செவ்வாய், 21 ஜூலை, 2020

குட்டிகோரா....சிறுகதை விமர்சனம்.




எழுத்தாளர் தெரிசை சிவா... அமீரக வாசகர்கள் நட்பு வட்டத்திலிருந்தாலும் நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்கொண்டதில்லை, இருவரும் எங்காவது சந்திக்க நேர்ந்தால், சிறு புன்னகையுடன் நலம் விசாரிப்பது மட்டுமே எங்களுக்குள் நிகழும் அதிகபட்ச உரையாடல்கள்....  புத்தக விமர்சனக் கூட்டமொன்றில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் திரு. வேல ராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை' நாவலைப் பற்றி சிவா விமர்சனம் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது... கடும் பசியிலிருந்த யானையொன்று கரும்புத் தோட்டத்தில் புகுந்தது போல் அந்நாவலில் பேசப்பட்டவற்றை எல்லாம் நின்று நிதானமாக நாஞ்சில் வட்டார மொழி வழக்கில் அசைபோட்டது சிறப்பாகவும் வியப்பாகவும் இருந்தது.

மதுரைவட்டார வழக்குமொழியில் எழுதப்பட நாவலை நாஞ்சில் மொழியில் விமர்சித்தது வித்தியாசமாக இருந்தது. அன்றுதான் சிவா ஒரு எழுத்தாளர் என்பதையும், அவரின் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருப்பதையும் நண்பர்கள் சொல்லத் தெரிந்து கொண்டேன்.

இச்சிறுகதைத் தொகுப்பு எங்களது வாசகர் வட்டத்தில் நண்பர்கள் பலரால் பரவலாகப் பேசப்பட்ட போதுதான் நாமும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் பற்றிக்கொண்டது... எனது ஆர்வத்தை தெரிந்துகொண்ட புத்தகத்தின் pdf  file அனுப்பி  வாசிக்கவைத்தார் . 

இச்சிறுகதைத் தொகுப்பில், தோசை, அண்டி, அணுகுண்டு, கும்பாட்டக்காரி, வெத்தலப் பாட்டி, மலையாள பேய்கள், கால்சட்டை, ஆசான், முடியன், குட்டிக்கொரா, உலக்கருவி, நருவல் என பதிமூன்று கதைகளுமே நம் கூடவே வாழும், வாழ்ந்த எதார்த்த எளிய மனிதார்களின் கதைகளாக இருந்தது கூடுதல் சிறப்பு.

இச் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளை வாசிக்கையில் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை... தனிமையில் இருக்கையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தை நினைத்து, நினைத்து தானாக சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். மற்றொருவரை சிரிக்கவைப்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் எழுத்துக்கள் மூலம் ஒருவரை சிரிக்க வைப்பதற்கு அசாத்திய எழுத்துத் திறமை வேண்டும். அந்த அசாத்திய திறமை சிவாவிடம் இருப்பதை ஒவ்வொரு கதைகளையும் வாசிக்கையில் அறியமுடிகிறது.

மனிதனின் மற்ற உணர்வுகளைவிடத் தன்மானம் முக்கியமாக இருக்கிறது.... மானம் போனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை மனிதர்களிடம் மட்டுமே இருக்கிறது... தன்மானத்தை உயிரைவிட மேலானதாக மனிதன் கருதுகிறான்.

 தோசை கதையில்...

விசாரணைக்காக காவல் நிலையம் சென்று வந்த பக்கீர் மனம் நொந்து அவமானத்தில் தலைகவிழ்ந்து அழுகையில் பிரம்மநாயகம் பிள்ளை ஆறுதல் கூறிவிட்டு... போலீஸ் அடிக்க கிடிக்க செய்திருப்பார்களோ என்று கூர்ந்து கவனித்துவிட்டு, சரி விடு பக்கீர்... இதற்குப் போய் கவலைப்படுகிறாய் என்பார். அவரின்
போலிஸ் அடித்திருப்பார்களோ? என்று உற்று நோக்கும்பார்வையில் ஓராயிரம் வலிகள் நிரம்பி நின்றது.

விசாரணைக்காக காவல் நிலையம் சென்றுவிட்டு மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு  நிரபராதி என்ற  தீர்மானத்துடன் வீடு திரும்பிய ஒருவரிடம்.... போலிஸ் அடிக்க கிடிக்க செய்தார்களோ என்ற கேள்வி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் விழுந்த சம்மட்டி அடியைப்போல் இருந்தது. காவல்துறைக்கும், பாதிக்கப் படாதவருக்கும் வேண்டுமானால் சாதாரணமான விசாரணையாகத் தெரியலாம் பாதிக்கப்பட்டவருக்கு அது உயிர்... அவமானம். இதெல்லாம் வாசிக்கும்போது புரியாது அனுபவித்தவர்களுக்குத்தான் அவ்வலி புரியும்.

