வியாழன், 30 ஜூலை, 2020

அரசியல்_கற்போம்

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களது எண்ணம், கருத்து, நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசியல் இல்லாமல் நீங்கள் உயிர்வாழ இயலாது.

நாற்பது ஆண்டுகளாக அரசியல் நமக்குத் தேவையில்லையென்று ஒதுங்கியேயிருந்தேன். இந்தக் கொரானா காலம்தான் அரசியலின் முக்கியத்துவத்தை, அரசியலில் தேவையை எனக்கு உணர்த்த ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் என்னைச் சுற்றி இருப்பவர்களின் உந்துதலில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினேன். பணி என்றால் ஊர் ஊராக போஸ்டர் ஒட்டுவதும், கட்சியின் நிதிக்காக உண்டியலேந்தி ஊர் ஊராக அழைவதுமே ஆகும்.  பள்ளிச் சிறுவனாய் மூக்கை வடித்துக்கொண்டு பட்டன் இல்லாத டவுசரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராக நன்பர்களுடன் அழைந்திருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் கட்சித் தலைவரின் வெள்ளை வேட்டி மெல்ல வெளுக்கத் தொடங்கியது...!
வெண்மை எப்பொழுதும் தன்மீதிருக்கும் அழுக்கைக் காட்டிக் கொடுத்துவிடும் அல்லவா..? அப்படித்தான் எங்க கட்சித் தலைவரின் வேட்டி அமுல் டப்பாவின் துளையிட்ட உண்டியலில் வெளுத்திருக்கும் ரகசியத்தை அறிந்துகொண்டேன். அதிலிருந்து அரசியலிருந்து, இல்லை உண்டியல் சுமப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டேன.

பின்பு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சியின் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டது... அதற்கான காரணம் மாட்டுக் கொம்புகளில் அடித்திருந்த பெயிண்டுதான், மாட்டுக் கொம்புகளில் எத்தனையோ வண்ணங்களில் பெயிண்ட் அடித்திருந்தாலும், நமது தேசியக்கொடி கலரில் அடித்திருக்கும் மாடுகள் அதீத மிடுக்காகத் தெரியும்... இந்தியன் என்ற மிதர்ப்பு அதன் முகத்திலும் இருக்கும்.  இந்திரா காந்தியையும், ராஜீவ் காந்தியையும் தெரிந்திருந்த எங்க ஊர் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியைத் தெரியவில்லை இதுதான் அக்கட்சியின் அப்போதைய வளர்ச்சி... இப்பவும் அப்படித்தான் இருக்கு!

எங்கள் கிராமத்தில் தேர்தல் வந்துவிட்டால் எம்ஜிஆர், கலைஞர் இருவரும் பனைமரம், பாழடைந்த வீடு, பள்ளிக்கூட சுவர் என எங்கெல்லாம் இடமிருக்கோ அங்கிருந்து ஊர் மக்களைப் பார்த்து சிரிப்பார்கள், அதுவும் எம்ஜிஆர் மேற்குத் தெருவிலும், கலைஞர் கிழக்குத் தெருவிலிருந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். மேற்கு எப்போதும் கிழக்கை நோக்கி ஆதிக்கம் செலுத்தும்... அதிகாரம் செய்யும்... வெளுத்திருக்கும் கூடவே கொழுத்தும் இருக்கும். இந்த இருவரைத் தவிர வேறெந்த அரசியல்வாதியையும் அப்போது தெரியாது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் திமுக தன் கட்சி இழப்பை, இருப்பை மீட்டெடுக்க ஊர் ஊராக பொதுக்கூட்டம் போட்டுக்கொண்டிருந்தது... அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அரண்மனையில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. மிளகாய் பஜாரில் அப்பாவுக்கு துணையாக சென்ற எனக்கு அக்கூட்டத்தை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தத.

அக்கட்டத்தில் கலைஞர் கருணாநிதியைக் கைக்கு எட்டும் தூரத்தில் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது... கருப்புக் கண்ணாடியில் மிகப் பிரம்மாண்டமாகத் தெரிந்தவரை, அதுவரை சுவரிலும் பேப்பரில் மட்டுமே பார்த்து அறிந்திருந்த அந்த முகத்தை அருகில் பார்க்கும்போது ஆடு மேய்க்கும் எங்க பக்கத்து வீட்டு மாயாண்டியைப் போல் அவ்வளவு எளிமையாக இருந்தார்... ரொம்பச் சாதாரணமாகத் தெரிந்தார்.

அக்கூட்டத்தில் தீப்பொறி ஆறுமுகத்தில் தொடங்கி, யார் யாரோ பேசிக்கொடிருந்தார்கள், எல்லோரும் ஆளுக்குப் பத்து நிமிடம்,பதினைந்து நிமிடம் பேசி முடித்ததும் கலைஞர் அவர்கள் பேசத் தொடங்கும்போது இரவு எட்டு மணியாகிவிட்டது.
கலைஞர் தன் தோள் மீதிருந்த துண்டைச் சரி செய்துகொண்டு மைக்கை பிடித்து பேச தொடங்கும்போது இருந்த கூட்டமும், கை தட்டலும் எனக்கு வியப்பாக இருந்தது.  பேசும்முன் எதுக்கு இந்த கைதட்டல்... ஏன் இவர்கள் இப்படி ஆர்ப்பரிக்கிறார்கள்..? என்ற கேள்விகள் என் மூளைக்குள் மண் புழுவைப் போல் ஊரத் தெடங்கியது.

தெடர்ந்து மூன்று மணிநேரம் இடைவிடாத அடுக்கு மொழியிலும், இடையிடையே குட்டிக் கதைகளுடனும், புராணக் கதைகளுடனும் இந்த படுகொலைக்கும் திமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மக்களிடம் விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் உருக்கும், ஈர்க்கும் பேச்சில் மயங்கியவன் அதுவரை ரோட்டோர சுவர்களில் இருந்த கலைஞரை என் வீட்டுக் கதவில் ஒட்டி அழகு பார்க்க வைத்தது.

என் வீடு வறுமையில் வாடினாலும் கலைஞர் மட்டும் என் வீட்டுக் கதவில் செழுமையாக இருப்பார்.

அதன் பின்னர் பரமக்குடியில் ராஜா சேதுபதி ஸ்கூலில் பதினொன்றாம் வகுப்புப்  படிக்கும்போதுதான் ஸ்டாலின் அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் ஊர் ஊராக சின்னச் சின்ன மேடைகளில் பேசிக் கொண்டிருந்த காலமது... பரமக்குடி ரவி தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற நான் ஸ்டாலின் ரவி தியேட்டருக்குள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது... அவர் கலைஞரைப் போல் சரளமாகப் பேசவில்லை ஒரு துண்டுச் சீட்டை வைத்து வாசித்துக் கொண்டிருந்தார். இது நான் நேரில் பார்தத உண்மை நிகழ்வு.

அந்தக் கூட்டத்தில் ஸ்டாலினை அருகில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.. டவுசர் போட்ட சின்னப் பையன் என்பதால் என்னை முன் வரிசைக்கு அனுப்பிவிட்டார்கள்... ஆம் பதினொன்றாம் வகுப்புவரை நான் டவுசர் போட்ட பையந்தான். சிறுவர்கள் இளைஞர்களையும் அமரவைத்து போட்டோ எடுத்தார்கள். ரொம்ப மகிழ்வாய் இருந்தது... கதவில் ஒட்டிய கலைஞர் மீதான நேசம் குறையாமல் ஸ்டாலின் மீதும் ஒரு பற்றுதல் உண்டானது.

பின்னான காலங்களில் அதிமுகவும், திமுகவும் தென்மாவட்டங்களில் சாதீய அரசியல் செய்வது புரிய ஆரம்பித்ததும் அரசியல் என்பது சாக்கடை மட்டுமில்லை, அதையும் தாண்டி ரத்தம் பார்க்கக் கூடியதும் என்பதை சில நிகழ்வுகள் எனக்கு உணர்த்தியது. அதோடு அரசியல் என்பது எனக்குத் தேவையில்லாத ஒன்றாக இருந்தது... அதன்பின்னர்  செல்வி ஜெயலலிதாவின் வீட்டில் அள்ளியதாய் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தங்க குவியலும், செருப்புக் குவியலும் மேலும் எனக்குள் அரசியல் மீதான வெறுப்பை வளர்த்தது.

ஒரு கட்டத்தில் குண்டுமணி தங்கம் கூட நான் போடமாட்டேன் என்றும், ஒரு ரூபாய் சம்பளத்தில் பங்களா கட்டும் ரகசியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்த ஜெயலலிதாவை இரும்பு மனுசியென்று ஊரே புகழும்போது எனக்கும் கொஞ்சம் பிடித்துப் போனது என்பதே உண்மை. உண்மையில் நல்ல மனுசிதான் கூட்டுச் சரியில்லை என்பதையும் அறிய நேர்ந்தது... இங்கு கூட்டுச் சரியில்லையென்றால் குட்டிச்சுவராய்ப் போவாயென என் அப்பா அடிக்கடி திட்டுவதுதான் ஞாபகத்தில் வருகிறது. நம் கூட்டு எப்போதும் சரியா இருக்கணும் என்பதை உணராத, சரியில்லை என்றால் என்னாகும் என்பதை உலகுக்கு உணர்த்தி சென்றவர் ஜெயலலிதா.

இரும்பு மனுசியை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கத் தொடங்கும்போது... நான் ரசித்த, விரும்பிய, வியந்த தலைவர் கலைஞரை தெருவிற்கு கொண்டு வந்த ராட்சசியின் மீது அதீத கோபம் எனக்கு. என்ன குரூரப் புத்தி... ஒன்னும் செய்யாத குற்றத்திற்காக ஒரு முதியவர் என்று கூட பாராமல் அவர் செய்த அதிகாரம், அடக்குமுறைகள் மேலும் எரிச்சலைத் தந்தது... ஒரு பக்கத்தில் காவலுக்கு காக்கியை அனுப்புவதும், மறுபுறம் கல்லெறிய ஆள் அனுப்புவதும் இவரின் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று. அதனால் இவரை மட்டும் மன்னிக்க மனம் மறுத்தது.

கடந்த சில ஆண்டுகள் பாலைவனத்தில் வாழும்போது என் வீட்டு முற்றத்தின் வேப்பம் பூ வாசனையின் அருமை புரியத்தெடங்கியது... அதற்கேற்றார் போல் அண்ணன் சீமான் பேச்சிலும், அரசியல் முன்னெடுப்பிலும் மனம் லயிக்கத் தொடங்கியது. பின் தமிழன் என்ற கவர்ச்சியில் அடைப்பட்டு அதில் உறுப்பினரானேன்.

இயற்க்கையை நேசிப்போம், விவசாயத்தைக் காப்போம் என்று முழக்கமிடும் யாருக்கும்  விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.
மண்ணைக் கலந்து எள்ளு விதைப்பதும், மிளகாய் விதைத்தபின் கை எரிச்சல் தாங்காமல் மாட்டுச் சாணத்தைக் கையில் தடவும் எனக்குத் தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியும். ஏசி வீட்டிலிருந்து கொண்டு பூந்தொட்டியில் மிளகாய்ச் செடி நடுபவர்களுக்கும், மொட்டை மாடியில் தோட்டம் போடுபவர்களுக்கும் விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்?? யோசித்தால் சிரிப்புத்தான் வரும்... அதுதான் இன்றைய அரசியலாகவும் இருக்கிறது.

விவசாயத்தை காப்போம்  என்று பேசுபவர்கள் யாரும் விவசாயம் செய்ததில்லை, விவசாயம் செய்துகொண்டிருக்கும் யாருக்கும் தன் பிள்ளையை வேளாண்மை படிப்பைக் கூட படிக்க வைக்க விரும்பமாட்டார்கள். இதுதான் உண்மை.

இப்போது அரசியலறிவு இல்லையென்றால் உன்னால் வாழமுடியாது என்ற நிலையை உணரத் தொடங்கிவிட்டேன். ஆம் எந்தக் கல் எங்கிருந்து எறியப்படுகிறது...  எந்தக் கல் நம்மை காயப்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளவாவது அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

அரசியல் புரியவில்லையெனில் எந்த கார்பரேட் நிறுவனங்களிலும் உன்னால் ஒருபடி கூட கடக்க முடியாது என்பதை கடந்த வாரம் நடந்த நிகழ்வுகள் உணர்த்தியது.

தன் வாழ்வை நிலைநிறுத்த அரசியல் முக்கியமான ஒன்று. அரசியல் கற்போம், அரசியல் செய்வதற்காக அல்ல, அரசியல் செய்பவர்களைப் பற்றி அறிந்துகொள்ள.

பால்கரசு
30/07/20

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...