புதன், 17 நவம்பர், 2021

நஸ்க்காவின் பிறந்தநாள்

 #பிறந்தநாள்_வாழ்த்துகள்_நஸ்க்கா.

கொண்டாடுவதில் நஸ்க்காவிற்கு ஒருபோதும் நாட்டமிருந்ததில்லை, கடந்த காலம் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்பதைத் தீர்க்கமாக நம்புகிறவன் என்றாலும்  மற்றவர்கள் தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை அவன் ஒருபோதும் கேலியோ உதாசீனமோ செய்ததில்லை. 

தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் மேற்கத்தியக் கலாச்சாரம் கிராமப்புறங்களில் கொரோனாத் தொற்றைப் போல் பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவனுடைய பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களில் ஒருவனான அந்தோணி புத்தாடை அணிந்து பிறந்தநாள் கேக் மற்றும்  சாக்லெட்டுடன் தேவ தூதரின் பிள்ளையைப் போல் பள்ளி வகுப்பறையில் நுழைந்ததைப்  பார்த்த நஸ்க்காவிற்கு ஆச்சர்யமாகவும் புதுமையாகவும் இருந்தது. பிறந்தநாளுக்குக்கூட புதுத்துணி எடுத்துக் கொடுக்கிறார்களா என்று யோசித்தான்.

தட்டில் காகிதங்கள் மினுமினுக்க என்னைப் பார் எனச் சிரித்த சாக்லெட்களைப் பார்த்த நஸ்க்காவின் அடி நாக்கில் எச்சில் சுரக்க ஆரம்பித்தது. வகுப்பாசிரியர் விஜயக்குமார் முன்பு சாக்லெட் தட்டை நீட்டினான் அந்தோணி. அவரோ பிறந்தநாள் வாழ்த்துகள் என்றதுடன் கம்மங்காட்டில் புகுந்த கோவில் மாட்டைப் போல, பசங்க இருக்காங்களே என்ற எண்ணமேதுமின்றி எல்லாம் தனக்கே என்பதாய் கலருக்கு ஒன்று எடுத்து மேயத் தொடங்கினார். 

நஸ்க்காவின் பார்வை முழுவதும் அந்தத் தட்டில் மீது இருந்தது. இந்த மேய்ச்சலில் சாக்லெட் எல்லாருக்கும் கிடைக்கும் விதமாய் மிஞ்சுமா..? நமக்கு ஒன்றாவது கிடைக்குமா என்ற கேள்வி அவன் மனசுக்குள் எழுந்து கண்ணின் வழி வகுப்பறையைச் சுற்றி வந்தது. வாத்தியார் எடுத்தது போக மீதமிருந்ததை ரவி தன் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கொடுத்தான்.  மற்றவர்களின் ஏக்கப் பார்வையைப் புறந்தள்ளி, தட்டை தன் பைக்குள் வைத்துவிட்டு  இருக்கையில் அமர்ந்து கரும்பலகையை நோக்கினான். நஸ்க்காவுக்கு சாக்லெட் என்னும் எழுத்துக்கள் தலைக்குள் சுற்றுவது போல் இருந்தது.

மேல் சட்டைப் பித்தான் இல்லாத, அரசாங்க காக்கிக் டவுசரில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நஸ்க்காவைப் போன்ற நான்கய்ந்து பேருக்கு மட்டும் சாக்லெட்டின் மேலிருந்த கலர் பேப்பருக்குள் எப்படியான சுவை இருக்கும் என்ற கனவு வானவில்லாய் கரைந்து போனது. 

'ஏய் எல்லாரும்  பாடத்தைக் கவனியுங்கள்' என்றபடி பாடத்தை ஆரம்பித்த வாத்தியார் தன் சொத்தைப் பல்லில் சிக்கிக் கொண்ட சாக்லெட்டை நாவால் நெம்பிக் கொண்ட சிலரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார். வகுப்பறை முழுவதும் மயான அமைதி நிலவியது, நஸ்க்காவின் மனசு மட்டும் இழவு வீட்டைப் போல் இருந்தது.

அன்று மாலை வீட்டிற்குப் போனதும் அம்மாவிடம் போய் 'என் பிறந்தநாள் எப்பம்மா..?' என்று கேட்டான்.

'ஆமா... பொறந்தநாள் ஒன்னுதான் கொரச்சல்... போ... போயி மாட்டை அவுத்துக் கட்டுடா... பொறந்தநாளு தெரிஞ்சி நாட்ட ஆளப் போறியளாக்கும்" என்றதும் காற்றில் அசையும் அத்தி மரத்தின் இலைகளின் இரைச்சலை அவனுக்குள் இறக்கி வைத்தது. பிடித்துக் கட்டிய மாட்டிற்கு கம்மந்தட்டையுடன் பிறந்தநாளைக் கொண்டாடும் கனவையும் சேர்ந்தே ஒடித்துப் போட்டான். 