அண்டி கதையில் புத்தி வளர்ச்சியில்லாத அண்டி, சோறு கிடைத்தால் போதுமென்று  எந்த வேலையானாலும் செய்து கொண்டிருப்பான். அவருக்கும் கோபாலுக்கும் ஏற்பட்ட சண்டையில்  அண்டியை ஊர் மக்கள் பார்க்க குண்டித்துணியை உருவிவிட... அவமானம் தாங்காத அண்டி அழுதுகொண்டிருக்கிறான்... எதைப் பற்றியும் கவலைப்படாத அண்டிக்கும் மானம் என்பது உயிராக இருக்கிறது, ஊர் மக்கள் ஒன்று கூடி படையல் சோறு சாப்பிடுகையில்... முதல் முறையாக எனக்கு பசிக்கவில்லையென்று அண்டி சொல்வதை  வாசிக்கையில் மனம் வலிக்கத்தான் செய்தது... எதையும் சிந்திக்கும் திறனிலாதவனாக இருந்தாலும் அவனுக்குள் மானம் என்ற ஒன்று அவனை எவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது...

இதேபோல் அணுகுண்டு கதையில் அனு (அனுபாத்திமா) குண்டாக இருப்பதை மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்ய... எதார்த்தமாக ராமசாமி ஆசிரியர் அணு  திட்டத்தைப் பற்றி பாடம் நடத்துகையில் மாணவர்கள் அனுவைக் கேலி செய்ய, அவள் மன உளைச்சலில் அழுகையில், ராமசாமி ஆசிரியர் ஆறுதல் கூறி பெற்றோரை வரவைக்க, மகளின் கண்ணீரையும், முக்காடு கலைந்திருப்பதைப் பார்த்த பாத்திமாவின் தந்தையினால் அவமானப்படுத்தப்பட்ட ராமசாமி ஆசிரியர் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் அடைந்து கிடக்கிறார். உயிரைவிட மேலாக ஆசிரியர் தொழிழை நேசித்த ராமசாமி ஆசிரியரால் அவச்சொல்லைத் தங்கிக்கொள்ளமுடியவில்லை. இப்படி மனிதர்களின் மனங்களைப் பற்றியும், சுயமரியாதையைப் பற்றி பல பல கதைகள் இருக்கிறது.

எந்த மருந்தையும் நாடாமல் பல நோய்களை கட்டுப்படுத்த முடியுமெனில் வாய் விட்டுச் சிரி என்கிறாரர்கள்... இச் சிறுகதைத் தொகுப்பை இரவு வாசிக்கையில் தானக வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்... அவ்வளவு நகைச்சுவை உணர்வுகளை எதார்த்தமா எழுதியிருக்கிறார்.

சிவா வாய் விட்டுச்சிரித்ததை பார்க்கவில்லை என்றாலும் சிரித்து நகரும்படியாக நகைச்சுவை உணர்வுகளை கதையின் ஓட்டத்தில் அள்ளிக் கொடுத்திருப்பார்... தெரு முனையில் நான்கு நண்பர்களைச் சந்தித்து பேசிக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி எதார்த்தமாக இருந்தது பல கதைகள்.

அண்டி கதையில் மழையில் நனைந்துவிடக் கூடாது என்று தினசரி செய்தித்தாளை வாத்தியார் வீட்டின் சன்னலைத்திறந்து போடுகையில்... அந்த அக்காவை விடு... அந்தா அக்காவை விடு என்று அண்டி கத்தி ஊரைக் கூப்பிட, வாத்தியார் மானம் மழையோடு மழையாய் தெருவெங்கும் பரவியது...!

வெத்தலப் பாட்டி கதையில் முடி முளைக்க வைத்திய முறை  செல்லும் போதும்... முடியன் கதையில் ஆட்டுக் கிடாயும்,  சுடலை மாடனும் பேசும் இடங்களிலும் வாய் விட்டுச் சிரிக்காமல் வாசிக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லலாம்... அத்தனை எதார்த்தன நகைச்சுவைகள் அந்த எழுத்தில்.

கோவிலுக்கு நேந்து விட்ட ஆட்டுக்கிடாயை பலி கொடுக்கவிருக்கும் நேரத்தில் ஆடு தன்னை காப்பாற்றிக் கொள்ளச் சுடலையுடன் பேசும் இடத்தில் தன்னால் அடக்க முடியாத சிரிப்பு எனக்குள்...!

ஒச்சம் இருந்தால் பலி கொடுக்க மாட்டார்கள் என்பதற்காக தன் காலை உடைத்துக் கொண்ட ஆட்டுக்கிடாயை ஊர் மக்கள் யாரும் மதிக்காமல் போக ஆடு தன் கம்பீரத்தை இழந்து உணவின்றி தவிக்கையில் கொஞ்சம் மனம் வலிக்கத்தான் செய்தது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்ற கண்ணதாசனின் வரிகள்தான் ஞாபகத்தில் வந்தது.
கும்பாட்டக்காரி...

