ஒரு நல்ல படைப்பு வெளிவரும்போது நாம் அதைக் கொண்டாடித்தான் ஆகவேண்டும். அதை விட்டு விட்டு அதற்குள் சாதிய அடையாள வன்மங்களைப் புகுத்திப் பார்க்கும் மனநிலை சரியானதல்ல. என் வாழ்வியலோடு தொடர்புடைய திரைக்கதை என்பதால் இப்படத்தைப் பார்த்த அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமில்லை!
படத்தின் முதல் காட்சியில் சிவனைந்தன் பாறைகளுக்கு நடுவில் நின்று கொண்டு "ம்பா...ம்பா.... எனக் கதறும் அந்தக் கதறல்களில் சகல வலிகளையும் கடத்தும் கதறலாகவே உணர முடிந்தது!
வாழை இலைகளிலிருந்து பறக்கும் காகங்கள், வீடு காக்கும் அரசன், கொடி பிடித்த அரசன், ஒரு வாழைப் பழத்தினால் அய்யோனும் அழைகிறான் என்ற சாமக் கோடாங்கியின் வாக்கு, கூடவே ஆடு, மாடு, நாய் குரைத்தல் என மூன்றே காட்சிகளில் படத்திலுள்ள மொத்த வலிகளையும் பார்வையாளர்களுக்கு கடத்திவிட்டார், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளைச் சொல்கிறேன் என்று கர்ணன் படத்தைப் போல் வன்முறைக் காட்சிகளை பதிவு செய்யாமல் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் விதத்தில் படத்தை எடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
ஊர் மக்கள் வாழைக்காய் சுமக்க முன்பணம் பெற்று
முதலாளித்துவத்தின் அடிமையாக இருக்கும் நிலையைப் போல் பொது சமூகத்தில் தினக்கூலிகளாக பல்வேறு தொழில்களிலும் முன்பணம் பெற்று அடிமைகளாக வாழும் நிலை காலம் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உழைப்பிற்கு கூடுதல் கூலி கேட்கும் போது கூடுதலாக பணிச் சுமையும் சுமத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. விளையும் பொருள்கள் முதற்கொண்டு உற்பத்திப்பொருள்கள் வரை முதலாளிகள் காலடியில் உழைப்பாளிகள் என்றும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
இதை தான் வாழை திரைப்படம் தொழிலாளர் உழைப்புச் சுரண்டலைப் பொதுவுடமை பார்வையில் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது!
பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்து வரும் சிவனைந்தன் பள்ளிநாள் தவிர மற்ற விடுமுறை நாட்களில் அவன் வாழைத்தோட்டத்துக்கு சென்று வாழைக்காய்களைச் சுமந்து வறுமையில் வாழ்க்கையை சும்ந்துகொண்டிருக்கும் தாய்க்கு உதவ வேண்டும். அதுவும் சாதாரண சுமை அல்ல. இரண்டு வாழைத்தார்களை தலையில் ஏற்றி வயல், வரப்பு, சேறு, சகதி வழியேஅவற்றை தூக்கிக் கொண்டு வந்து லாரியில் ஏற்றவேண்டும். இந்தச் சுமையை அவன் மட்டுமல்லாமல் தாய்,அக்கா,அவனது உற்ற நண்பர்கள் கூட சுமக்கிறார்கள்.
பள்ளியில் சேகர், சிவனைந்தன் செய்கிற அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. இதில் சேகர் கமல் ரசிகனாகவும், சிவானந்தன் ரஜினி ரசிகனாகவும் வருவதை வைத்தும் படத்தின் பிரதான நகைச்சுவை அமைந்திருக்கிறது. கைக்குட்டையை நாசியில் நுகர்ந்ததும் இசைஞானியின் இசையில் வெளிவந்த 'பூங்கொடிதான் பூத்ததம்மா…’ பாடல் ஒலிப்பது அற்புத ரசனை. 'இளையராஜாவின் இசையை தவிர்த்து உங்களால் ஒருபோதும் கடந்து போக முடியாது'
கலையரசன் ஊர் மக்களை ஒன்று சேர்த்து சுமக்கும் காய்களுக்கு ஒரு ரூபாய் கூலியை கூட்டிக் கேட்டு வேலை நிறுத்தம் செய்ததின் பலன் என்ன என்பதை சிவப்பு சிந்தனையில் நாம் அறிய முடிகிறது!
