புதன், 29 ஏப்ரல், 2020

பேட் மேன் (PAD MAN) ஹிந்தி படம் திரைவிமர்சனம்



கொரனாவின் கோரப்பிடியிலிருந்து எப்படி கடப்பேன் இப்பொழுதை என்ற கேள்விகள் எனக்குள் முளைக்கையில், பொழுதுபோக்க திரைப்படம் பார்க்கத் தொடங்கினேன்....!
இன்று நான் பார்த்து ரசித்த ஹிந்தி திரைப்படம் பேட் மேன் (PAD MAN) ,

இது ஒரு வரலாற்று திரைப்படம். கோயம்புத்தூரிலிருந்து பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறிய திரு. அருணாச்சலம் முருகானந்தத்தின் உண்மைக் கதையின் தழுவல்.
அவர் கிராமப்புற இந்தியாவில் பெண்களுக்கு குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கும், பொருளாதார ரீதியாகத் திறமையான இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

இந்தியாவில் மாதவிடாய் ஆரோக்கியம், மற்றும் சுகாதாரத்தை புரட்சிகரமாக்குவதற்கான அருணாச்சலத்தின் கடினமான உழைப்பையும், அவர் பெண்கள் மீதும், இச்சமூகத்தின் மீதும் எவ்வாறு அக்கறையுள்ள மனிதராக திகழ்ந்தார் என்ற உண்மைக் கதையை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் திரு. பால்கி.
ஆக்ஷ்யக்குமார் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், எப்போதும் இச்சமுகத்தின் மீது அக்கறையுள்ள மனிதர். ஏற்கனவே கழிப்பறை விழிப்புணர்வுள்ள கதையில் நடித்தார். இம்முறை பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தொடர்பான கதையில் நடித்து மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர்கள்: ஆக்ஷ்யக்குமார், சோணம் கபூர், ராதிகா ஆப்தே, மற்றும் பாலர்.
திரைக்கதை
மெக்கானிக் லட்சுமி காந்த் சவுகான் (ஆக்ஷ்யக்குமார்) மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் கிராமத்தில் உள்ள மற்ற மனிதர்களைப் போல் இல்லாமல், சமூகத்தின்மீது அக்கறை கொண்ட முற்போக்கானவர், அவர் மனைவி (ராதிகா ஆப்தே ) மாதவிடாய் சமயத்தில் அழுக்குத் துணியைப் பயன்படுத்துகிறாள் என்று அறிந்ததும் அதிர்ச்சியடைகிறான்...! பின் ஒரு மருந்துக்கடைக்குப் போய் சானிட்டரி பேட் கேட்கிறார், அதை விற்கும் கடைகாரர் முதல் அங்கு சுற்றி நிற்கும் பெண்கள் , ஆண்கள் எல்லோரும் லக்ஷ்மியை ஏளனமாகப் பார்க்கிறார்கள்...!
சானிட்டரி பேடை வாங்கிக் கொண்டுபோய் தன் மனைவியிடம் கொடுத்து நீ இனிமேல் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் சுகாதாரமற்ற துணியைப் பயன்படுத்தவேண்டாம் என்று அன்புக்கட்டளையிட....அவளோ அதன் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்...!
அவள் மட்டுமில்லை அவன் சகோதரிகள், மற்றும் அவனைச் சுற்றியுள்ள பெண்களும் அழுக்குத் துணிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிகிறார்.
பெண்களில் மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான செயல், இது நமது சமுதாயத்தில் மிகப் பெரிய அளவில் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதைப்பற்றி பேசும்போது மக்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. இந்தியாவில் மாதவிடாய் காலத்தில், எண்பது சதவீதப் பெண்கள் அழுக்கு துணிகளையும், சாம்பல், இலைகளைப் பயன்படுத்துகிறார்கள். யாரும் அவர்களைத் தொடுவதில்லை.அவர்கள் வீடு அல்லது சமையலறைக்கு வெளியே உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர் ஒரு குற்றம் செய்ததைப் போல எல்லோரும் அவரைப் பார்க்கிறார்கள். வறுமை மற்றும் கல்வியறிவின்மையே இதற்கு மூல காரணம்.
சிறுவர்கள் ஐந்து நாள் சோதனை ஆட்டம் என்று கிண்டல் செய்வதை அறிந்த லக்ஷ்மி மிகுந்த மனவேதனை அடைகிறார்.....!
இரண்டு ரூபாய் மதிப்புள்ள சானிட்டரி பேடை, தனியார் நிறுவனர்கள் ஐம்பத்தி ஐந்து ரூபாய்க்கு விற்பதால், கிராமப்புற பெண்கள், ஏழை எளிய குடும்பத்துப் பெண்கள் ஆபத்தான சுதாகரம்ற துணியைப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்ததும், தானே குறைந்த விலையில் சானிட்டரி பேட் தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார்....!
இதைப்பற்றி வெளியில் பேசுவதற்குத் தடைசெய்யப்பட்ட சமூகத்தில் தனியொருவனாகவும், தான் தயாரித்த பேடை சோதனை செய்து பார்க்க ஆள் இல்லாமல் தடுமாறுவதும்...! இவரின் செயல்பாடுகளை கண்ட குடும்பம், மற்றும் சுற்று மாவட்டத்தினர் எல்லோரும் இவரை புறக்கணித்த போதும் எப்படி வெற்றிபெற்றார் என்பதை விவரிக்கிறது திரைக்கதை.
இயக்குநராக பாலகியின் பணி அருமை. மக்கள் பேச விரும்பாத ஒரு பொருளை, மக்கள் விரும்பும் ஒரு திரைப்படமாக்குவது ஒரு ஆபத்தான பணி, ஆனால் இயக்குநர் பால்கி அதைச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பார்வையாளர்களை மகிழ்விக்க, அவர் பொழுதுபோக்கு காட்சிகளை உருவாக்கி, தனது கருத்தை பார்வையாளர்களுக்கு முன்னால் வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.
நடிப்பைப் பொறுத்தவரை, இது அக்‌ஷய் குமாரின் வாழ்க்கையின் சிறந்த படமாக கருதலாம். அவர் லட்சுமிகாந்தை ஊக்கப்படுத்தியுள்ளார், படத்தின் ஆரம்பத்தில் அவர் அக்‌ஷய் குமார் என்பதை நாம் மறந்து விடுகிறோம். படம் முழுவதும், கதாபாத்திரம் உறுதியாக உள்ளது. தனக்குள் இருக்கும் நல்ல மனிதனை அவர் நடிப்பின் மூலம் பிரதிபலித்திருக்கிறார். படத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபையை உரையாற்றும் காட்சியில் அவரது நடிப்பு வியக்கவைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...