புதன், 3 அக்டோபர், 2012

பொருளை தேடி....

மனித வாழ்வு இன்று பணம் பணம் என்று பொருளை தேடுவதில் ஓடி முடிந்துவிடுகிறது. வாழ்வதற்கு பணம் தேவை என்பது போய் பணம் தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இப்படி பணம் பின்னே மட்டும் ஓடி வாழ்வின் சந்தோசங்களை தொலைத்தவர்கள் பலர். 

இங்கே தேடியது போதாது என்று நாடுவிட்டு கடல் தாண்டி பொருளை தேடி ஓடுபவர்கள் இறுதியில் கண்டது என்ன ?? சிலர் கடல் தாண்டி சென்றவர்கள் பொருளுக்காக செல்கிறார்கள், தங்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற செல்கிறார்கள்...ஆனால் தன் குடும்பத்தை விட்டு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் நபர்களின் நிலைமையை கேட்டால் கண்ணில் நீரை வரவழைக்கும்.  இந்த மனித வாழ்வை தன் பெற்றோர், மனைவி, குழந்தை, உடன்பிறந்தோர் இவர்களுடன் கழிக்க வழியின்றி போய் விடுகிறார்கள். 

திருமணம் முடித்து சிறிது நாளில் மனைவியை பிரிந்து வெளிநாடு சென்றவர்கள் பலர். இங்கே அவர்களின் குழந்தை பிறந்து, வளர்ந்து அப்பா என்ற உருவத்தை உணர்வால் தொட்டு உணராமல் நிழல் படத்தில் பார்த்து தெரிந்து கொள்கிறது. தகப்பனின் அணைப்பை குழந்தையும் , பெற்ற குழந்தையின் அருகாமையை  தகப்பனும் உணராமல் வாழ்ந்து என்ன இன்பம் ?!! குழந்தையின் வளர்ச்சியை அருகில் இருந்து காண்பதை போன்ற நிறைவு, மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. இது போன்ற பெரிய,சின்ன சந்தோசங்களை தொலைத்து வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்...?! 

நாளை இறக்க போகிறவர்கள் 
இன்று இறந்தவனுக்காக 
அழுதுகொண்டிருக்கிறார்கள் !

ஓடி கொண்டிருக்கும் ஜீவன் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை சொந்தங்களும் ஒட்டி கொண்டிருக்கும். அன்பே, உயிரே, கண்ணே, செல்லமே எல்லாம் முடிந்துபோய் பிணம் என்ற ஒற்றை அடையாளமாகி விடுவோம். அவர், அவள், என்பது மாறி அது என்றாகி போவோம். இறந்த பின் ஒருநாளுக்கு மேல கூட வைத்திருக்க மாட்டார்கள்...எடுத்து கொண்டு போனதும், வேக வேகமாக வீட்டை கழுவி விட்டு விடுவார்கள். பிணத்துடன் பீடையும் போகட்டும் என்று மூணு நாளில் விசேசம்(?) வைத்து நன்றாக உணவருந்தி சோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து விடுவார்கள், அப்புறம் பதினாறு, முப்பது என்று நாள் எண்ணிக்கை வைத்து நினைத்து விட்டு, ஒருநாள் ஒட்டு மொத்தமாக நினைவுகளும் அழிக்கப்பட்டு விடும். இது யதார்த்தம் !

இதே மனித வாழ்வு. இதை உணர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாட்கள்  இயற்கையின் அன்பளிப்பு என்று நன்றி சொல்லி பொருளின் பின்னே மட்டும்  ஓடாமல் சம்பாதித்த/சேர்த்த பொருளில் பிறருக்கும் சிறிது கொடுத்து சக மனிதன் சிரிப்பில் பேரின்பம் காண்போம்.   


பணக்காரன் தர்மம் செய்யாமல் நிம்மதியாக இறந்தது இல்லை என்பார்கள் . சம்பாதித்த பொருளை தர்மம் செய்யாமல் இருப்பவர்களுக்கு அனுபவிக்க வாரிசுகளும் ஏனோ இருப்பதில்லை.இது இயற்கையின் அமைப்பா? இறைவனின் தர்மமா ??

இருக்க ஒரு வீடு, பாதுகாப்பிற்கு போதுமான பொருள் சேமிப்பில், போக்குவரத்துக்கு ஒரு வாகனம், போதும் என்ற மனநிறைவு அடைந்து, அதற்கு மேல் வரும் வருமானத்தை வறியவர்கள், எளியவர்களுக்கு பாத்திரத்துக்கு தக்கபடி கொடுத்து வாழ்வின் மிச்ச நாட்களை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிக்கலாமே...! 

பகைமை மறந்து அன்பால் மனிதர்களை தழுவுவோம்...இயன்றவரை உழைப்பதில் அடுத்தவருக்காக கொஞ்சம் கொடுப்போம்...இருப்பதை பகிர்ந்து வாழ்வோம்...!

'மனிதநேயம்' வார்த்தையின் அர்த்தம் புரிந்து நடந்துகொள்வோம்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்...!

1 கருத்து:

Unknown சொன்னது…

தாய் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும்......இன்னொரு கருவறை அது எல்லோராலும் உணரமுடியாது......அது மாடிவீடு என்றில்லை........கூரை வீடு என்றாலும்.....சரிதான்......

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...