திங்கள், 10 ஜனவரி, 2022

பேச்சிலர் திரைப்பட விமர்சனம்

 பேச்சிலர் (Bachelor)  திரைப்பட விமர்சனம்

படத்தின் முதல் பாதியில் இன்றைய படித்த இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்படும் குடி, புகை, கூடாநட்பு போன்றவற்றைப் பார்வையாளர்களின் முகம் சுளிக்காதவாறு காட்டியிருப்பதுடன், இரண்டாம் பாதியில் படித்து நல்ல வேலையில் இருப்பவர்களை இந்தக் கார்ப்பரேட் கலாச்சாரம் எவ்வாறு சீரழிக்க்கிறது என்பதையும் விரிவாகக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

இடைவேளைக்குப் பிறகு கதை வேறொரு கோணத்தில் திசைமாறி நகர்கிறது. கதாநாயகன் ஜீ.வி.பிரகாஷ், படத்தின் கதாநாயகி திவ்யபாரதி இருவரும் ஒரே ஐடி நிறுவனத்தில்  வேலை செய்கிறார்கள், நண்பர்கள் மூலம் அரிமுகமாகி பின் ஒரே அறையில் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறைக்குள் இனைந்துகொள்கிறார்கள். அவர்களுக்குள் எந்தவொரு திட்டமிடுதலும் இல்லாமல் உடலளவில் ஒன்று சேர திவ்யபாரதி கர்ப்பம் ஆகிறாள்.

கருக்கலைப்பு செய்துவிடலாம் என நாயகியைக் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான் நாயகன . மருத்துவரின் பரிசோதனையின் போது கருவின் துடிப்பையும், அசைவையும் பார்த்தபின் நாயகிக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. கருவைக் கலைக்கும் முடிவிலிருந்து பின்வாங்கி கலைக்காமல் அக்குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என முடிவு செய்து, அதற்கு நாயகனையும் சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறாள்.

"இதன் பிறகுதான் திரைக்கதை சூடு பிடிக்கிறது"

திருமண வயதைக் கடந்த ஆண், பெண் இருவருக்கிடையில் நடந்த முறையற்ற விசயத்தை முறைப்படுத்த எந்தவொரு முயற்சியும் செய்யாமல், முறையற்ற கருத்தரிப்பு, குடும்ப கவுரவத்தைபாதிக்கும் என்று அவன் பின்வாங்கிக்கொள்ள, அவளின் நிலைமை கேள்விக்குறியாகிறது. 

எப்பொழுதும் ஒரு ஆண் அவன் செய்த தவறுகளிலிருந்து எளிதில் தப்பித்து விடுவதும், பெண் கூண்டுக்கிளியாகி விடுவதும் வேதனைக்குரிய விஷயம் என்றாலும் அதுதானே உலகின் எல்லா இடத்திலும் நடக்கிறது. 

பெண் அவள் தரப்பிலிருக்கும் நியாயத்தை  நிலைநாட்டவும், ஆண் அக்குற்றத்திலிருந்து தப்பிக்கவும் சட்டத்தை எவ்வாறு தங்களுக்குச் சாதகமாக வளைக்கிறார்கள் என்பதையும் மேலும் மேலும் எவ்வாறு தவறுகளை செய்கிறார்கள் என்பதையும் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

ஒரு ஆண் காதலிக்கும் முன்புவரை குடி,புகை என எல்லாத் தவறுகளையும் செய்யும் போது அவனுடைய மானம், குடும்ப கவுரவம் என எதைப் பற்றியும் யோசிப்பதில்லை, ஆனால் திருமணம் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறைக்குள் வரும்பொழுது மட்டும் குடும்பம், கவுரவம், மானம் மரியாதை என எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.  செய்த தவறுகளை மறைக்க, மேலும் மேலும் தவறு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவே ஆற்றாமையின் வெளிப்பாடாக மாறி பல குடும்பங்களில் வன்முறையில் முடிகிறது. 

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களுக்கு எந்தவொரு நீதிமன்றத்திலும் தீர்வு கிடைப்பதில்லை. நீதிமன்றத்தில் தீர்ப்பு வேண்டுமானால் கிடைக்கலாம், அப்படி கிடைக்கும் தீர்ப்புக்கூட விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பாக இருக்குமே ஒழிய இரு உறவுகளுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பைப் போக்கும் தீர்வாக இருக்காது. இதன் மூலம் சிலர் நேரடியாகவும், சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப்படுக்கிறார்கள் என்பதே உண்மை.

பல குடும்பங்கள் நூலாடை போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வைத் தேடாமல், சட்டத்தின் மூலம் தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்கிறார்கள் அது தங்களுக்கு எதிரான திசையில் பயணிக்க ஆரம்பித்தால் அதை வன்மமாக மாற்றி ஒருவரை ஒருவர் பழிதீத்துக்கொள்கிறார்கள். 

குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் மனக் கசப்பை போக்க, முதலில் மனம் விட்டுப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அது ஒன்றே சரியான தீர்வைக் கொடுக்கும். 


-பால்கரசு-

10/01/2022

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...