடியில் சடச்சடவென்று சிறுநீர் கழிப்பதும், அதே சமயத்தில் பெண்கள் காட்டுக்குள் ஆள் அரவற்ற இடங்களில் மறைந்து கொள்வதும் இச்சமூகத்தின் முரண்பாடுகள். இப்படிப்பட்ட ஆண்கள்தான் ஒழுக்கத்தைப் பற்றி பெண்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.
குலதெய்வ வழிபாட்டில், நான் வீட்டிற்கு தூரமாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பாண்டியின் தங்கை ஆட்டோவில் இருப்பதும், அதே சமயத்தில் மீனா குலதெய்வத்திடம் மனம் உருகி வேண்டுவதும், பின் மீனாவின் தாய் ஒற்றைப் பார்வையில் வாடி..என்று காட்டிற்குள் அழைத்துச் செல்வதும், போனவளைக் காணோம் போயிப் பாருங்கடி என்று கத்துவதும், அடியாத்தி... என்று பாண்டியின் அக்கா ஓடிய வேகத்தில் மீனாளுடன் அமைதியாக திரும்பி வருவதிலிருக்கும் அமைதி ஒரு புதிர்.
எங்கோ தொலைவிலிருந்து வரும் பாட்டைக் கேட்டுவிட்டு மீனா அப்பாட்டை வாய்க்குள் முணுமுணுக்கும் போது பாண்டி அவளது மனநிலையை அறியமுடியாத கையறுநிலை வரும்போது ஆற்றாமையின் வெளிப்பாட்டில் வெடித்துச் சிதறி வன்முறையில் இறங்கி அப்பா, மாமா அக்கா என யாரையும் விட்டு வைக்காமல் அடிக்கும் காட்சியில் ஒட்டுமொத்த ஆண்களின் மனநிலை இதுதான் என்பதைப் போல் அறிய முடிகிறது. இவளைக் கட்ட வேண்டாம் என்று சொல்லும் அதே பாண்டியின் தங்கை, அடிக்காதே என்று இடையில் விழுந்து மறைக்கும் காட்சி, உறவுகளின் பாசத்தைக் காட்டுகிறது.
மீனா எல்லா அடியையும் வாங்கிவிட்டு ஆட்டோவில் இருக்க, தாய் தண்ணியாவது குடிடீ...அவனுங்க அடிக்கும் அடியை தாங்க தெம்பாவது வேனும்ல என்று சொல்லும் காட்சி, அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அவள் பாண்டியின் அக்கா மகனைப் பார்த்து புன்னகைக்கும் காட்சி பிரமாதம், அவளின் மனதை மட்டுமில்லை பெண்களின் மனநிலையை ஒரு போதும் ஆண்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதாகவே இருக்கும்.
போகும் வழியில் நடுரோட்டில் காளை ஒன்று குறுக்கே நிற்க, தன்னை ஒரு வீரனாக காட்டிக் கொண்ட பாண்டி போய் மாட்டை பத்தி விடுப்பா என்பதும், குத்த வந்த மாட்டைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடுவதும், அதே சமயத்தில் மாட்டின் உரிமையாளர் ஏ.. தங்கச்சி அந்த மாட்டைப் பிடித்துக் கட்டுமா என்றதும் , பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி மாட்டை வாவெனப் பிடித்துச் செல்லும் காட்சி பிரமாதம். பெண்களை அடக்கி ஆளும் ஆண்கள் ஒரு காளை மாட்டிடம் தோற்றுப் போவதும், அதே சமயத்தில் சீறிப் பாயும் காளை கூட ஒரு சிறுமியின் பாசத்திற்கு கட்டுப்படுவதும், ஆண்களின் அதிகாரத்தில் எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதாகவே அக்காட்சி அமைந்திருக்கும்
படத்தின் இறுதிக் காட்சியில் சாமியார் பேய் விரட்டும் மற்றொரு பெண்ணுக்கு மருந்து எடுப்பதைப பார்த்த பாண்டியன் மனநிலை மாறுகிறது. அடுத்தவனைக் காதலிப்பதை விரும்பாத பாண்டி, சாமியார் அந்தப் பெண்ணை எங்கெல்லாமோ தொட்டு மந்திரிக்கும் காட்சியைப் பார்த்துப் பின்வாங்கும் காட்சியுடன் திரைக்கதையை முழுமையடையாமல் பார்வையாளர்கள் மத்தியில் வைத்துவிட்டார் இயக்குனர்.
சூரி மற்றும் அன்னா பென் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. பின்னனி இசை இல்லாமல் பயணிக்கும் பாதையில் கேட்கும் சப்தங்களையே இசையாக்கி இப்படத்தினை இயக்கி இயக்குனருக்கு வாழ்த்துகள்.