அம்மாவின் பேச்சு கோபத்தை ஏற்படுத்தினாலும், இனி இந்த அவமானம் தேவையா என்று யோசித்தாலும் தனது பிறந்தநாளைத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவனுக்குள் கூடித்தான் இருந்தது. 

சில நாட்களுக்குப் பிறகு, அம்மா சந்தோசமாய் இருந்த தருணத்தில் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். இப்ப நாடாளப் போறியான்னு கேக்காமல் சிரித்தபடி, 'அதெல்லாம் யாரு ஞாபகத்துல வச்சிருக்கா..? நீ பொறக்குறப்போ வீட்ல ஒரு காலண்டர் கூட இல்லை... வெள்ளி எது? சனி எதுனும் யாருக்குத் தெரியும்..?' என்றவள்,  'அப்ப அப்பசி முடிஞ்சி கார்த்திய மாசம்ன்னு நெனக்கிறேன்...  நல்ல அடமழ அன்னக்கி காலயில பொறந்தே...' என்றாள்.

அப்பாவோ 'கார்த்திய எங்கே... ஐப்பேசி மாதம்... மழயில்லாம குடிக்க ஒரு சொட்டுத் தண்ணி கூட இல்லாத கடும் பஞ்சத்தில் பிறந்தவன்... பஞ்சத்துக்குப் பிறந்தவன்' என்றா கடுப்பாய். 

அம்மாச்சியோ ' அட நீங்க என்ன சொல்லுறிய... நல்லாத்தான்...புள்ள பொறந்த தேதி கூடத் தெரியாம... கூறுகெட்ட கழுதைகளா...  எம்பேராண்டி ஆவணி மாதம் விடிகாலயில கோழி கூவுற நேரத்தில் பொறந்தான்... இதுகூடத் தெரியாம புள்ளப் பெத்துக்கிட்டாளுக... நாளும் கெழமயும் ஞாபகத்துல இல்லன்னு சொல்றதுக்கு எதுக்கு மீசங்கிறேன்...' என்று சொல்லி மாப்பிள்ளைக்கு ஒரு இக்கு வைத்தாள்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களே நஸ்க்கா காதைத் தொடுவதை வைத்து இந்த மாதம் பிறந்திருப்பான் என்று அவர்களாகவே ஒரு மாதத்தையும் நாளையும் பதிந்து வைத்திருந்தார்கள். அதுவே அவனின் பிறந்தநாள் என சான்றிதழுக்குப் போனாலும் அவனுக்கு அதில் நம்பிக்கையில்லை.

எது எப்படியோ... ஒருவேளை சோத்துக்கே வழியில்லாமல்  பல பேர் உயிரை மாய்த்துக்கொண்டிருந்த கடும் பஞ்சத்தில் பிறந்தவன் என்பதை மட்டும் உறுதியாகத் தெரிந்தது அவனுக்கு. 

'நீ தலையெடுக்க ஆரம்பிச்சதும் வீடு களையெடுத்துப் போச்சு, கிடுகிடுன்னு வளர்ந்தப்போ வீட்டுல இருந்த பானை சட்டியெல்லாம் கிடுகிடுத்துப் போச்சு... அன்னக்கிப் பிடிச்ச சனிதான் இன்னும் விடலை' என அடிக்கடி அப்பா சொல்ல ஆரம்பித்ததால்  வீடு என்பது அவனைப் பொறுத்தவரை இரவு கண்மூடிக் கிடக்கும் இடமாகிப் போனது. 

கால ஓட்டத்தில் காற்றின் திசையிலையே பயணித்த அவனுக்குப் பிறந்தாள்  என்ற ஒன்று எப்போது என்று தெரியாமலேயே போக அதைப் பற்றி யோசிப்பதையே விட்டுவிட்டான்.  அவன் பிறந்தநாள் யாருக்கும் தெரியாது என்றாலும் தன் மகள் பிறந்தநாளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சிரத்தையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவனிடம் உன் பிறந்தநாள் எப்போது என்று யாரும் கேட்டதில்லை! 

எல்லோருக்கும் வருடத்தில் ஒருநாள் பிறந்தநாள் என்றால் நஸ்க்காவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்ததாய் நினைத்துக் கொள்வான்.... கடந்த காலம் திரும்பி வருவதில்லை நிகழ்காலத்தைக் கொண்டாடுகிறான். ❤️


_பால்கரசு-

17/11/2021

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...