காதல் என்றால் என்ன என்று தெரியாத பருவத்தில் ஆசிரியையே காதலிக்கலாமா என்றெல்லாம் எந்தவிவாதமும் நிகழ்த்தாமல் உள்ளத்தில் ஊற்றெடுத்த அன்பை அவர்கள் வெளிக்காட்டி இருப்பது அத்தனை இயல்பு. அந்த இயல்பைப் புரிந்து கொண்ட நிகிலா டீச்சரின் கள்ளம் இல்லாத கலையான முகம் அந்தக் காதலைக் கொச்சைப்படுத்தாமல் பாசத்துடன் கடந்து செல்லும் காட்சி அருமை!
சிவானந்தன் அம்மா, அக்காவாக வரும் ஜானகியும, திவ்யா துரைசாமியும் கூட மண்ணின் மக்களாக அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும் ஜானகியின் இறுக்கமும், தீர்க்கமும் நடிப்புக்கு அப்பாற்பட்டது. கையில் அரிவாள், சுத்தியல் பச்சை குத்தி, உழைக்க வேண்டியதன் அவசியத்தை மகளிடமும், மகனிடமும் விளக்கும் இடம் அருமை!
மாடு வயலில் மேய்ந்து விட்டது என்பதற்காக மாட்டைப் பொது இடத்தில் கட்டிவிட்டுத் தகராறு செய்யும்போது பணத்தை விட மானம் தான் முக்கியம் என காதிலிருந்த பொட்டுத் தங்கத்தையும் கழற்றி வீசியெரியும் காட்சியில் தன்மானத்தின் முக்கியத்துவம் படர்கிறது!
வாலிபமும், வாழ்வுரிமையும் ஒரே புள்ளியில் முட்டிக் கொண்டு நிற்கும் தருணத்தில் கலையரசன், திவ்யா துரைசாமிக்குமான காதல், ரசிக்கும்படி இருந்தாலும் கையில் வைத்துக்கொண்ட மருதாணி அழிவதற்குள் காதலும் ஓடையில் அழிந்து பார்வையாளர்களை சோகத்திற்கு உள்ளாக்கியது!
படத்தின் கடைசி அரை மணி நேரம் எதை கவனிப்பது, எதை விடுவது… எந்தத் துன்பத்தைப் பெரிதாக நினைப்பது என்று புரிந்து கொள்ள முடியாத அளவில் அத்தனை துயர்கள் அடுத்தடுத்த நிகழ…அதையெல்லாம் மிஞ்சிய சிவானந்தன் பசித்துயர் நம் வயிற்றை மட்டுமல்லாமல் இதயத்தையும் பிசைகிறது.
உணவின் தேவை எத்தனை அவசியம் என்பதை நம் உணர்வு நரம்புகள் வழியாக நெஞ்சுக்குள் கடத்தியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
ஆயிரக்கணக்கான வாழைக்காய்களைத் தலையில் சுமந்தாலும் பசிக் கொடுமைக்காக ஒரே ஒரு வாழைப்பழத்தை உண்ணப்போய் பொன்வேல் வாங்கும் அடி வாழையடி வாழையாக தொடர்வது வருத்தமளிக்கிறது! வாங்ய அடிகளின் அடையாளத் தழும்பு. மாறுவதற்குள் சந்தோஷ் நாராயணனின் இசை முந்திக் கொள்கிறது!
சந்தோஷ் நாராயணன் இசையில் அந்த‘தென்கிழக்கு தேன் சிட்டு…’ பாடலும் அதில் ‘தீ’யின் குரலும் சேர்கையில் செவிகளில் தீப்பற்றிக் கொள்கிறது.
அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்" என்ற அம்பேத்காரின் முழக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பசியின் கொடுமையையும், ஒரு வாய் சோற்றிற்காக சிவனைந்தனின் பரிதவிப்பையும், கல்வி மட்டுமே நம்மை வழிநடத்தும் என்ற பார்வையில் நம் முன்னே பல காட்சிகள் நிழலாடும் வகையில் படத்தினை எடுத்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ்Mari Selvaraj அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக