சனி, 30 மே, 2020

உப்பு நாய்கள் நாவல் விமர்சனம்


சில ஆண்டுகளாக சில எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டாமெனக் கடந்து போனதுண்டு, அப்படி வாசிக்க வேண்டாமெனக் கடந்துபோன  எழுத்தாளர்களில் திரு. லக்ஷ்மி சரவணக்குமாரரும் ஒருவர். கடந்த இரண்டு மாதங்களாக நான்கு சுவர்களுக்குள்ளேயே  இரவையும், பகலையும் கடத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதனாலேயே நான் இணையத்துக்குள் சிறைப்பட்டுப் போனன். சூரியனும், சந்திரனும் என்வீட்டு மின்விளக்கிற்குள் சிறைப்பட்டுப்போனது.

ஒரு எழுத்தாளரின் படைப்புகள் எதையும்  வாசிக்காமல் அவரைப்பற்றி, அவர் படைப்புகளைப் பற்றி நண்பர்களிடம்  விவாதிப்பது சற்று நெருடலாக இருந்தது. அதனால் கடந்தவாரம் இவரின் 'நீலப்படம்' நாவலை வாசித்தேன். நாவலாசிரியர் திரு. லக்ஷ்மி குமாரின் எழுத்துநடை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அக்கவர்ச்சியில் அவரின் படைப்புகளொன்றான 'உப்பு நாய்கள்' நாவலை வாசித்தேன்.

நாவலைப் பற்றிய சில விமர்சனங்கள் உங்கள் பார்வைக்கு.

இந்நாவலில் பேசப்படும் கதைக்களம், சென்னை நகரத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் அறியாமையையும், வாழ்வின் சூழலில் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள அவர்கள் கையாளும் குற்றச் செயல்களையும், அதனால் அவர்கள் படும்  வதையையும் பேசுகிறது. பேசப்படவேண்டிய முக்கியமான கதைக்கருவென்றாலும், அது நேர்மையாகப் பேசப்பட்டிருக்கிறதா என்றால் இல்லையென்பேன்.
இந்நாவலில் பேசப்படும் கதாபாத்திரங்கள்.

மணியும் சம்பத்தும் நண்பர்கள். நண்பன் சம்பத்தின் தாயை மணி அபகரித்துக்கொள்ள, அதன் பொருட்டு தன் தாயை நடுரோட்டில்  அம்மணமாக்கி ஓடவிடுவதும், மணியின் ஆணுறுப்புத் துண்டித்து தன் தாயிடமிருந்து பிரிக்க நினைப்பது மிகவும் வக்கிரத்தோடு எழுதப்பட்டிருக்கிறது.

சின்ன சின்ன திருட்டைச் செய்துகொண்டிருந்த செல்வியும், தவிடும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் மாட்டிக்கொள்ள அங்கே மற்றொரு கைதியான லட்சுமியோடு நட்புக் கொண்டு ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சார வேளைகளில் ஈடுபடுகிறார்கள்.

சென்னை ஆர்மீனியன் தேவாலய பாதிரியார் திருட்டு, கடத்தல், கன்னிப்பெண்களை பாலியலுக்கு உட்படுத்துவதும், கன்னியாஸ்திரிகள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள சுய இன்பம் கொள்வதாகவும்... ரவுடிகளின் கைவசம் தஞ்சமடைவதாகவும், பாஸ்கரன் காமத்துக்காக பிச்சைக்காரிகளைத் தேடியலைவதையும்  அதீத காமத்துடன் எழுதியிருக்கிறார். காமமும், குற்றச் செயல்களும் கூவத்தைப் போல் நாவலில் இரண்டு பாதியிலும் தேங்கி நிற்கிறது.

