புதன், 10 ஜூலை, 2024

அம்மாவின் நினைவுகள்

 அம்மாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று. 


அம்மாவைப் பற்றிய பல நினைவுகள் என் மண்டைக்குள் ஓடினாலும் அம்மா சொன்ன அந்த வார்த்தை மட்டும் இன்றும் அறுத்துப் போட்ட சேவலைப் போல் நெஞ்சுக்குள் கிடந்து துடிக்கிறது! 

அக்காவிடமிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தது! எப்பவுமே ம்..சொல்லு…! என்ன? எப்படி இருக்காய்?  என்று பேசும் அக்கா அன்று…

“தம்பி… நீ லீவ் போட்டுட்டு வர்றியா?”

“ஏன்’க்கா? என்னாச்சு?”

“அம்மாவிற்கு கேன்சர், மூன்றாம் கட்டத்தைத் தாண்டிவிட்டது! இனிமேல் ஒன்னும் செய்யமுடியாதுனும் டாக்டர் சொல்றாங்க, நீ உடனே புறப்பட்டு வா….! 

என்று சொல்லிவிட்டு அடக்கமுடியாத அழுகையுடன் போனைத் துண்டித்துவிட்டார். 

நானும் உடனே புறப்பட்டு வீட்டிற்குப் போய்விட்டேன். 

என் அம்மா, அக்கா, அப்பா, தங்கைகளுக்கு ஆறுதல் சொன்னாலும், என் பயம், கவலை அத்தனையையும் என் கண்கள் காட்டிக்கொடுத்து விட்டது! 

மறுநாள் காலையில் மதுரை அப்போலோ மருத்துவமனை சென்றுவிட்டோம். ஏற்கனவே பார்த்த மெடிக்கல் ரிபோர்ட் எல்லாவற்றையும் காண்பித்து டாக்டரிடம் பேசினேன். 

ஹாஸ்பிட்டல் நிர்வாகம் டாக்டரை நிர்பந்தப் படுத்தி உடனே அட்மிட் செய்யச் சொல்லுங்கள், அறுவைச் செய்தால் சரியாகும் என்று நிர்பந்தித்தார்கள், நானும் அஞ்சு லட்சத்தை கட்ட தயாரானேன்…! 

மறுநாள் காலையில் டாக்டர் ..(?) அறுவைச் சிகிச்சை தலைமை மருத்துவரை சந்தித்தேன்…! 

எந்த மாதிரியான அறுவைச் சிகிச்சை? புற்றுநோய் இருப்பது உணவுக் குழாயின் மேல் பகுதியில்! இரண்டு இஞ்ச் அளவிற்கு இருக்கிறது! அதுவும் மூன்றாம் கட்டத்தை தாண்டிவிட்டது! கீமோ தெராபி கொடுக்கனும், அம்மா இப்ப இருக்கும் உடல் நிலையில் கீமோ கொடுப்பதை அவர்களால் தாங்க முடியுமா? அப்படியே அறுவைச் சிகிச்சை செய்தால் வெற்றியின் சத்தியக் குறு எவ்வளவு? என பல சந்தேகங்களை டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்!  


மருத்துவமனையின் தலைமை நிர்வாகம் பணத்தை நேயாளிகளிடமிருந்து எப்படி பிடுங்குவது என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறது! 

அறுவைச் சிகிச்சையின் தலைமை மருத்துவர் என் தூரத்து உறவினரின் நண்பர் என்பதால் என்னையையும், என் அக்காவையும் தனிப்பட்ட முறையில் அழைத்து நோயின் தன்மையை விளக்கி, இனிமேல் ஒன்னும் செய்யமுடியாது வீட்டிற்கு கூட்டிட்டுப் போங்க! என் தாயாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன் அதனால் வேறு யார் சொல்வதையும் கேட்கவேண்டாம்…! என அறிவுரை வழங்கினார். 

மருத்துவரின் கட்டளையை ஏற்று, நானும் அக்காவும் அம்மாவை வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம் என்று முடிவெடுத்தோம்! இருந்தாலும் என் மனசு கேட்கவில்லை..! 

“டாக்டர்… என் மகன் வந்துவிட்டான் என்னைக் காப்பாற்றிவிடுவான் என்று என் அம்மா சொன்ன அந்த வார்த்தைக்கு நான் என்ன பதில் சொல்வது?” என கலங்கி நின்றேன்! 

என் நிலைமையை உணர்ந்த டாக்டர் இருக்கையை விட்டு எந்திருச்சு அம்மா இருக்கும் இடத்திற்கே வந்து…! 

“அம்மா உங்களுக்கு எல்லாம் சரியாகிவிட்டது, கொஞ்சம் தொண்டையில் புண்ணு இருக்கு, அது சரியாக இன்னும் ஒரு மாதம் ஆகும், காரமா எதுவும் சாப்பிட வேண்டாம், காஞ்சியைக் கரைத்து தண்ணியாக் குடிங்க, ஒன்னும் ஆகாது… அடுத்த மாதம் வந்து பாருங்க, உங்க மகன் இருக்கும்போது உங்களுக்கு எதுக்கு கவலை? என்று ஆறுதல் சொல்லிவிட்டு கூட்டிட்டுப் போங்க என்றார்! 

டாக்டர் என்னதான் ஆறுதல் சொல்லிவிட்டுப் போனாலும் என்னால் அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகர முடியவில்லை! 

“ எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த என் அம்மா..” ஏண்டா தயங்குற? அதான் டாக்டரே கப்பாற்ற முடியாது கூட்டிட்டுப் போங்கனு சொல்லிட்டார்ல பிறகு ஏன்… வா போவோம் போவோம் என்றார். என் அக்கா அம்மாவை கட்டிப் பிடித்து அழ மருத்துவமனை மொத்தமும் எங்களைப் பார்த்து நின்றது! பிறகு என் அம்மா அக்காவிற்கு ஆறுதல் சொல்லும் நிலைமையானது!

பிறகு அடையார் மருத்துவமனை, கர்நாடகா நாட்டு மருந்து என என்னென்னவோ முயற்சிகள் செய்தும் என் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை, என்றாலும் என் அம்மா சொன்ன அந்த வார்த்தை மட்டும் அறுத்துப் போட்ட சேவலைப் போல் நெஞ்சுக்குள் கிடந்து துடிக்குது. 

“என் மகன் வந்துவிட்டான் என்னைக் காப்பாற்றிவிடுவான்”

கருத்துகள் இல்லை:

கந்தர்வன் சிறு கதைகள்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத எழுத்தாளர் தான் கந்தர்வன். அவரின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அத்தனையும் தொழிலாளர்...