சனி, 8 ஜனவரி, 2022

நண்பர்கள் சந்திப்பு

 பாலாஜி அண்ணன் எப்பொழுது அபுதாபி வந்தாலும் எங்கள் மூவரையும் - நான், ராஜா, குமார் - சேர்த்தே அழைப்பதுண்டு. அதேபோல் அபுதாபி வருவதாகவும், மூன்று பேரையும் சந்திப்பதாகவும் நேற்றிரவே தகவல் வந்துவிட்டது.

கடந்த முறை அபுதாபி வந்திருந்த போது ஒருமணி நேரம் காக்க வைத்துவிட்டதால் இம்முறை  நானும் ராஜாவும் முன் கூட்டியே அவர் வரவிருக்கும் இடத்தை அடைந்து விட்டேம். 

பாலாஜி அண்ணன் தயாரிக்கப்போகும் திரைப்படத்திற்கான  திரைக்கதை விவாதத்திற்காக வருகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். அதனால்தான் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் நானும். ராஜாவும் அபுதாபி வந்துவிடுகிறோம் என்ற உத்தரவாதத்தை அவருக்கு கொடுத்தேன். ஆனால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்தது. குமார் ரூமைவிட்டு வெளியேற முடியாமல் ஹோம் கோரன்டைன்' ல இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. 

படு விமரிசையாக நடக்கவிருந்த கதை விவாதம் திரு. மோடியின் பஞ்சாப் பயணம் போல பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதால் விவாதத்தை இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்றுபாலாஜி அண்ணனும் முடிவு செய்துவிட்டார். 

'சரி அப்புறம் என்ன..? சாப்பாடுதான்'

காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரமாக இருந்ததால் நேரடியாக மதிய உணவிற்கே போய்விடலாம் என்று முடிவு செய்து, எந்த ஹோட்டல் போவது என்ற நீண்ட விவாதத்திற்குப் பிறகு... சைவம் என்றால் ஹோட்டல் சங்கீதா  போகலாம் என்றேன்.

பாலாஜி அண்ணனோ அசைவத்தின் மீது ஆர்வமாக இருந்தார். சரி... அப்பன்னா ரித்தாஜ் போகலாம் என்று முடிவு செய்து பாதித் தூரம் போகும்போது...... பிரியாணி சாப்பிடும் எண்ணம் மூவருக்கும் இல்லாததால் மீண்டும் விவாதம்... விவாதத்தின் முடிவில் நலாஸ் ஆப்பக்கடைக்குப் போகலாமா என்று ராஜாவிடம் கேட்டேன், அவரும் போகலாமே என்றார். 

ரித்தாஜ் போகாமல் ஒரு யூடேர்ன் எடுத்து நலாஸ் ஆப்பக்கடை முன்பாக காரை பார்க்கிங் செய்துவிட்டு மூவரும் கடைக்குள் புகுந்தோம் வரவேற்பு மிகவும் கனிவுடன் இருந்தது.

எந்தக் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனாலும் அது குற்றம், இது குற்றம், அவன் கேட்ட ஸ்டைலே சரியில்லையே என ஏதாவது ஒன்றின் பின்னே நின்று குதிக்கும் ராஜா, பில் பேட்டுப் போகும்போது கடுமையான விவாதத்துடன் தான் அந்தக் கடையை விட்டு வெளியே வருவார், வருவோம். ஆனால் இங்கே நிலைமை வேறுவிதமாக இருந்தது. 

"என்ன சாப்பிடுகிறீர்கள்..?" எனக்கேட்டான் சர்வர் தம்பி திரு. ஜாபர். 

எப்பவும் போல் வழக்கமான கிண்டல் கேலியுடன் தொடங்கிய உரையாடலுக்குப் பின் "அண்ணே! ஒரு மட்டன் கறி, சிக்கன் பாயாவுடன் ஆப்பம் தருகிறேன் சாப்பிடுங்கள் நல்லாயிருக்கும்"  என்று ஆட்டத்தைத் தொடங்கும் ஆர்வத்தில் சொன்னான் சர்வர் ஜாபர தம்பி. 

"சரி... கொண்டு வா...ஆனா நல்லா இருக்குமா..?" என்ற எங்களின் கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு "நீங்க சாப்பிட்டுப் பாருங்கள்...நல்லா இருக்கும்" என்றான் அதே கனிவுடன்.