கரகத்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். கிழக்கு இராமநாதபுரத்தில் தஞ்சாவூரில் கரக செம்பு என்றும், திருநெல்வேலி மக்கள் கரகக்குடம் என்றும் கன்னியாகுமரி மக்கள் கும்ப ஆட்டம் என்றும் அழைப்பார்கள்.

கோவில் திருவிழாக்களில் மக்களை உற்சாகத்துடன் வைத்திருக்க, இரவு முழுவதும் தூங்காமல் வைத்திருக்க கோமாளிகள் வந்து ஆடுவதுண்டு. இதன் நோக்கம் ஆட்டக்காரர் ஓய்வெடுப்பதாக இருக்கும். கோமாளி அவ்வூர் பேச்சு மொழியில் ஆபாசம் கலக்க நகைச்சுவையாகப் பேசுவார்கள்.... இன்று இக்கலை அழிந்துவிட்டது . 

சடல சாந்தி கதை...

இன்று நாடெங்கும் நடந்துகொண்டிருக்கும் சாதிய ஆணவக் கொலைகளை எடுத்துச் சொல்லும் கதையாக இருந்தது.

தமிழர் மரபில் பெண் தெய்வ வழிபாடு பல நூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆணாதிக்க மனோநிலை கொண்ட சமூகச்சூழலில் எப்படி பெண்கள் தெய்வங்களாயினர் என்ற கேள்வி இயல்பானது. ஆனாலும், எந்த நல்ல காரியம் செய்தாலும் வழிபட்டுத் துவங்கும் பழக்கம் ஆதியிலிருந்தே தொடர்கிறது.

மிங்கூர் ஜமீனுக்கு அம்மணச்சாமியின் மீது அபார நம்பிக்கை. ஜமீனில் நல்லது கெட்டது எதுவானாலும் அம்மணச்சாமியாரின் அருள் வாக்குதான் ஜமீனை இயக்கும்... தன் மகளின் தோழியை நான்காவதாக மணமுடிக்க நினைக்கும் தந்தையை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில் மகள் செந்தேன் நாச்சியார் மயங்கி கிடக்க... விஷம் குடித்து இறந்துவிட்டதாக நினைக்கிறார் ஜமீன்.... அரச வாரிசுகள் கன்னியாய்ச் சாவது ஜமீனுக்கு அழிவிற்கு வழி வகுக்கும், அதனால் இளம் வாலிபனைக் கொண்டு இறந்த பெண் உடலை புணரச்செய்தால் உடல் சாந்தியடையும் என்ற அம்மணச்சாமியின் ஆலோசனையில் பேரில் குதிரை மேய்க்கும் ஒருவனை ஏற்பாடு செய்திருப்பார் கணக்குப்பிள்ளை... பணமும், அதிகாரமும் இருந்தால் எதையும் வாங்களாம்... ஒரு அடிமையை வாங்க முடியாதா என்ன?

 பிணத்துடன் புணர ஒருவனை ஏற்பாடு செய்துவிட்டு... நீண்ட ஆலோசனைக்குப் பின் கணக்கு... அவன் என்ன சாதிக்காரன் என்று கேட்பார்... அறைக்குள் போனவன் இவள் சாகவில்லை நாடி துடிக்கிறது என்று ஓடிவர ....அவன் உடலில் இருந்த குங்குமத்தைப் பார்த்த ஜமீன்....இருவரையும் ஒரே அரையில் வைத்து தீ மூட்டியதை வாசிக்கையில் ஒரு மனிதனுக்குள் சாதி எந்தளவிற்க்கு வேரூன்றி இருக்கிறது என்பதை உணரச்செய்தது. 

இதேபோல் அப்பா கதையில் நான் என்ன நினைத்தேனோ அதையே வாசிப்பதாக இருந்தது... என் அப்பாவை அமீரகம் அழத்துவர நினைத்தும் அதற்கு என் அப்பா சம்மதிக்கவில்லை... முதல் முதலில் என் அப்பாவை பேண்ட் போடவைத்து அழ பார்த்த போது...பேண்ட்டை கலட்டிப்போட்டுவிட்டு என்தந்தை சொன்ன முதல் சொல்.. .இதென்னடா தம்பி  ஆட்டை காலைக் கட்டிவிட்டது மாதிரியிருக்கு என்றார்... அட போடா...இதெல்லாம் ஒத்துவராது என்றார்... அப்பாவை நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இக்கதை பிடிக்கும். 

இப்படி ஒவ்வொரு கதைகளும் வித்தியாசமான கதைகளாக இருந்தது.

குட்டிக்கோரா வாசிக்க வேண்டிய புத்தகம்.

வாழ்த்துகள் தெரிசை சிவா.

-பால்கரசு- 

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நல்ல விமர்சனம்...
வாழ்த்துகள்.

Jazeela சொன்னது…

மீண்டும் நூலை வாசித்த அனுபவத்தைத் தந்த பதிவு. அருமை.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...