திங்கள், 3 ஜனவரி, 2022

பெண்ணச்சி நாவல் விமர்சனம்

 பெண்ணச்சி

திருமண வாழ்க்கை சிலருக்குச் சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்துவிடுவதைப் பார்க்கும் போது நம்மால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. 

கணவனுடன் வாழமறுத்த மனைவி... மனைவியைக் கைவிட்டு நீண்ட காலமாக விலகி இருக்கும் கணவன்... இவர்களுக்கிடையில் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை இன்று நடந்த ஒரு சம்பவமும், நான் வாசித்த நாவலும் என் மனதை நொறுங்கச் செய்தது.

அக்கா உங்க வீட்டில் ரேசன் அரிசி இருந்தால் கொடுங்கள், அம்மா உங்களிடம் கேட்க யோசிக்கிறார்கள், உங்கள் ரேஷன் கார்டில் நான் மாதம், மாதம் அரிசி வாங்கிக்கொள்கிறேன், அப்படியே அண்ணன் போட்ட பழைய பேண்ட், சட்டை எதாவது இருந்தால் கொடுங்கள், எனக்கு நாளைக்கு (யுனிவர்சிட்டியில் டீச்சர் போஸ்ட்) இண்டர்வியூ இருக்கு இப்படியே போனால் என்னைத் தேர்வு செய்ய மாட்டார்கள்...! எனக்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை, வேறு யாரிடமும் உதவி கேட்பதில் எனக்கு விருப்பமும் இல்லை, உங்களுக்கு மட்டும்தான் எங்கள் நிலைமை என்னவென்று தெரியும்...! என் அப்பா மட்டும் எங்களைக் கைவிடாமல் இருந்திருந்தால் என் நிலைமை இப்படி இருந்திருக்காது....! எனற இளைஞனின் வார்த்தைகளுக்கிடையில் வடிந்த கண்ணீர் ஒரு யுகத்தின் மொத்த வலி.

கனவன் மனைவிகளுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாட்டால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட குறுநாவலான 'பெண்ணச்சி' பேசியிருக்கிறது, அதேதான் மேலே சொல்லப்பட்ட இளைஞனின் நிலையும். அந்த நாவலின் மொழிபெயர்ப்பு வேண்டுமானால் படு மோசமாக இருந்திருக்கலாம், ஆனால் அந்நாவலில் பேசப்படும் மையக்கருத்து இன்றைய தலைமுறைக்கு அவசியமானதாகவும் தேவையாகவும் இருக்கிறது.

இந்நாவலில் ஒரு பெண் எழுத்தாளரின் வாழ்க்கைச் சம்பவங்களையே கதைக் கருவாக எடுத்துக்கொண்டு அக்கதை மாந்தர்களின் நிலைப்பாட்டை சரி என்றோ, தவறு என்றோ எந்த இடத்திலும் நியாயப்பாடுத்தாமல் நடுநிலையுடன் கதையை நகர்த்தியிருப்பதில் திரு. வெள்ளியோடன் வெற்றி கண்டுள்ளார்.

கதையின் நாயகி சுசிலா திருமணத்திற்குப் பிறகு குடும்பம் என்ற வட்டத்திற்குள் தன்னை இணைத்துக்கொண்டு காதலுடன் சுதந்திரக் கற்றை சுவாசிக்க விரும்புகிறாள், ஆனால் விதி வேறு விதமாக இருக்கிறது. அவள் நினைப்புக்கு மாறான வாழ்க்கை அவளை நரகத்தில் தள்ளியதாய் நினைத்து தனக்கான காதலால் தன் வாழ்வை சொர்க்கமாக்கிக் கொள்ளலாம் என்ற விடுதலை உணர்ச்சிகளோடு பெற்ற குழந்தை, கணவன் உறவினர்கள் என எல்லாரையும் தூக்கி எறிந்துவிட்டுச் சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களில் புகழ்சசியை உண்மையெனக் கருதி போலியான மனிதர்களின் காதல் என்னும் மாய வலைக்குள் மாட்டிக்கொண்டு தன்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையும் சேர்த்தே சிதைத்து விடுகிறாள்.

நவநாகரீக உலகில் மாறிவரும் குடும்பக் கலாச்சாரப் போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்குத் துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்சினை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற"ஈகோ' வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்துக்கு காரணமாக இருக்கிறது.

எது பெண்ணியம்..? 

எது ஆண் ஆதிக்கம்..? 

எது சுதந்திரம்..? என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடியாமல் குடும்பம் என்ற பந்தத்தை விட்டு பறக்க விரும்பி காதல் என்ற கூண்டுக்குள் சிக்கித் தன்வாழ்வை எவ்வாறு தொலைக்கிறாள் என்பதும், அதனால் உறவுகள், மற்றும் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கபப்டுகிறது என்பதை பெண்ணச்சி நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று நீதிமன்றங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்குகளில் அம்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவை கணவன் மனைவிக்கு இடையிலான விவாகரத்து மற்றும் கருத்து மோதல் தொடர்பானவை என்றும் அதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதும் அதிர்ச்சியைத் தருகிறது.


-பால்கரசு-

03/01/2022

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...