ஞாயிறு, 10 மே, 2020

எதிர்சேவை புத்தக விமர்சனம்

எதிர்சேவை புத்தக விமர்சனம்
எழுத்தாளர்: பரிவை சே. குமார்
பதிப்பகம்: கலக்கல் ட்ரீம்ஸ்
மனதில் அழுத்திக்கொண்டிருக்கும் சுமைகளை இறக்கி வைக்க எப்போதும் ஒரு நெருங்கிய நட்பு வேண்டும், பரிவை சே. குமார் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் பழக்கம் என்றாலும், என் மனச்சுமையைத் தாங்கும் தோள்கள் கொண்ட நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டார்.
மண்ணின் மனம் மாறாத அவரின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது, ஆனாலும் அவரின் சிறுகதைகள் புத்தகமாக வெளிவரவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. என்னைப்போன்ற பல நண்பர்களின் உந்துதல் மூலம் இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
குமார் கதையைத் தேடி எங்கும் செல்லாமல் தன்னோடு வாழும் எளிய மக்களின் நடைமுறை வாழ்க்கையிலிருக்கும் ஏராளமான கதைகளில் சிலவற்றை எடுத்து எந்தவொரு வார்த்தை அலங்காரமும் இல்லாமல் கதையை தென் தமிழக மக்களின் வட்டார மொழிகளுடன் இயல்பாக எழுதியதின் மூலம் இச்சிறுகதைத் தொகுப்பில் பனிரெண்டு கதைகளும் உயிர்ப்போடு இருக்கிறது.
ஒவ்வொரு கதைகளையும் நான் வாசிக்கும்போது நான் கடந்துவந்த பாதையில் மீண்டும் பயணிப்பது போலவே இருந்தது. அதில் என்னைக் கவர்ந்த சில கதைகள்.
ஆணி வேர்.
பொதுவாக வெற்றிபெற்ற காதல் திருமணங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை...அதே நேரத்தில், தோல்வியடைந்த காதல் திருமணங்கள் காலம் கடந்தும் அடுத்த தலைமுறைவரை நகர்த்தப்படுகிறது, அந்த நகர்வின் ஒரு பகுதியைத்தான் ஆணி வேர் உணர்த்துகிறது, குடும்ப உறவுகளின் நம்பிக்கையிலிருந்து தன்னை அகற்றிக்கொண்ட அபிராமி காதல் திருமணம் செய்துகொண்டால், அபிராமி எதிர்பாராத ஒரு விபத்தில் தன்னிலை மறந்துபோக... ராம் அவனில் நினைவுகளைமீட்டெடுக்க அவளின் தாயிடம் அழைத்துச் செல்கிறான்.. அங்கே வெறுப்புகளைக் கலைத்து தாயும் மகளும் கட்டியணைத்துக் கொண்டது மனதை நெகிழச் செய்தது....ஆணி வேர் ஒருபோதும் சல்லிவேரை நிராகரிப்பதில்லை.
தீபாவளிக் கனவு
கதையில் சுந்தரி உறவுக்காரர் மூலம் தெரிந்த வீட்டிற்கு வீட்டு வேலைக்குப் போகிறாள்... வயதுப்பெண்ணை வீட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு, அக்கம் பக்கத்தில் நடக்கும் சம்பவங்களைக் கேட்டுப் பதறும் தாய்... மூன்று ஆண்டுகளுக்குப் பின் வீட்டில் எல்லா உறவுகளோடும் சேர்ந்து இத்தீபாவளியைக் கொண்டாட நினைக்கும் சுந்தரிக்கு சில தடங்கல்கள்...! ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணின் வலிகளை, நியாயமான ஆசைகளை, அவளுக்குள் இருக்கும் நினைவுகளை ஒவ்வொன்றாய் நினைக்கையில்...என் நினைவுகளின் அடுக்குகளில் மறைந்திருந்த சில பக்கங்களை அனிச்சையாக புரட்டத் தொடங்கியது... ! என் சிறுவயதில் ஒவ்வொரு தீபாவளிக்கும் வறுமை என் வீட்டிற்குள் அமைதியாக வெடிக்கும், வெளியில் நான் வெடிக்காத ஊமை வெடியாகிப் போவேன், இப்படி என் கடந்த கால தீபாவளி நாட்களையும், எனக்கும் என் தாத்தாவிற்குமான நினைவுகளைப் புதுப்பித்தது.
எதிர் சேவை
உறவுகளைச் சேர்ப்பதிலும், பிரிப்பதிலும் திருவிழாக்களுக்கு முக்கியப் பங்குண்டு,என் பால்ய காலத்தில் பரமக்குடியில் நடக்கும் சித்திரைத் திருவிழாவை நினைவுபடுத்தியது... ஆற்றில் அழகர் இறங்குவதற்கு முன் இரவு முழுவதும் பரமக்குடி ஆற்றில் சுற்றித்திரிவதும்...பின் மறுநாள் காலையில் அழகர் வேடமிட்டுத் துருத்தி நீர் தெளிப்பவர்கள், திரியெடுத்து ஆடுபவர்கள் தப்பு தவிலுமாக ஒரு கூட்டமே ஆடி வருவதைப் பார்த்துவிட்டு...இரண்டுநாள் கழித்து வீட்டுக்குப் போவேன்.... அங்கே என் அப்பா சாட்டைக் கம்பெடுத்து இடும்பன் வேடமிட்டு நிப்பார்...ஆற்றில் அழகர் இறங்கியதும் நான் வீட்டை விட்டு இறங்க வேண்டியதாகிவிடும்..! கடந்த இருபது ஆண்டுகளில் எந்தத் திருவிழாவையும் பார்க்காத எனக்கு இச் சிறுகதையை வாசிக்கையில் திருவிழா பார்த்த ஞாபகம்.
வீராப்பு
இச் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த நெருக்கமான சிறுகதை,
நிகழ் காலத்தை கரம் பிடித்து நடக்கத்தெரியாமல், கடந்த காலத்தில் தவழும் சாமிநாதன் போன்ற முதியவர்களைக் கடக்காமல் கிராமப்புறங்களில் யாரும் பயணித்திருக்க முடியாது.
சாமிநாதன், டீ குடிப்பது, அவர் குடித்துவிட்டு வைத்த டம்ளரில் ஈக்கள் சண்டைபோடுவது, ஒரு செம்பு தண்ணீர் எடுத்து முகம் கழுவிவிட்டு துண்டை உதறி முகம் துடைப்பது, போயிலை போட்டுவிட்டு எச்சியை புளிச்சென்றும் தரையில் துப்ப, அது மண்ணில் உருண்டு திரண்டது...அதன் மீது ஈக்கள் உட்கார்ந்து பறந்தது... இப்படி நம்முடனே பயணிக்கும் சில யதார்த்தவாதிகளைப் பற்றி நம் அறிந்துகொள்ள முற்படுவதில்லை..! இந்த எதார்த்த மனிதர்களின் வாழ்க்கை நம்மை வெகுவாக பிரதிபலிக்கின்றன, வழிநடத்துகின்றன...! இப்படி எதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை வட்டார வழக்கில் எழுதும் சில எழுத்தாளர்களில் பரிவை சே. குமாரும் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...