ஆரம்பத்தில் குருவியாகக் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கோபால் ஆட்டிறைச்சிக்குப் பதிலாக நாய்க்கறி விற்பதாய் கதை விரிகிறது... இக்கதாபாத்திரம் சிறப்பாகப் பேசப்படவேண்டியதொன்று... ஆனால் பேசப்பட்டதா..? சமீபத்தில் நாம் எல்லோரும் செய்தித்தாள்களில் வாசித்ததென்றாலும் இன்னும் நகரத்திற்குள் நடந்துகொண்டிருப்பது இச்செயல் அவலத்தின் உச்சம்தான்.

மகேஷ், ஷிவானியின் உறவு மிகக் கொச்சையாக இருந்தாலும், மகேஷ் பெண்களை பாலியல் இச்சைக்குற்படுத்தி, அந்தக் காணொளியை இணையத்திலும், நட்பு வட்டத்திலும் பகிர்வதையறிந்த ஷிவானி மகேசை தண்டிக்கும் இடத்தில் நாவல் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தது.
இரண்டாம் பாதி பிழைப்புத் தேடிசென்னை வரும் ஆதம்மாள் குடும்பம் மற்றும் கட்டிடத்தொழிலில் ஈடுபடும் மக்களைப் பற்றி விவரிக்கிறது... எண்ணற்ற கனவுகளுடன் சிறகை விரித்துப் பறக்கும் முன் அதன் சிறகை உடைக்கும் குழந்தைத் தொழிலாளி ஆதம்மாள், கணிப்பொறியாளர் ஆர்த்தி இருவரின்  கதாபாத்திரங்கள் இயல்பை மீறிப் பேசப்பட்டிருந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தது.

இரண்டு பாதியாகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும் இரண்டிற்கும் வேறுபாடுகள் எதுவுமில்லாமல் காமம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.
நகரத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வு மற்றும் அவர்களின் குற்றச் செயல்கள் குறித்தெழுதும்போது ஒரு எழுத்தாளர்  சமூக அக்கறையுடனும் எழுதவேண்டும். எந்த அக்கறையுமின்றி மனம் போன போக்கில் எழுதுவது நாகரிகமற்ற செயல்... இச்செயலைத்தான் இந்நாவலாசிரியர் செய்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை எழுதும்போது அவர்களுக்குள் இருக்கும் நற்பண்புகள் குறித்தோ, அவர்களுக்கு இருக்கும் வாழ்வியல் சிக்கல்கள் குறித்தோ எதுவும் எழுதப்படவில்லை. வெறும் காமத்தையும், அவர்களின் குற்றச்செயல்களையும் பற்றியே எழுதப்பட்டிருக்கிறது.

இந்நாவலை வாசிக்கும்போது விளிம்பு நிலை மனிதர்களென்றால் கஞ்சா விற்பவர்கள், விபச்சாரம் செய்பவர்கள், நாய்க்கறி விற்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற கட்டமைப்பிற்குள் வாசிப்பவனைத் தள்ளுவது வன்மையான செயல். அம்மக்களின் மீது சிறு கரிசனையோ, அக்கறையோ ஏதுமற்று ஒரு எழுத்தாளர்  எழுதுவது பொறுப்பற்ற செயல் அப்பொறுப்பற்ற செயலைத்தான் நாவலாசிரியர் செய்திருக்கிறார்.

நாவல் முழுக்க கதை மாந்தர்கள் மாறிமாறிப் பாலியல் வண்புணர்வில் ஈடுபடுவதும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதுமாய்த்தான் காட்சிப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு புணர்ச்சியும் நீண்ட நேரம் நீடிக்கிறது என்பதை விலாவாரியாக விவரித்து எழுதியதை வாசிக்கையில் நகராட்சி கழிவறைக்குள் எழுதப்பட்டிருக்கும் வாசகம்போல் இருந்தது.....இதெல்லாம் இலக்கியமென்றால் நாளைய தலைமுறை நகரத்தின் கழிவறைகளை வாசிக்க வேண்டியதாகிவிடும். தயவுசெய்து நாளைய தலைமுறையைக் கழிவறைக்கும் பூட்டிவிடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...