சனி, 2 மே, 2020

Article 15 இந்தி திரைப்பட விமர்சனம்

இன்று நான் பார்த்து ரசித்த இந்தி திரைப்படம் Article 15 (பார்வையாளர்களுக்கு படமில்லை, ஒரு பாடமாக அமைந்துள்ளது)
இத்திரைப்படம் இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைப் பேசுகிறது...!
1. சம உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை
4. சமய சார்பு உரிமை
5. கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
6. அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை
இந்திய அரசியலமைப்பில் மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பதைத் தடைசெய்கிறது என்ச் சட்டம் சொல்கிறது! ஆனாலும் கூட இன்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளில் சாதி மத மோதல்கள் எந்த ரகசியமின்றி வெளிப்படையாகவே நடந்துகொண்டிருக்கிறது.
படத்தில் ஒவ்வொரு வசனங்களும், சைகைகலும், அதிகார வர்க்கத்தின் அதிகாரக் குறியீடாக இருக்கும், அது எல்லாச் சலுகைகளும் பெற்று அனுபவிக்கும் கண்களுக்குப் புலப்படாது!
படத்தின் தொடக்கத்தில் ஒரு மனிதன் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஒரு சாக்கடைக்குளிக்குள்ளிருந்து அவன் உடல் முழுவதும் சாக்கடைக் கழிவுகள் வழிந்தோடிய நிலையில் வெளியே வாருகிறான்....! அந்தக் காட்சி அதிக விளக்கமின்றி அதன் கொடூரத்தின் அனைத்துப் பகுதிகளையும் அமைதியாக, நேர்மையாகப் பேசுகிறது....!
இப்படத்தைக் காணும் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு விசத்தையும் தெளிக்காமல், ஆர்டிக்கல் பதினைதிற்க்கும் மக்கள் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டைத் தெளிவாக எடுத்துறைத்த இயக்குனருக்கு
எனது பாராட்டுக்கள்.
திரைக்கதை இயக்கம் : அனுபவ சின்ஹா
நடிகர்கள்: ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பஹ்வா, குமுத மிஸ்ரா, முகமது சீஷன் அய்யூப், ஆஷிஷ் வர்மா, சயனி குப்தா, இஷா தல்வார், மற்றும் நாசர்.
கதைச்சுருக்கம்:
(ஆயுஷ்மான் குர்ரானா) அயன் ராசனாக நடிக்கிறார், புதிதாக ஐபிஎஸ் அதிகாரி உத்தரப்பிரதேசத்தின் அக்குள் உள்ள லல்கான் என்ற சிறிய நகரத்திற்கு அனுப்பப்பட்டார்....!
இந்தியாவின் சாதிய அடுக்குநிளைகளின் மேல்மட்டத்திலிருந்து முற்ப்போக்குச் சிந்தனையுடன் விழித்தெழுந்த நகர்ப்புற இளைஞர், ஆனால் அவருக்கு இந்தியாவின் சாதிக் கொடுமையின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பெரிதும் அறியப்படாதவர்.
பதவியேற்க கிராமத்திற்கு வரும்போதே அவரது காதலி அதிதியுடன் (இஷா தல்வார்) உரையாடிக்கொண்டே வருகிறார்....பாசி சமூகத்தின் கிராமத்திலிருந்து அவரால் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்க முடியாது என்பதை உணர்ந்ததில் அதிர்ச்சி ஏற்படுகிறது!
ஒரு கிராமத்திற்கு கூடுதல் கமிஷனராக பணியேற்று வருகிறான் அயன். அதே நாளில் வெறும் மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக காணாமல் போகிறார்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள்.
காவல்துறை மிகவும் மெத்தனமாய் அந்த வழக்கை கையாள்வதை அயன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காணாமல் போன பெண்களில் இருவர், ஊருக்கு நடுவே ஒரு மரத்தில் தூக்கில் மாட்டப்பட்டு இறந்து போயிருக்கிறார்கள்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர்கள் கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று சொல்கிறது....! ஆனால் அந்த அறிக்கையை மறைக்க காவல்துறையிலேயே ஒரு சதி நடக்கிறது....!
இந்த வழக்கின் வழியாக விரிகிறது அங்கு கெட்டியாக உறைந்திருக்கும் சாதிப் படிநிலைகளும், அது மக்களின் மேல் செலுத்தும் ஆதிக்கமும், வன்முறையும்.
இதை உணரும் அயன் அந்த வழக்கில் முழுமையாக ஈடுபட்டு, காணாமல் போன மூன்றாவது பெண்ணை கண்டுபிடிக்கவும் இறந்து போன இரண்டு பெண்களின் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தரவும் முற்படுகிறான்....!
சாதியின் அதிகாரநிலைகள் மூலம் அயனின் முயற்சிகளும், அதனால் ஏற்ப்படும் தடைகளும், அதற்கு அயனின் எதிர்வினைகளுமே படத்தின் திரைக்கதை.
அங்குள்ள சமூகக் கொடுமைகள், சாதாரண மனிதனான அவனுக்குள் என்ன மாற்றங்களை நிகழ்த்தும் என்பதை அருமையாக விளக்குகிறது இத்திரைப்படம்.
சாதிய ஆதிக்கத்தை பின்பற்றும் சமூகத்தின் வெவ்வேறு அடுக்கில் உள்ளவர்கள் தேவைக்கேற்ப கைகோர்த்துக் கொள்வதும், அதே தேவைக்கேற்ப ஒன்றுக்கொன்று முதுகில் குத்திக்கொல்வதையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார் படத்தின் இயக்குனர்.
படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் கூர்மையான ஆயுதம்போல் வன்முறையின்றி கருத்துக்களை விதைக்கிறது...! எல்லோரும் சமம் என்றால் ராஜாவாக யார் இருப்பார்?? என்ற கேள்விக்கு, ராஜாவாக ஏன் இருக்க வேண்டுமென்ற பதிலும் வசனத்தில் வெளிப்படுத்தப்படுவது ஜனநாயகம் என்றால் என்னவென்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
மொத்தத்தில் பார்க்கவேண்டிய படமில்லை, படிக்கவேண்டிய பாடம்.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...