அந்த தம்பி சாப்பாட்டுத் தட்டை டேபிள் மீது வைக்கும்போதே தெரிந்து விட்டது அந்த தம்பியிடம் பணிவுடன் சேர்ந்து பரிமாறும் நற்பண்பு இருப்பது.

ஆப்பம் என்றால் மலையாளி ஹோட்டல்களை பெருமையாக செல்வார்கள். நீங்கள் நலாஸ் ஆப்பக்கடையில் ஆப்பம் சாப்பிட்டுப் பாருங்கள்... பொன் நிறத்தில் நல்ல மொறு மொறுப்புடன் அவ்வளவு ருசியாக இருக்கிறது. ஆப்பக்கடை என்று பெயரளவில் மட்டுமில்லை ருசியிலும் சிறந்து விளங்குகிறது. 

ஆளுக்கு இரண்டு ஆப்பம் முடித்தபோது பாலாஜி அண்னன் தம்பி ஆளுக்கொரு  பொரட்டா சொல்லுவோமா எனக் கேட்க, நாங்களும் சரி என்றோம். 

"தம்பி பொரட்டா கேப்ப ரொட்டி மாதிரி நமக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் கடையில் கொடுப்பார்களே அதுமாதிரி இருக்கக்கூடாது... நம்ம மதுரைக்காரவுக மாதிரி அடிச்சு, எடுக்கும் போதே சும்மா பொழுபொழுன்னு கொட்ட்னும் அது மாதிரி கொண்டு வா" என்றார். 

எல்லாவற்றையும் கேட்ட அந்த தம்பி  ஜாபர் சுவையான பொரட்டாவுடன் புன்னகையையும் சேர்த்தே பரிமாறினார்.

"அண்ணே! இதோட போதும்"  என்ற எங்களைப் பார்த்து அந்த தம்பி ஜாபர் விடுவதாக இல்லை...

"சீரகச் சம்பா அரிசியில் செஞ்ச மட்டன் பிரியாணி இருக்கு...  நல்ல டேஸ்ட்டா இருக்கும், சாப்பிட்டுப் பாருங்கள்" என்றான்.

பாலாஜி அண்ணனோ "டேய் தம்பி உன்ன மாதிரி ஒரு ஆளத்தாண்டா தேடிக்கிட்டு இருக்கேன்... பேசாம என் கடைக்கு வந்திரு" அப்படின்னு சொல்ல, அவனும் "சரிண்ணே" என்றான்.

"அய்யோ இதுக்கு மேலே பிரியாணி வேறயா? போதும்" என்ற எங்களை அவன் விடுவதாக இல்லை.

"அண்ணே... ஒரே ஒரு பிரியாணி வாங்கி மூவரும் சாப்பிடுங்கள்" என்றான் . 

"சரி... தம்பி ஜாபர் ஆசைப்படுகிறான் கொண்டு வரட்டும்" என்றார் ராஜா. 

அவனும் கொண்டுவந்த பிரியாணியை மூன்று பேருக்கும் பகிர்ந்து பரிமாறிவிட்டு, நாங்க சாப்பிட்டுப் பார்த்ததும் "அண்ணே! பிரியாணி எப்படி இருக்கு..?"என்று கேட்க, "டே... நீ சத்தியமா மதுரைக்காரன்தான்டா" என்றார் பாலாஜி அண்ணன். 

மூவரும் பிரியாணியை சாப்பிட்டு முடித்தவுடன், "அண்ணே...! சேடாவுடன் லெமன் இல்லாட்டி சால்ட் போட்டுத் தருகிறேன்... சாப்பிடுங்கள் என்றான் அந்த தம்பி ஜாபர். 

"அய்யோ போதும்பா என்றாலும் அவன் எங்களை விடுவதாக இல்லை... அப்படினா லெமன் டீ சாப்பிடுங்கள், புதினாவும் சேர்த்து போட்டுச் சாப்பிடுங்கள், செரிமானத்திற்கு நல்லது என்றான்.

இருபத்தி ஐந்து வயதிருக்கும் அந்த தம்பி போன்ற வேலையாட்கள் இருந்தால் எந்த ஒரு நிறுவனம் தோல்வியடையாது என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.

டேஸ்ட்டான சாப்பாடுடன் அன்பாகப் பரிமாறும் அந்த ஜாபர் தம்பியை எங்கள் மூவராலும் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. 

பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சியானாலும் குமாரை விட்டுவிட்டு நாங்கள் தனியாக கலந்து கொண்டது கிடையாது. இன்று குமார் இல்லாதது எனக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.


கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...